Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

19 October 2017

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது எப்படி தப்பிப்பது

மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மை
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..

19 November 2014

உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா சொல்லேன் பாப்போம் !

1. கட்சிக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...

2. கட்சியின் 'தல' பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...

3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...

4. கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...

5. கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு...

6. தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றி மிட்டாய் பொவுரும் உங்களுக்கு...

7. எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு...

8. சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு...

9. மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு...
10. கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு...

உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...

1. சமூக நலன்

2. உள்ளூர் வளர்ச்சி

3. வேலைவாய்ப்புகள்

4. விளையாட்டுப் பயிற்சிகள்

5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு

6. சமூக குற்றங்கள் ஒழிப்பு

7. கல்வி மேம்பாடு

8.  சுகாதார விழிப்புணர்வு

9. வட்டி

10. லஞ்சம் ஒழிப்பு

11. ரேஷன் முறைகேடுகள் தடுப்பு

12. முதியோர் நலன் 

13. இலவச மருத்துவ முகாம்

14. கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி

15. நலத்திட்ட உதவி

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?

உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !

16 November 2014

உணவே மருந்து…!

 
”மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு!”
- உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை உண்பவரின் உயிருக்கு எந்தத் துன்பமும் இல்லை என்கிறார் வள்ளுவர்.  
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்… நோய்கள்… துன்பங்கள்!
நாம்சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக  இருந்தால் மட்டும் போதுமா… உடலுக்கு  ஆரோக்கியமானதுதானா என்று யோசித்திருக்கிறோமா?
‘தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்’ என்று சொன்னாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள், ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும்.  மூலிகைத் தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால் மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.    
மூலிகைகளின் மருத்துவ உணவுகளை, சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன் செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார்.  
நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
பழங்களின் பலன்கள், முளைகட்டிய தானியப்பால் தயாரிக்கும் முறைகள், மூலிகை சூப் வகைகள் என இயற்கை உணவுகளைச் செய்து காட்டி, அதன் பலன்களையும் பட்டியலிடுகிறார், இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல்.
இயற்கையோடு இணைவோம்!  நோயின்றிக் காப்போம்!
”செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே, மசாலா வாசமும், சுள்ளென்ற காரமும்தான் நினைவில் வரும். ஆனால், செட்டிநாடு உணவுகளில் உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவுகள் நிறைய இருக்கின்றன” என்கிறார் கானாடுகாத்தானைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன். 
 
கேழ்வரகு இட்லி
செய்முறை: கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும்.  இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும்.  
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  

சோளம்  தினை தக்காளி தோசை
செய்முறை:  சோளம், தினை தலா ஒரு கப் எடுத்து, சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைமாவுடன் கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிடவும்.  இதனுடன் நான்கு தக்காளியைப் பொடியாக நறுக்கி தேவையான அளவு சேர்த்து, தோசையாக ஊற்றி வார்க்கவும்.  
மருத்துவப் பலன்கள்:
சோளம், தினையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.  ரத்தசோகையைத் தடுக்கும்.  

வல்லாரை தோசை
செய்முறை: ஒரு கப் அரிசி, தினை மற்றும் உளுந்து கால் கப் எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் வல்லாரைக் கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் ஊற்றி தோசையாக வார்க்கவும்.  
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.  

கம்பு, சோளம், தினை, வரகு பணியாரம்
செய்முறை: கம்பு, சோளம், தினை, வரகு இவற்றைச் சம அளவு எடுத்து நன்றாக ஊறவைத்து, தண்ணீர்விட்டு அரைக்கவும். இதை, பணியாரமாவுடன் கலந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்.  சிறிதளவு வெல்லம் சேர்த்துப் பணியாரக் குழியில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.  
மருத்துவப் பலன்கள்:
பீட்டாகரோட்டின் இதில் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
செய்முறை: மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் சம அளவு அரிசிமாவு, சாமை மாவு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, தோசை மாவுடன் கலக்கவும். இந்த மாவை எட்டு மணி நேரம் ஊற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் தோசையாக ஊற்றி எடுக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம்.  மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.  

சாமைப் பொங்கல்
செய்முறை: சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வாசனை வரும் வரை லேசாக வறுத்து, தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பொங்கலில் கொட்டிக் கலக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
சாமையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.  ரத்தசோகை வராமல் தடுக்கும்.

கேழ்வரகுக் கூழ்
செய்முறை: பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்கவைத்து அதில் மாவைக் கொட்டி கெட்டி ஆகாமல், கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்கவும். அதில் தயிரை ஊற்றிக் கூழாக்கி மாம்பருப்பு (மாவற்றல்) குழம்புடன் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்:
இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு கொஞ்சமும் இல்லை.  அதிக அளவு நீர்ச் சத்தும், நார்ச் சத்தும் இதில் இருக்கின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் வலிமையாகும்.

கவுனி அரிசி
செய்முறை: கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள், அதை நீராவியில் வேகவைத்து, அதனுடன் கருப்பட்டி வெல்லம், நெய், தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துக் கலக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
மூட்டு வலிக்கும், இடுப்பு வலிக்கும் நல்ல நிவாரணி.

மசாலா சீயம்
செய்முறை: பச்சரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை எலுமிச்சைப் பழ அளவில் உருட்டி, கடலை எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். காரச் சட்னியுடன் இதைச் சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்:
கடலை எண்ணெயில் பொரிப்பதால் இது உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. மேலும், உளுத்தம்பருப்பு சேர்ப்பதால், இளம் பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

கூழ் பாயசம்
செய்முறை: பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து வேகவைக்க வேண்டும். பிறகு வெல்லம் சேர்த்துக் கலக்கவும்.  இதனுடன் பால் அல்லது தேங்காய்ப்பால் ஊற்றிக் கலக்கவும்.  நெய்யில் முந்திரி, தேங்காய்த் துருவலை வறுத்துச் சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்புண்ணுக்கு இது நல்ல மருந்து. வயிற்று எரிச்சல், பொருமலைப் போக்கும். இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வெண்டைக்காய் மண்டி
செய்முறை: வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி வதக்கிக்கொள்ளவும்.  மொச்சையை ஊறவைத்து அதையும் விழுதுபோல் அரைத்துக்கொள்ளவும்.  கடாயில் சிறிது புளிக் கரைசலை ஊற்றி, அதில் வதக்கி வைத்துள்ளவற்றையும், விழுதையும் சேர்த்து சூடு செய்யவும்.  அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு, பருப்பு ஊறவைத்த அடித் தண்ணீரைச் சேர்க்கலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டையும் தூவி விடவும்.
மருத்துவப் பலன்கள்:
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்கும் இதன் சுவை நிச்சயமாகப் பிடிக்கும், ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.

சாமைக் கிச்சடி
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைக் தாளிக்கவும். நறுக்கிய காய்கறிக் கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும்.  இதில் அரை கப் சாமை சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்:
ஆண்மைக் குறையை நீக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்தது.

தினைப் பொங்கல்
செய்முறை: அரை கப் தினை, பச்சைப் பயறு கால் கப் இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கி, கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், மிளகு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்:  
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.  இதயத்தைப் பலப்படுத்த உதவும்.  மாதவிலக்கு பிரச்னையைச் சரிசெய்யும்.  
>>>>>
”உடல் நலம் பாதிக்கப்படும்போது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், எவற்றைச் சாப்பிடக் கூடாதோ… அவற்றைத் தவிர்த்தாலே, பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம் மெனக்கெடலும், சமையலறையில் கூடுதல் கரிசனமும் முறையான மருத்துவத்துடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே எந்த நோய்க் கூட்டத்திலிருந்தும் தப்பிக்கலாம்” என்கிற சித்த மருத்துவர் சிவராமன், நோய் வந்தால் உணவு விஷயத்தில் எவற்றைத் தவிர்க்கலாம்… எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து விளக்குகிறார்.  

வாதம்
புளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், காராமணி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் குளிர்பானங்கள், செரிமானத்துக்குச் சிரமம் தரும் மாவுப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.
வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, சீரகம், புதினா, பூண்டு, முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் வாதத்தைக் குறைக்கலாம்.  

பித்தம்
உணவில் காரத்தைக் குறைக்கவேண்டும். கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்த அளவு கோதுமை, கைக்குத்தல் அரிசி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, தனியா, சீரகம், எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி ஆகியவை பித்தத்தைக் குறைக்கும்.  

கபம்
பால், இனிப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.  
சுரைக்காய், வெண்பூசணி மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் இவற்றை மூன்று முதல் ஐந்து மாதங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கலாம்.
அப்படி முடியாதபட்சத்தில், மிளகு சேர்த்துச் சாப்பிடலாம்.
பழங்களில் கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை வேண்டாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் கபத்தைச் சேர்ப்பதால் தவிர்த்துவிடுவது நல்லது. மோர், மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை கபத்தைக் குறைக்கும்.

சிறுநீரக நோய்  
அதிக உப்பு, ஊறுகாய்கள், பொட்டாஷியம் நிறைந்த பழங்களான வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் தவிர்க்க வேண்டும்.  சோடியம் நிறைந்த பழங்களான பைனாப்பிள், பப்பாளி, கொய்யா மற்றும் காய்கறிகளில் பீட்ரூட், நூல்கோல், கேரட், பருப்புக் கீரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர்.  வாரம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை அவசியம் சேர்க்க வேண்டும்.

ஆஸ்துமா
வாயுவை உண்டாக்கும், செரிக்க நேரமாகும் உணவுகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள், இனிப்பு வகைகள் தவிர்க்கவேண்டும். மருந்து எடுத்துக்கொள்பவர்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.  
சிவப்பு அரிசி அவல், புழுங்கலரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், மிளகு ரசம், தூதுவளை ரசம், முருங்கைக்கீரைப் பொரியல், லவங்கப்பட்டைத் தேநீர், மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தும் எளிய உணவுகளைச் சாப்பிடலாம். பல் துலக்கியதும் 2, 3 கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது.  

மலச்சிக்கல்
பிஸ்கட், மைதாவில் செய்யப்பட்ட பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற கடின உணவுகளைத் தவிர்க்கவேண்டும். தினசரி மூன்றரை முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். நார்ச் சத்து அதிகம் உள்ள பிடிகருணை, வாழைத்தண்டுப் பச்சடி, பாசிப்பருப்பு சேர்த்த கீரை, வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத கோதுமை நல்லது.  
இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம், சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம்.  மாலை நேரத்தில் 10 முதல் 15 காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய்
சர்க்கரை, பட்டை தீட்டிய அரிசி, கோதுமை, கேரட், பீட்ரூட், பூமியில் விளையும் கிழங்குகள் குறிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்கவேண்டும்.     கொத்தவரங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, வெண்டை, கோவைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா மற்றும் துவர்ப்புள்ள பழங்கள் மிகவும் நல்லது.
புழுங்கல் அரிசி, தினை அரிசி, வரகரிசி, மாப்பிள்ளை சம்பா அவல் என  வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.

உயர் ரத்த அழுத்தம்
அதிக உப்பு, ஊறுகாய், மிளகாய்ப்பொடி, அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும்.  
வெந்தயம், சீரகம் மிகவும் நல்லது. மதிய வேளையில் ஐந்து முதல் பத்து பூண்டு பற்கள், தினசரி 50 கிராமுக்குக் குறையாமல் வெங்காயம் மற்றும் வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

அலுப்பு / சோர்வு
அதிகம் புளி சேர்த்த உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும்.  
இரவில் நல்ல செரிமானத்தைத் தரக்கூடிய, தூக்கத்துக்குத் தடையில்லாத எளிய உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நெல்லிக்காய், காய்ந்த திராட்சை, உலர் அத்தி தினசரி காலை வேளையில் சாப்பிடும்போது, அன்று முழுவதும் உற்சாகத்தைத் தரும்.  தினசரி 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

மூட்டுவலி
‘புளிர் துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம்.  அதிகப் புளிப்பு, காரக்குழம்பு, புளியோதரை, ப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் தவிர்க்கவும்.
தினசரி 40 நிமிட நடை, 15 நிமிட ஓய்வு,  30 நிமிடம் மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், 4, 5 யோகாசனங்கள், கால்சியம் நிறைந்த கீரை, ஒரு கப் மோர், ஒரு கப் பழத்துண்டுகள் இவற்றை தினசரி மேற்கொள்ளவேண்டும்.

ரத்தசோகை
எள், பனைவெல்லம், பச்சைப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, பெரிய நெல்லிக்காய், கீரைகளில் சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, பசலைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை… பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி தினமும் சேர்க்கவேண்டும்.     
 
காய்ச்சல்
கடின உணவுகள், வறுத்தல், பொரித்த உணவு வகைகள், கிழங்கு வகைகளைத் தவிர்க்கவேண்டும். கண்ணுக்கும் உடலுக்கும் அதிக அளவு ஓய்வு கொடுக்கவேண்டும்.  
காய்ச்சலுக்கு மருந்து, பட்டினிதான். இன்றைய காலத்தில் உடல்வலுவுக்கு பட்டினி இருப்பதும் நல்லது அல்ல. இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற எளிய உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.  சுக்கு, மிளகு, ஓமம் சேர்த்த கஷாயம் நல்லது. குழந்தைகளுக்கு சீரகக் கஷாயம் நல்லது.  

உடல் பருமன்
உடல் பருமனைக் குறைக்க, பட்டினி ஒரு தீர்வு அல்ல. சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அளவான சாப்பாடு, குறைந்த கலோரி நிறைந்த நார்ப் பொருட்கள். ஒரு கப் (150 கிராம்) சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து அதாவது, ஒரு பங்கு சாதத்துடன் குழம்பு, ரசம், மோர் என சாப்பிடவேண்டும்.  கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.
நம் உடலில் உள்ள ரத்த அமிலத்தன்மையை பழங்களும், தாவர உணவுகளும் சுலபத்தில் மாற்றி சீர்செய்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை சாப்பிடலாம். மூன்று வித வண்ணங்களில் உள்ள பழங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும்” என்று கூறும் இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல், பழங்கள், தானியங்கள், சூப் வகைகளின் சத்துக்களைப் பட்டியலிட்டார்.  

பழங்கள்
வாழைப்பழம்: தினமும் ஒன்று முதல் ஐந்து வரை சாப்பிடலாம். அதிக குளுகோஸ் இருக்கிறது.  மலச்சிக்கலைப் போக்கும். மூலம், வயிற்றுப்புண்களை மட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
மாம்பழம்: ஒரு வேளைக்கு 500 கிராம் வரை சாப்பிடலாம். மாலைக்கண் நோயை விரட்டும். மலச்சிக்கலை சரியாக்கும். தோலுக்கு மிகவும் நல்லது.  
பலாப்பழம்: தேனுடன் சேர்த்து ஒரு வேளை உணவாகச் சாப்பிடலாம். ஆர்வக்கோளாறில் அதிக சுளைகளைச் சாப்பிட்டு வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டாலும் இதன் கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
பப்பாளி: செரிமானத்தைத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது.  தோலில் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலை விரட்டும்.  வயிற்றுப் பூச்சிகளை விரட்டும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அகோரப் பசியைப் போக்கும்.  உடல் வனப்பு கூடும். குரல் வளம் பெருகும்.

தானியங்கள்
முளைவிட்ட தானியங்கள் மற்ற உணவுகளைப் போல் உடனடியாகச் செய்து சாப்பிடக்கூடியது அல்ல. எட்டு மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால் சோம்பலாகக் கருதி தவிர்த்துவிடுகிறோம்.
முளைவிட்ட தானியங்களை சுலபமான முறையில் தயாரிக்கலாம்.  ‘ஸ்ப்ரவுட்ஸ் மேக்கர்’ இருப்பதிலேயே சுலபமானது. கீழ் அடுக்குகளில் தானியமும் மேல் அடுக்கில் தண்ணீரும் ஊற்றிவைத்தால், தண்ணீர் சொட்டுச் சொட்டாக இறங்கும்.  எட்டு முதல் 12 மணி நேரத்தில் தானிய முளை வரும். நாம் கழுவிச் சாப்பிடலாம். தண்ணீரை அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றினால், சரியாக முளைக்காது.    
பொதுவாக ஊறிய தானியங்களில் சத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முளைத்து தோல் வெடிக்கும்போது அதில் மிக அதிக அளவு வைட்டமின்களும், தாது உப்புக்களும் சேரும். இதை மாவாக அரைத்தும் அருந்தலாம். முளை தானியமாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.  கடைகளில் விற்கும் பாக்கெட் முளைதானியங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், முளைகட்டிய தானியங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.  
முளைகட்டிய தானியங்கள் மிகுந்துவிட்டால், அதை உலர வைத்து அரைத்துக் கஞ்சி, அடை அல்லது சப்பாத்தியாகச் செய்து சாப்பிடலாம்.  

எள் முளைப்பால்
எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க வைத்துச் சாப்பிடலாம்.  வெள்ளை எள்ளை நன்றாகக் கழுவி, மண் இல்லாமல் அரித்து தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டித் தொங்கவிட வேண்டும். முளைத்த எள்ளை தண்ணீர்விட்டு அரைத்து, வெல்லம், பேரீட்சை சேர்த்துச் சாப்பிடலாம்.  
மருத்துவப் பலன்கள்:  உடல் பருக்க விரும்புபவர்கள், அடிக்கடி ஒரு பிடி முளைகட்டிய எள்ளை சாப்பிடலாம்.  

கொள்ளு முளைப்பால்
உடல் மெலிந்தவர்கள் எள்ளை நாடுவதுபோல, உடல் பருமனாக இருப்பவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுப் பாலையும் அருந்தலாம்.
கொள்ளுப் பயறை எட்டு முதல் 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து ஈரத் துணியால் கட்டிவிடுங்கள்.  முளைவிட்டதும், அரைத்து பால் எடுத்து அருந்தலாம்.  
மருத்துவப் பலன்கள்: குதிரைக்கு இணையான ஆற்றலைப் பெற, அடிக்கடி கொள்ளு முளைப்பால் சாப்பிட, உடல் பலம் பெறும். கொழுப்பு கரைந்துவிடும்.  

கறுப்பு உளுந்து முளைப்பால்
உளுந்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற ஈரத் துணியில் கட்டித் தொங்கவிடுங்கள்.  12 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும்.  இதை நீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம்.  
மருத்துவப் பலன்கள்: உடல் போஷாக்குடன் இருக்கும்.  குளிர்ச்சி மிகுந்த உணவு.  தாய்ப்பால் அதிகரிக்கும். உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாகிவிடுவார்கள்.  

கொண்டைக்கடலை முளைப்பால்
கொண்டைக்கடலை ஊறி, முளைவிட 24 மணி நேரம் ஆகும்.  12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி முளைவிட்டதும் அரைத்துப் பால் எடுத்துப் பருகலாம்.  
மருத்துவப் பலன்கள்: அதிக புரதச் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், கடின உழைப்பாளிகள்,  விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டுவந்தால், ஆற்றல் அதிகரிக்கும்.   பச்சைப்பயறு முளைப்பால்
எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாக அலசி, ஈரப் பருத்தித் துணியில் கட்டி எட்டு மணி நேரம் முளைக்கவிடலாம்.  இதனுடன் நீர் கலந்து மிக்ஸியில் அடிக்கவும்.  பச்சைப் பயறு பாலாகக் கிடைத்ததும், இதில் தேன், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம்.    
மருத்துவப் பலன்கள்: வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் நல்லது.  சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

கோதுமை முளைப்பால்
பஞ்சாப் கோதுமையைக் குறைந்தது எட்டு முதல் 12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி.  காற்றோட்டமான அறையில் தொங்கவிட வேண்டும். எட்டு மணிக்கு மேல் ஊறவைத்தால் புது நீர் மாற்ற வேண்டும்.  கோதுமை முளைவிட, 12 முதல் 18 மணி நேரம் ஆகும்.  முளைத்த கோதுமையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 150 மி.லி. தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், வெல்லம், மிளகுத்தூள் கலந்து பருகலாம்.  
மருத்துவப் பலன்கள்:  புற்றுநோய் வீரியத்தைக் குறைக்கும். ஊட்டச்சத்தானது. கொழுப்பைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு நல்லது.

கம்பு முளைப்பால்
8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரம் ஈரத்துணியில் அல்லது முளை தானியப் பாத்திரத்தில் வைத்தால், முளை கிளம்பி வரும்.  
அடிக்கடி ஒரு கைப்பிடி முதல் இரண்டு கைப்பிடி அளவுக்குச் சாப்பிடலாம். நீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் காய்ச்சி அருந்தலாம்.  
மருத்துவப் பலன்கள்:  உடலில் தெம்புகூடும்.  சக்தி அதிகரிக்கும். உடல் யானை பலம் பெறும். திடகாத்திரமாக இருக்கும்.
இதேபோல் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், பார்லி, சோயா, வெந்தயம், வேர்க்கடலையை வைத்துத் தயாரிக்கலாம்.

மூலிகை சூப் வகைகள்
  சா£ப்பிடுவதற்கு முன்பு சூப் சாப்பிடும் வழக்கம் இன்று அதிகரித்துள்ளது.  சூப் நல்ல பசியைத் தூண்டும். அதிலும் மூலிகை சூப் குடித்து வந்தால், நோயைக் கிட்ட நெருங்கவிடாது.  பொதுவாக சூப் மூலம் 50 கலோரி சக்தியும், கூடவே முளைதானியப்பால், பவுடர்கள் கலப்பதால் 100 கலோரி சக்தியையும் பெறலாம். காலை, மாலை டீ, காபிக்குப் பதிலாக இந்த வகை சூப் சாப்பிட்டுப் பாருங்கள்… உடலில் தெம்பும் ஆரோக்கியமும் கூடும்!

முடக்கத்தான் சூப்
50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம்.  
மருத்துவப் பலன்கள்: 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும். உடல் வலுப்பெறும்.  
வல்லாரை சூப்
50 கிராம் வல்லாரைக் கீரையைப் பொடியாக நறுக்கி, பசுமை மாறாமல் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கூடவே விரும்பிய காய்கறிகளைச் சேர்த்துக் கொதித்ததும், மசித்து வடிகட்டவும்.  இதில் சிறிது கோதுமை மாவு கலந்து தயாரிக்கலாம்.  
மருத்துவப் பலன்கள்:  நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல்புண், மாலைக்கண் நோய் சரியாகும்.  
பொன்னாங்கண்ணி சூப்
75 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி 250 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  இதனுடன் 50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதித்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் கேழ்வரகு மாவைக் கலந்து இறக்கவும்.  விருப்பப்பட்டால் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்க்கலாம்.  
மருத்துவப் பலன்கள்: உடலில் தேமல், சொறி சரியாகும். ரத்தசோகை விலகி, முகம் பொலிவு பெறும்.  குடல்புண், பித்தம் அகலும்.  பொன்னிறம் கூடும்.  கண்ணுக்கு மிகவும் நல்லது.    

துளசி சூப்
ஒரு கைப்பிடி துளசி அல்லது 10 கிராம் துளசிப் பொடியை நீர் சேர்த்து,  50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து மசிக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.

மருத்துவப் பலன்கள்:  கபத்தைப் போக்கும். கல்லீரல் வீக்கம், பல் வலி குறையும்.  மூச்சுப்பிடிப்பு, விஷக்காய்ச்சல், ஆஸ்துமா சரியாக்கும்.  

கொத்தமல்லி சூப்
ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.  இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தூள், சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள்.  

மருத்துவப் பலன்கள்: வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும்.  சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

முருங்கைக்கீரை சூப்
75 கிராம் காய்கறிக் கலவையை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். ஒரு கட்டு முருங்கை இலையை உதிர்த்து, கழுவி நீர்விட்டு வேகவிடவும். இதில் மசித்த காய்கறிக் கலவையைப் போட்டு மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது முளைதானியப்பாலைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நல்ல குணம் தெரியும். நரம்புத் தளர்ச்சி, பெண்களுக்கு அதிக உதிரப்போக்கும் சரியாகும். எலும்பு வலுவடையும்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைச் சரிதை

பிறப்பு முதல் நபித்துவம் வரை


நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே இவ்வாறு கூறியுள்ளார்கள். "நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமின் புதல்வர்களுள் இஸ்மாயீலைத் தேர்ந்தெடுத்தான் ; இஸ்மாயீலின் சந்ததிகளுள் கினானாவைத் தேர்ந்தெடுத்தான் ; கினானாவின் சந்ததிகளுள் குறைஷைத் தேர்ந்தெடுத்தான் ; குறைஷியருள் பனூ ஹாஷிமைத் தேர்ந்தெடுத்தான் ; பனூ ஹாஷிமுள் என்னைத் தேர்ந்தெடுத்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறப்பு 

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டு (ஆமுல் ஃபீல்) றபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை அதிகாலை மக்கா நகரில் பிறந்தார்கள். இது கி.பி.571 ஏப்ரல் 22ம் திகதி எனக் கணிக்கப்படுகிறது.

நபியவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ் ; தாயர் ஆமினா. இவர்கள் இருவரும் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர்.

இர்ஹாஸாத்

நபியவர்கள் பிறப்பதற்கு முன்னரும் பிறக்கும் பொழுதும் பொழுதும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. நபிமார்களுக்கு நபித்துவம் வழங்கப்பட முன்னர் நடைபெறும் அற்புதங்கள் 'இர்ஹாஸாத்' என்று அறபு மொழியில் குறிப்பிடப்படுகின்றன. அதன்படி நபியவர்களுக்கு காணப்பட்ட 'இர்ஹாஸாத்'கள் பின்வருமாறு:
1. ஆப்ரஹாவின் யானைப் படை அபாபீல் எனும் சிறிய பறவைகளால் முறியடிக்கப்பட்டமை. (அல் குர்-ஆன் 105 : 01-05)
2. வானத்தை நெருங்கும் ஜின்கள் விண்கற்களால் தாக்கப்பட்டமை. (அல் குர்-ஆன் 72 :08-09)
3. நபியவர்கள் பிறக்கும் போது அவர்களுடன் பிரகாசமான ஓர் ஓளி வெளிவந்தமை. (ஷுர்ஹுஸ் ஸுன்னா, முஸ்னத் அஹ்மத்)
4. அவர்கள் பிறந்த வேளை பாரசீக மன்னனின் அரண்மனையில் 14 அறைகள் இடிந்து விழுந்தமை. (தலாயிலுன்னுபுவ்வா)
5. ஈரானின் வடக்கே அமைந்துள்ள ஸாவா நகரத்திலிருந்த கோயில்கள் இடிந்தமை. (தலாயிலுன்னுபுவ்வா)
6. 'ஸாவா'வில் இருந்த வற்றாத வாவி வற்றியமை. (தலாயிலுன்னுபுவ்வா)
7. நபியவர்களுக்குப் பால் கொடுக்கத் தொடங்கியதும் ஹலீமா அவர்களின் மார்பில் பால் சுரந்தமை. (சீறா இப்னு ஹிஷாம்)

தந்தையின் மரணம்

யானை ஆண்டிற்கு ஓர் ஆண்டிற்கு முன்னரே நபியவர்களின் பெற்றோரான அப்துல்லாஹ் ஆமினா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. நபியவர்கள் பிறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் யத்ரிபில் மரணமடைந்தார். அவர் மரணமடையும் போது 5 ஒட்டகைகள், சில ஆடுகள், 'உம்மு அய்மன்' என்ற அபிஸீனிய அடிமைப் பெண் ஆகியவற்றையே அனந்தரமாக விட்டுச் சென்றார்.

குழந்தைப் பருவம்

நபியவர்கள் பிறந்தது முதல் சில நாட்கள் அவர்களின் தாயாரே அவர்களுக்குப் பாலூட்டி வந்தார்கள். பின்னர் கிராமத்துப் பெண்ணான ஹலீமதுஸ் ஸஃதியா அவர்கள் பாலூட்டி வளர்த்தார்கள்.

கிராமப் புறங்களில் தூய மொழி பேசப்படுவதாலும் தொற்று நோய்கள் குறைவாகையாலும் தூய காற்றுப் போன்ற இயற்கையான சுகாதார வசதிகள் இருந்தமையாலும் திடகாத்திரமான உடற்கட்டு ஏற்பட வாய்ப்புண்டாகையாலும் வளர்ப்பதற்காகக் குழந்தைகளைக் கிராமப்புறப் பெண்களிடம் கொடுப்பது அக்கால வழக்கமாகும். இதன்படியே நபியவர்களும் ஹலீமா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். நபியவர்களை ஹலீமா அவர்கள் கையேற்க முன்னரே அபூல்லஹபின் அடிமைப் பெண்ணான துவைபதுல் அஸ்லமியாவும் அவர்களுக்குப் பாலூட்டினார்கள்.

நபியவர்கள் பெற்றோரின் ஏக புதல்வராகையால் அவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆயினும் ஹலீமா, துவைபா ஆகிய இருவர் மூலமும் பால் குடிச் சகோதரர்கள் இருந்தனர்.

நபியவர்களை வளர்க்கக் கொண்டு வந்ததிலிருந்து ஹலீமா அவர்களின் வறிய வாழ்வு செழிப்புற்றது. எனவே, அவர்கள் தம் மக்களை விட நபியவர்கள் மீதே அதிக அன்பு செலுத்தினார்கள்.

குழந்தைக்கு இரண்டு வயதான போது அதைத் தாயாரிடம் சேர்ப்பதற்காக ஹலீமா அவர்கள் மக்காவிற்குக் கொண்டு வந்தார்கள். தம் உள்ளத்தில் உயரிய இடத்தைப் பிடித்துக் கொண்ட அக்குழந்தையைப் பிரிவது ஹலீமா அவர்களுக்குச் சொல்லொணாத் துயரத்தைக் ஏற்படுத்தினாலும் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கிருந்தது.

தன் சின்னஞ்சிறு மழலையைக் கண்டதனால் ஆமினா அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். எனினும், மக்காவில் அப்பொழுது தொற்று நோய் பரவியிருந்தமையால் குழந்தையை ஹலீமா அவர்களிடம் மீண்டும் கிராமத்துக்கே அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் ஹலீமா அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.

நபியவர்கள் தமது நாங்காம் வயதில் ஒரு முறை சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகை தந்து, அவர்களை நிலத்தில் அண்ணார்ந்து படுக்க வைத்து அவர்களது மார்பகத்தைப் பிளந்து இதயத்தை எடுத்து அதிலிருந்த 'அலகா' எனும் சதைத்துண்டை அகற்றி விட்டு அத்துண்டைச் சுட்டிக்காட்டி "இது ஷைத்தானின் பகுதி" என்று கூறினார்கள். தொடர்ந்து இதயத்தைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து 'ஸம் ஸம்' நீரினால் கழுவிய பின்னர் அதை மார்பில் பொருத்தி பழைய நிலையிலேயே வைத்தார்கள். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வளர்ப்புத் தாயிடம் ஓடி வந்து நபியவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறீனர். அவர்கள் எல்லோரும் அங்கு வந்து பார்த்த போது நபியவர்கள் நிறம் பேதலித்த நிலையில் இருந்தார்கள். இந்நிகழ்ச்சியை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.

 
நபியவர்களின் இதயம் அவர்களின் வாழ்நாளிலேயே இரண்டு முறை மலக்குகளினால் சுத்திகரிக்கப்பட்டிருப்பதை ஸுன்னாவில் இருந்து அறிய முடிகின்றது. மேற்கண்ட நிகழ்ச்சியினால் அதிர்ச்சியடைந்த ஹலீமா அவர்கள் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினார்கள். எனவே, குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைத்தார்கள்.

தாயாரின் மரணம்

மகனின் நாங்காம் வயதில் அவரைப் பொறுப்பேற்றுக் கொண்ட தாயார் ஆமினா அவர்கள், கணவனின் கப்றைத் தரிசிக்க எண்ணி தன் மகனோடும் அடிமைப் பெண்ணோடும் யத்ரிப் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மக்கா திரும்பும் வழியில் அப்வா எனுமிடத்தில் அவர்கள் மரண்மடைந்தார்கள். அப்போது நபியவர்களுக்கு வயது ஆறு.

தாயாரின் மரணத்தையடுத்து நபியவர்களை அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரோ தனது பேரப்பிள்ளையைக் கண்ணெனப் போற்றி வந்தார். தனக்கென விரிக்கப்படும் கம்பளத்தில்  தனது மக்கள் கூட உட்காருவதில்லையாயினும் தனது பேரப்பிள்ளை அதில் உட்காருவதை அவர் விரும்பினார். தனது முதுமையையும் இயலாமையையும் அறிந்த அப்துல்  முத்தலிப் தனக்குப் பின்னர் தன்னருமைப் பேரனை தனது மகனும் அப்துல்லாஹ்வின் சகோதரருமான அபூதாலிபைத் தெரிவு செய்திருந்தார். நபியவர்களின் 8ம் வயதில், அப்துல் முத்தலிப் மரணமடைய நபியவர்களை அபூதாலிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அபூதாலிப் நபியவர்களை எதுவித குறையுமின்றிக் கண்ணும் கருத்துமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். நபியவர்களின் ஒழுக்க சீலமும் அறிவுக்கூர்மையும் அருள் முகமும் அபூதாலிபை பீரிதும் கவர்ந்தன. தமது திருமணம் வரை நபியவர்கள் அபூதாலிபிடமே இருந்து வந்தார்கள்.

சிரியாப் பயணம்

அபூதாலிப் நபியவர்களின் 12ம் வயதில் அவர்களை அழைத்துக் கொண்டு வியாபாரத்துக்காக சிரியா சென்றார். வழியில் 'புஸ்றா' என்ற இடத்தை அடைந்த போது அங்கு ஓர் ஆசிரமத்தில் 'புஹைறா' என்ற பாதிரியார் வழமைக்கு மாறாக எழுந்து வந்து வர்த்தகக் குழுவை ஆதரித்து விருந்து வைத்து கௌரவித்தார். நபியவர்களிடம் தென்பட்ட நுபுவ்வத்தின் அடையாளங்களை இனங்கண்டு அவர்களின் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, 'இவரே உலகத் தலைவர் ; இவரை உலகோர்க்கு அருட்கொடையாக அல்லாஹ் நியமிப்பான்' என்று கூறினார். பின்னர் நபியவர்களை சிரியா செல்லவிடாது அவ்விடத்திலிருந்து திருப்பி மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

இச்சந்திப்பின் போது 'புஹைறா' அவர்கள் அல்குர்-ஆன் முழுவதையும் நபியவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக கீழைத்தேச ஆய்வாளர்கள் சிலர் கூறுவர். இவ்வரிசையில் 'அல்குர்-ஆனின் ஆசிரியன்' என்ற பெயரில் நூல் ஒன்று எழுதப்பட்டு இக்கூற்றை நிறுவ பகீதரப் பிரயத்தனம் செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

புஹைறா ஓர் அஜமி. அவரது கல்வி நிலை பற்றித் தெரியவில்லை. நபியவர்களோ சிறுவர். சந்திப்பு இடம்பெற்ற நேரமோ மிகக் கொஞ்சம். பயணக் களைப்பு வேறு. கல்வியறிவு அறவே அற்ற ஒருவர் தமது 12ம் வயதில் ஒரு சில நேரத்தில் கற்ற அனைத்தையும் நாற்பது வயது வரை இதயத்தில் அடக்கி வைத்திருந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நெறிப்படுத்தி வழங்குவது இயலாத காரியமல்லவா, அத்துடன் நம்பிக்கைக்குரியவர்,  உண்மையாளர் என்றெல்லாம் போற்றிய குறைஷியர்  விட்டுவைப்பரோ, எனவே இக்கூற்று எவ்வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.

ஹர்புல் புஜ்ஜார்

  ஹறம் புண்ணிய பூமிக்குள் அத்துமீறிப் பிரவேசித்தோருக்கு எதிராகப் போர் ஒன்று நடைபெற்றது. இது வரலாற்றில் ஹர்புல் புஜ்ஜார் (தீயோரின் போர்) என அழைக்கப்படுகிறது. இப்போரினால் ஹறமின் கண்ணியமும் சங்கையான நாங்கு மாதங்களில் கண்ணியமும் சிதைக்கப்பட்டதனால் அது இப்பெயர் பெற்றது. இப்போரின் போது நபியவர்களுக்கு வயது 15. இதில் நபியவர்கள் குறைஷியரோர் உதவியாளராகக் கலந்து கொண்டார்களே தவிர ஆயுதமேந்திப் போர் செய்யவில்லை.

ஹில்புல் புழூல்

ஹர்புல் புஜ்ஜாரினால் ஏற்பட்ட பயங்கர விளைவுகள் காரணமாக இதன் பிறகும் இவ்வாறான ஆனர்த்தங்கள் நடைபெறாவண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டுமென குறைஷித் தலைவர்கள் தீர்மானித்தனர். இதற்காகத் தங்கள் மத்தியில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தமே ஹில்புல் புழூல் (கனவாங்கள் ஒப்பந்தம்) என அழைக்கப்படுகிறது.

அநீதி இழைக்கப்பட்டோரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்களின் நலங்களைப் பாதுகாக்கவுமே இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுதேசிகளுக்கு மட்டுமன்றி விதேசிகளுக்கும் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இவ்வொப்பந்தத்தில் நபியவர்களும் பங்குபற்றினார்கள். இச்செயற்பாடு நபியவர்களுக்கிருந்த சமூகப் பற்று, இன ஐக்கியம், அடிப்படை மனித உரிமைகள் பேணப்படுவதில் ஆர்வம் போன்றவட்க்ரைப் பறைசாற்றி நிற்கின்றது.

சீவனோபாயம்

சிறு வயதில் நபியவர்கள் பெற்றோரை இழந்து அநாதையானாலும் அவர்கள் இரந்து வாழப் பழகவில்லை. தமது சிறிய வயதில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார்கள். ஹலீமா அவர்களிடம் இருக்கும் போதும் பின்னர் மக்காவிலும் ஆடு மேய்த்ததாக அறிய முடிகின்றது.

ஒரு முறை நபியவர்கள் "அல்லாஹ் எவரையும்  (ஆரம்பத்தில்) ஆடு மேய்க்கும் பயிற்சியை கொடுக்காது நபியாக அனுப்பவில்லை ; என்று கூறிய போது ஸஹாபாக்கள் தாங்களுமா என வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ஆம், நான் மக்காவாசிகளுக்கு 'கீறாத்' (சிறு தொகைப் பணம்)துக்காக ஆடு மேய்த்துள்ளேன் என கூறினார்கள்". (ஸஹீஹுல் புஹாரி)

நபிமார்களுக்கு அல்லாஹ் ஏன் ஆடு மேய்க்கும் பயிற்சியைக் கொடுத்தான், ஆட்டு மந்தைகளுக்கு இடையன் செய்யும் பணியானது ஒரு கலீபா பிரசைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு ஒப்பானதே.

சிறு வயதில் ஆடு மேய்த்த நபியவர்கள் தமது இளமைப் பருவத்தில் குறைஷியரின் பரம்பரைத் தொழிலான வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வர்த்தகப் பயணங்களில் இரண்டு குறிப்பிடத்தக்கவை. ஒன்று அவர்கள் தமது 12ம் வயதில் சிரியா சென்று இடையில் திரும்பியமை. மற்றொன்று 25ம் வயதில் சிரியா சென்றமை.

இம்முறை நபியவர்கள் அக்காலத்தில் மக்காவில் பெரும் வாணிபம் நடத்தி வந்த பெண்மணி கதீஜா அவர்களின் வர்த்தகப் பங்காளராக சிரியா சென்றார்கள். கதீஜா அவர்களின் சார்பில் அவர்களது அடிமை மைசறா என்பவர் நபியவர்களுடன் சென்றார்.

திருமணம்

கதீஜா அவர்கள் குறைஷிக் குலத்தவர் ; பண்பாளர் ; ஒழுக்கமுடையவர் ; பெருந்தன்மையும் தாராள மனமும் படைத்தவர் ; சீமாட்டி ; குணவதி ; அழகி ; விதவை. கணவனை இழந்த பின்னர் அவர்களுடன் இல்லற வாழ்க்கை நடத்த உயர் குலப் பிரபுக்களெல்லாம் போட்டியிட்டும் அவர்கள் அதைப் புறக்கணித்து வந்தார்கள்.

அதேவேளை தனது நற்குண நல்லொழுக்கத்தாலும் நாணய நம்பிக்கையாலும் 'அல் அமீன்' (நம்பிக்கைக்குரியவர்), 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்று பாராட்டப்பெற்ற நபியவர்களின் பண்புகள் கதீஜா அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. இவ்வாறான ஒருவரே தனக்குப் பொருத்தமான கணவர் என்று கதீஜா அவர்கள் தீர்மானித்தார்கள். அன்றைய வழக்கப்படி திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நபியவர்களின் தந்தையின் உடன்பிறப்புக்களான அபூதாலிப் மற்றும் பிற சகோதரர்களின் நல்லாசியுடன் திருமணம் நடந்தேறியது.

திருமணத்தின் போது நபியவர்களின் வயது 25, கதீஜா அவர்களின் வயதோ 40. திருமணத்தின் பின்னர் நபியவர்கள் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. கதீஜா அவர்கள் தனது சொத்துக்களை நபியவர்களின் விருப்பத்திற்குச் செலவு செய்ய அனுமதி வழங்கினார்கள்.

நபியவர்களும் கதீஜா அவர்களும் சுமார் 25 வருடங்கள் இல்லறம் நடத்தினார்கள். இவர்களுக்கு  ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் ஸைனப், றுகையா, உம்முகுல்ஸூம், பாத்திமா என்று நாங்கு பெண் பிள்ளைகளும் அல்காசிம், அப்துல்லாஹ் என்று இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இவர்களைத் தவிர நபியவர்களுக்கு ஈகிப்தியப் பெண்ணான மாரியதுல் கிப்தியா அவர்கள் மூலம் இப்றாஹீம் என்ற குழந்தையும் பிறந்தது.

கஃபா புனர்நிர்மாணம்

நபியவர்களின் முப்பத்தைந்தாம் வயதில் நடைபெற்றதொரு நிகழ்ச்சி அவர்களின் மதி நுட்பத்தையும் சமாதான வேட்கையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அப்பொழுது குறைச்ஷியர் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டினர். கட்டட வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஹஜறுல் அஸ்வத் கல்லை கஃபாவின் சுவரில் பதிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அக்கல்லைத் தூக்கி உரிய இடத்தில் வைப்பவர் யார், என்ற  கேள்வி எழுந்தது. எல்லா கபீலாக்களும் அவ்வுரிமை தமக்கே வேண்டுமென வாதாடின. இதனால் சில நாட்கள் வேலை ஸ்தம்பித்துவிட்டது. யுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் கூடத் தென்பட்டன..  ஈற்றில் மறுநாள் அதிகாலி ம்ஸ்ஜிதுல் ஹறாமில் முதன் முதல் நுழைபவருக்கே அவ்வுரிமை என்று தீர்மானிக்கப்பட்டது. மறுநாள் வைகறையில் முதன் முதலில் மஸ்ஜிதில் நுழையும் பேற்றை நபியவர்கள் பெற்றார்கள். அதனால் ஹஜருல் அஸ்வத் கல்லை கஃபாவில் வைக்கும் பேற்றை நபியவர்கள் பெற்றார்கள்.

நபியவர்கள் தமது மேலங்கியை விரித்து அதன் மீது ஹஜருல் அஸ்வத் கல்லைத் தூக்கி வைத்து எல்லா கபீலாக்களின் ஷெய்குகளையும் வைத்து அத்துணியின் நாலா பக்கங்களிலும் பிடித்து உயர்த்துமாறு அவர்களிடம் கூறினர். அவர்கள் அவ்வாறு உயர்த்தவே நபியவர்கள் அதை உரிய இடத்தில் எடுத்து பதித்தார்.

நபியவர்களின் சமயோசிதமும் புத்திசாதுரியமுமான இச்ச்செய்கை மூலம் அரேபியருக்கிடையில் ஏற்படவிருந்த போர் தடுக்கப்பட்டது. இது நபியவர்களின் விவேகத்துக்கும் மதிநுட்பத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


நபித்துவத்திலிருந்து ஹிஜ்ரத் வரை

நபியவர்கள் 40வது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இக்காலை அவர்களது உள்ளம் அதிகமதிகமாகச் சிந்திக்க  ஆரம்பித்தது.  தன்னைப் பற்றியும் தன்னைப் படைத்தவனைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினார்கள். தான் சார்ந்த சமூகத்தின் நிலைதன்னை எண்ணிப்பார்த்தார்கள். கொள்ளை, களவு, ம்மது, விபசாரம், குடி சூது போன்ற அ நியாயங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது சமூகத்தை எவ்வாறு சீர்திருத்தம் செய்யலாம் என்றெல்லாம் எண்ணிப்பார்த்துக் கவலைப் பட்டார்கள்.

எனவே நபியவர்கள் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்பினார்கள். இதற்காக மக்காவில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் ஹிறாக் குகையைத் தெரிவு செய்தார்கள். அங்கு சென்று தனித்திருந்தார்கள். பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று  அங்கு தியானத்தில் ஆழ்ந்தார்கள். 'றமழான்' மாததில் மிக அதிகமான காலத்தை அவர்கள் ஹிராவில் கழித்தார்கள். இவ்வாறு நபியவர்கள் சுமார் மூன்று அல்லது நாங்கு ஆண்டுகளை தியானத்தில் கழித்தார்கள்.

இப்பொழுது நபியவர்களுக்கு நாற்பதாண்டுகள் பூரணமாவதற்கு ஆறு மாதங்கள் இருந்தன. அவர்களுக்குத் தெளிவான கனவுகள் தென்பட ஆரம்பித்தன. ஆறு மாதங்கள் வரை கனவு தென்பட்டது. நாற்பது வயது பூர்த்தியடைந்த பின் ஓரிரவு ஹிறா குகையில் வைத்து அல் குர்-ஆன் அருளப்பட்டது. இவ்விரவு பற்றி அல்குர்-ஆன்,
"நிச்சயமாக நாம் அதனைப் பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம்". (44:03)
"நிச்சயமாக நாம் அதை (குர்-ஆனை)க் கண்ணியமிக்க (லைலதுல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்". (97:01)
என்று கூறுகின்றது.

முஸ்னத் அஹ்மதில் "அல் குர்-ஆனை அல்லாஹ் றமழான் மாதம் 24ம் நாள் இறக்கி வைத்தான்" என்று ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபியவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு பற்றி விசாரிக்கப்பட்ட பொழுது "அன்றைய தினத்திலேயே நான் பிறந்தேன். அதிலேயே என் மீது வஹீ அருளப்பட்டது" என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

அல்குர்ஆன் அருளப்படுவதோடு நபி (ஸல்) அவர்களின் நபித்துவப் பணியும் ஆரம்பமாகியது. நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்த இச் சம்பவம் பற்றி இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரி யில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

அன்னை ஆய்ஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ' தூக்கத்தின் போது ஏற்பட்ட நல்ல கனவுகள் மூலம்தான் நபியவர்களுக்கு வஹீ வருவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. இக்காலை அவர்கல் கண்ட கனவுகள் குழப்பமற்ற தெளிவான கனவுகளாகவும் அவை அச்சொட்டாக நிஜ வாழ்க்கையில் நடைபெறுபவையாகவும் இருந்தன. பின்னர் அவர்களுக்குத் தனிமை வெகுவாக இனிக்க ஆரம்பித்தது. எனவே ஹிராக் குகையில் பல இரவுகள் தனித்திருக்க ஆரம்பித்தார்கள். இதன்போது தனக்குத் தேவையான உணவுகளையும் எடுத்துக்கொண்டே செல்வார்கள். உணவு தீர்ந்துவிடும்போது மனைவி கதீஜாவிடம் வந்து உணவெடுத்துக் கொண்டு செல்வார்கள்.இவ்வாறே ஹிராக் குகையில் நபியவர்களுக்கு உண்மை உதயமாகும் வரை தியானத்தில் ஈடுபாடுகாட்டி வந்தார்கள்.

ஒரு நாளிரவு நபியவர்களிடம் ஒரு மலக்கு வந்து "ஓதுவீராக!" என்று கூறினார். அதற்கு நபியவர்கள் தன்னால் ஓத முடியாது எனப் பதிலளித்தார்கள். தொடர்ந்து நபியவர்களே கூறுகின்றார்கள்; நான் திக்குமுக்காடும் வரை அவர் என்னை இறுகக் கட்டியணைத்துப் பின்னர் என்னை விட்டுவிட்டு இரண்டாம் முறை என்னை நோக்கி ஓதுவீராக என்றார். அப்போதும் நான் எனக்கு ஓதத் தெரியாது என்றே பதிலளித்தேன். அந்த மலக்கு மீண்டும் என்னை முன்பு போலவே இறுகத் தழுவினார். இவ்வாறு மும்முறை நடைபெற்றது.  பின்னர் அந்த மலக்கு ;

அனைத்தையும் படைத்த உமது ரப்பின் பெயரால்  ஓதுவீராக, அவந்தான் மனிதனை "அலகா" விலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக் கொடுத்தான்."   என்ற அல்குர் ஆனின் 96ம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக்காட்டினார்.

"எதிர்பாராத இந்நிகழ்ச்சியினால் அதிர்ச்சியுற்ற நபியவர்கள் உள்ள(மும் உடலு)ம் நடுநடுங்கத் திரும்பி (வீடு) வந்து, "என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்களெனக் கூறியவாறு கதீஜாவிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறித் தனக்கு ஏதோ நடந்திருப்பதாகவும் பயமாக இருப்பதாகவும் கூறினார்கள் உடனே கதீஜா (ரழி), 'பயப்படாதீர்கள்  அல்லாஹ் உங்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் உறவினரைச் சேர்ந்து நடக்கின்றீர்கள்; சிரமங்களைச் சகித்துப் பொறுமை செய்கிறீர்கள்; வறியோருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றீர்கள்; விருந்தினரைக் கண்ணியப்படுத்துகின்றீர்கள்; அ நீதிக்கு எதிராகப் போராடுகின்றீர்கள்" என்று ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் கதீஜா தனது சிறிய தந்தையின் மகனான வறகத் இப்னு நவ்பல் என்பவரிடம் நபியவர்களை அழைத்துச் சென்றார்கள். ஒரு கிறிஸ்தவராகவும் வயோதிபராகவும்  இருந்த வறகா முன்னைய வேதங்களையும் கற்றறிந்திருந்த ஒருவராக மட்டுமன்றி ஹீப்ரு மொழியிலும் புலமை பெற்றிருந்தார். பார்வையை அவர் இழந்திருந்த நிலையிலும்  இஞ்சீலை ஹீப்ரு மொழியில் எழுதி வந்தார்.

இவரிடம் நபியவர்கள் தமக்கு நடந்தவற்றை ஒன்றும் விடாது கூறினார்கள். சம்பவத்தைக் கேட்டறிந்த வறகா நபியவர்களிடம் "உம்மிடம் வந்தவர் அன்னாமூஸ் ஜிப்ரீல் (அலை) என்ற மலக்காவார். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடமும் இம்மலக்கையே அனுப்பினான். அதோ, உமது சமூகத்தவர் உம்மை வேளியேற்றும் போது நான் உம்முடன் இருக்க வேண்டுமே ; வாலிபனாக இருக்க வேண்டுமே." என்று அங்கலாய்த்துக் கொண்டார். அப்பொழுது நபியவர்கள் "என்னை அவர்கள் வெளியேற்றுவார்களா?" என்று ஏக்கத்துடன் வினவ, அவர் "ஆம். உமக்கு வழங்கப்பட்ட தீன் (மார்க்கம்) போன்று முன்னர் வழங்கப்பட்ட போதெல்லாம் நிச்சயம் எதிர்ப்பு வந்தது. நான் அவ்வேளை, உங்களுடன் வாழ நேர்ந்தால் உங்களுக்கு முழுமையாக உதவுவேன்". என்று கூறி முடித்தார்.

அல் குர்-ஆனின் முதல் போதனை, நபியவர்களுக்குக் கிடைத்த முதல் வஹீ ஓதுதல், படித்தல், கற்றல், வாசித்தல் ஆகிய பொருள் கொண்டதாக அமைந்திருப்பதன் மூலம் கல்விக்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

மேலும், இங்கு அல்லாஹ்வின் றுபூபிய்யத் எனும் தெய்வீகத் தன்மையை ஏற்று மனிதனின் உபூபிய்யத் எனும் அடிமைத்துவத்தை வெளிப்படுத்தி வாழ்வதற்குக் கல்வி அவசியம் என்பதும் பெறப்படுகின்றது.

அல் குர்-ஆனின் ஆரம்ப வசனங்கள் இறக்கப்பட்ட பின்னர் சில காலம் வஹீ இறங்கவில்லை. இவ்வாறு வஹீ இறங்காதது சிறிது காலமேயாயினும் இக்காலத்தில் நபியவர்கள் மிகுந்த மன வேதனையடைந்து காணப்பட்டார்கள். தன்னையே அழித்துவிட எண்ணும் அளவுக்கு அவர்களின் கவலை அதிகரித்தது. பல முறை வானின் பக்கம் தலையை உயர்த்தி ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏங்குவார்கள். அவ்வேளைகளிலெல்லாம் ஜிப்றீல் (அலை) அவர்கள் காட்சி கொடுத்து "முஹம்மத், நீ ஓர் நபி" ஈன்று கூறி நபியவர்கள் நபி என்பதை உறுதிப்படுத்தித் தேற்றுவார்கள். இவ்வாறு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி நபியவர்களுக்குத் தாம் நபி என்ற உண்மையை நன்கு உணர்த்தி மனதில் ஆழமாகப் பதிய வைத்த பின்னர் அல்லாஹ் மீண்டும் வஹீயைக் கொடுக்க உத்தேசித்தான் போலும்.

"நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது வானிலிருந்து ஓர் அசரீரி கேட்டது. உடனே நான் வானின் பக்கம் தலையை உயர்த்தினேன். அங்கே ஹிராவில் என்னிடம் வந்த அதே மலக்கு காட்சியளித்தார். அவரைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட திடுக்கத்தில் நிலத்தில் வீழ்ந்து விட எத்தணித்தேன். "என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்." என்று கூறிக் கொண்டு எனது வீட்டுக்கு விரைந்து வந்தேன். அப்போது, "போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே; நீர் எழுந்து மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; மேலும், உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக; உம் உடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக; மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக". (74:1-5) என்ற ஆயத்துக்களை அல்லாஹ் இறக்கினான். பின்னர் வஹீ தொடர்ந்து இறங்கிற்று." (ஸஹீஹ் புஹாரி)

தஃவாப் பணி (இஸ்லாத்தின்பால் அழைப்பு)

"நீர் எழுந்து (மக்களுக்கு)அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக"என்ற இந்தக் கட்ட்ளையைத் தொடர்ந்து நபியவர்கள் தமது பிரச்சாரப்பணியைத் தொடங்கினார்கள். ஓய்வு ஒழிச்சல் இன்றி தஃவத்தில் ஈடுபட்டார்கள்.

தமக்கெனவோ,தம் குடும்பதுக்கெனவோ மட்டும் வாழாது முழு மனித சமுதாயத்துக்குமான மோட்சப்பாதையையத் தெளிவுபடுத்தினார்கள்.இப்பணியில் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையெல்லாம் பொருத்து நடந்து கொண்டார்கள். இதையே முன்கண்ட(74:05) ஆம் வசனத்தை அடுதுவரும் அறிவுரை நபியவர்களுக்கு புகட்டியது.

"(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருத்து)அதிகமாகப் பெறும்(நோக்கோடு)உபகாரம் செய்யாதீர்.இன்னும் உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக."(அல்குர்ஆன் 74:6-7)

இவ்வாறு நபியவர்கள் தமது "வபாத்" வரை ஏறத்தாழ 23 ஆண்டு  தப்லீக் - பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் தஃவாப் பணியை இரு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. ஏறத்தாழ 13 வருடங்களைக் கொண்ட மக்காலப் பிரிவு
2. பத்து வருடங்களைக் கொண்ட மதீனாக் காலப் பிரிவு

மக்காக் காலப் பிரிவை மேலும் இரு பகுதிகளைக் கொண்ட காலப் பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. இரகசியப் போதனை (மூன்று வருடங்கள்)
2. பகிரங்கப் போதனை ( நுபுவ்வத்தின் 4ம் ஆண்டு முதல் ஹிஜ்ரத் வரை)

பகிரங்கப் போதனை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் விதேசிகளுக்கான போதனைகளும் மேற்கொள்ளப்பட்டன என்பது முக்கியமான விடயமாகும். இது நுபுவ்வத்தின் 10ம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது.

நபி (ஸல்) அவர்கள்தொடக்கத்தில் தமது பிரசாரத்தை இரகசியமாகவே மேற்கொண்டார்கள். எனவே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முதலில் தமது நபித்துவத்தை அறிவித்து இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். இதனால் தனது மனைவி கதீஜா, அருமை நண்பர் அபூபக்ர், பணியாளர் ஸைத், உறவினருள் அலி போன்ற நபியவர்களுக்கு மிக மிக நெருக்கமானவர்களே ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தனர்.

நபியவர்களுக்கு இடப்பட்ட கட்டளையைத் தனக்கிடப்பட்ட கட்டளையாகக் கருதி நண்பர் அபூபக்ரும் அன்றே இஸ்லாமிய அழைப்புப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டார். தோழர் அபூபக்ரின் பிரசார முறைகளால் ஈர்க்கப்பட்ட பின்வருவோரும் இஸ்லாத்தை  ஏற்றுக் கொண்டனர்.
1. உஸ்மான் இப்னு அப்பான் (ரழி)
2. ஸுபைர் இப்னு அவாம் (ரழி)
3. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி)
4. ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி)
5. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி)
இவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களுள்
1. அடிமை பிலால் இப்னு ஹபாஹ் (ரழி)
2. அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி)
3. பாத்திமா பின்த் கத்தாப் (ரழி) போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர்.

ஏறத்தாழ் 40 பேர் வரையில் இஸ்லாத்தின்பால் கவரப்பட்ட இக்காலப் பகுதியில் தஃவா இரகசியமாகவே நடைபெற்று வந்தது. அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் (முதன் முதலாக -ஈமான் கொள்வதில்- முந்திக்கொண்டோர்) என்று அல் குர்-ஆனில் (9:100) இவர்கள் புகழ்ந்து கூறப்பட்டுள்ளார்கள்.

பகிரங்கப் பிரசாரமும் குறைஷியரின் எதிர் நடவடிக்கையும்

நுபுவ்வத்தின் முதல் மூன்றாண்டு காலத்திலும் நபியவர்கள் இரகசியமாக தனித் தனியாக மக்களை சந்தித்து தப்லீக் (பிரச்சாரம்) மேற்கொண்ட போதும்  குறைஷியருக்கும் இத்தகவல் எட்டியது. எனினும் அவர்கள் இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே மக்காவில் இருந்து வந்த உமையா இப்னு அபுஸ்ஸல்த், கிஸ்ஸுப்னுஸாயிதா, அம்ர் இப்னு நுபைல் போன்றோர் சொல்லி வந்த சமயக் கருத்துக்களையே நபியவர்களும் சொல்லுவதாக குறைஷியர் கருதி வந்தனர்.

இதன்போது, நபியவர்களுக்கு அல்லாஹ்வின் மற்றொரு கட்டளை பிறந்தது. "இன்னும் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக". (26:214) என்பதே அக்கட்டளை. இதனித் தொடர்ந்து நபியவர்கள் முதன்முறையாகத் தமது உறவினர்களை ஓரிடத்துக்கு அழைத்தார்கள். பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் ஆகிய இரு குடும்பத்தாருமாக ஏறத்தாழ 45 பேர் நபியர்களின் அழைப்பை ஏற்று ஒன்று கூடினர். இச்சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பேச ஆரம்பித்த போது, அபூலஹப் குழப்பம் விளைவித்ததனால் அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அபூதாலிப் தனது மூதாதையரின் மார்க்கத்தை விட்டுவிட விரும்பவில்லையெனினும் நபியவர்களுக்குப் பக்கபலமாக நிற்பதாக அப்போது பகிரங்கமாக அறிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் தமது உறவினர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நபியவர்களுக்குக் கிடைத்தது.

பின், மற்றொரு முறை ஸபா குன்றின் மீதேறி உறவினர்களை அழைத்தார்கள். அவ்வேளை நபியவர்கள் விடுத்த அறைகூவல் ஸஹீஹுல் புஹாரியில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
'உமது நெருங்கிய உறவினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்விராக!' (26:214) என்ற வசனம் இறங்கியதும் நபியவர்கள் ஸபா மலை மீது ஏறி பிஹ்ர் குடும்பத்தவர்களே! அதீ குடும்பத்தவர்களே! என்று குறைஷியரின் குடும்பங்களை அழைத்தார்கள். அவர்கள் அங்கு ஒன்றுகூடினர். அவ்விடம் வர முடியாதவர்கள் நடப்பதை அறிந்து வருவதற்காகத் தமது பிரதிநிதிகளை அனுப்பினர். அபூலஹபும் ஏனைய குறைஷியரும் சமூகம் கொடுத்திருந்தனர். நபியவர்கள் பேசத் தொடங்கினார்கள். "இப்பள்ளத்தாக்கூடாக் ஒரு படை உங்களைத் தாக்க வருகிறது, என்று நான் சொன்னால் எனது கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம். நீங்கள் பொய் சொன்னதை இதுவரை நாம் செவியுற்றதே இல்லை." என்று கூறினார்கள். உடனே நபியவர்கள் "கடுமையான வேதனையைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்." என்று கூறினார்கள். அதற்கு அபூலஹப் "உமக்கு கேடு உண்டாகட்டும். இதற்காகவா எம்மை ஒன்றுகூட்டினீர்" என்று தூற்றினான். உடனே 'அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்' என்ற அல் குர்-ஆனின் 111வது சூறா இறங்கிற்று.

இச்சந்தர்ப்பத்தில் நபியவர்களுக்கு வீசி அடிப்பதற்கென்று அபூலஹப் கல்லொன்றை எடுத்ததாக திர்மிதியில் ஹதீஸ் ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தை அறிவிப்பதற்காக ஸபா குன்றின் மீதேறி அழைப்பு விடுப்பதும் அவ்வழைப்பை ஏற்ற மக்கள் அங்கு திரள்வதும் அன்றைய மரபாகக் காணப்பட்டது. நபியவர்கள் தஃவா மேற்கொள்வதற்கு இந்த உத்தியைக் கையாண்டார்கள். நபியவர்களின் தஃவா எப்போது தொடங்கியதோ அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், நுபுவ்வத்தின் 4ம் ஆண்டிலிருந்தே ஈதிர்ப்பு கூட்டு நடவடிக்கையாக முடுக்கிவிடப்பட்டது.

இதனைப் பின்வருமாறு நோக்கலாம்.
1. நபியவர்களை மக்கள் மதியாதிருப்பதற்காக அவர்களை இழிவானவராகக் காட்டுதல்
2. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரைச் சித்திரவதை செய்தல்
3. நபியவர்களையும் ஸஹாபாக்களையும் பகிஷ்கரித்தல்
4. நபியவர்களைக் கொலை செய்ய முயற்சித்தல்

எத்தகைய எதிர்ப்பு வன்ந்த போதிலும் நபியவர்களது பிரசாரத்தின் வேகம் சற்றும் குறையவில்லை;  அது இடை  நிறுத்தப்படவுமில்லை; தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

நாற்பதாண்டுகள் நபியவர்களை "அல் அமீன்", "அஸ்ஸாதிக்" என்றெல்லாம் புகழ்ந்துவந்த மக்கத்துக் காபிர்கள்  இப்போது அவர்களை "ஸாஹிர்" (சூனியக்காரன்), "கஸ்ஸாப்" (பொய்யன்), "மஜ்னூன்"(பைத்தியக்காரன்), ""ஷாஇர்"(கவிஞன்) என்றெல்லாம் வசைபாடி  நபியவர்களின் தஃவாப் பணியைதடுத்து நிறுத்தப் பாடுபட்டனர்.  அவர்களில் சிலர் தாம் முஸ்லிமாகாவிட்டாலும்கூட நபியவர்களுக்கு உதவி வந்தனர். இன்னும் சிலர் இடையூறும் செய்யாது உதவியும் செய்யாது வாழாவிருந்தனர்.

இக்காலப் பிரிவில் நபியவர்களின் பிரசார முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் நிராகரிப்பதற்காகவும் குறைஷியர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் சிலவற்றையும், அவர்கள் மேற்கொண்ட ஒரு சில தடை முயற்சிகளையும் பின்வருமாறு நோக்கலாம்.

1. மனிதனொருவன் இறைத்தூதராக அனுப்பப்படுவதா என வினவுதல்
2. உண்டு உடுத்துத் திரியும் ஒருவர் நபியாவது எப்படி என்று வினா எழுப்புதல்
3. வஹீயை மனிதனின் கூற்றெனக் கூறுதல்
4. வஹீயை வேறு ஓர் அறிஞரிடம் இருந்து கற்றதெனக் கூறியமை
5. வஹீயை முன்னோரின் கட்டுக்கதையென வருணித்தல்
6. நபியவர்களிடம் சில  வழிபாடுகளை விட்டுவிடுமாறு வேண்டுதல்
7. நபியவர்களை சிலை வணக்கத்துக்கு இணங்க வைக்க முயற்சித்தல்
8. முஸ்லிம்களை வழிகேடர்களெனத் தூற்றித் தூசித்து அவர்களைப் பரிகசித்துச் சிரித்தல்
9. நபியவர்களைக் கவிஞன் என வருணித்தல்
10. நபியவர்களை சூனியக்காரன் எனச் சாடுதல்
11. நபியவர்களைப்  பொய்யனென இழித்துரைத்தல்
12. நபியவர்களைப் பைத்தியக்காரனென வருணித்தல்

இவ்வாறான தமது முயற்ச்களெதுவும் கைகூடாமல் போகவே குறைஷியர் பிறிதொரு முயற்சியாக நபியவர்களின் பெரிய தந்தை  அபூதாலிபிடம் தூது சென்றனர். நபியவர்களின் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துமாறும் இல்லாவிட்டால் தமக்கும் அவருக்குமிடையில் தடைக் கல்லாக நிற்க வேண்டாமெனவும் அபூதாலிபை அவர்கள் வேண்டினர். ஆனால் அபூதாலிப் குறைஷியரை நளினமாகவும் சமயோசிதமாகவும் பேசி அனுப்பி வைத்தார்.

பகிரங்கப் பிரசாரம் ஆரம்பமாகி ஓரிரு மாதங்களே உருண்டோடியிருந்தன.அதற்குள் ஹஜ் காலமும் நெருங்கிவிட்டிருந்தது. குறைஷியர் ஒன்றுகூடினர். விதேச்களை நபியவர்களின் போதனையிலிருந்து காப்பாற்றும் வழிவகைகளை அவர்கள் அலச் ஆராய்ந்தனர். "வலீத் இப்னு முகீரா"வின் தலைமையில் திட்டம் தீட்டினர். இறுதியில் ஹஜ் காலத்தில் குறைஷியர் நபியவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களைச் சூனியக்காரனென வெளி-நாட்டவருக்கு அறிமுகப்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

நபியவர்கள் ஹஜ் காலத்தில் உக்காழ், துல்மஜாஸ் ஆகிய சந்தைகள், ஹாஜிகளின் விடுதிகள் எல்லாம் சென்று அல்லாஹ்வின் தூதை அறிவித்தார்கள். ஆனால், அங்கெல்லாம் ச்சென்று "இவனை ஏற்காதீர்கள்; இவன் பொய்யன், நெறி பிறழ்ந்தவன்" என்று கூறி வந்தான். (திர்மிதி, அஹ்மத்)

அதேவேளை, நழ்ர் இப்னு ஹாரிஸ் என்பவன் பாரசீக மன்னர்கள், றுஷ்தும் போன்றோரின் கதைகளைக் கூறி மக்களின் மனத்தை மாற்றம் செய்ய முயற்சித்தான். எவ்வாறாயினும் அறபு நாடு முழுவதும் நபியவர்கள் பற்றிய பிரஸ்தாபம் ஏற்படுவதற்கு குறைஷியரின் எதிர்ப் பிரச்சாரம் பெரிதும் உதவியது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

குறைஷியரின் மற்றொரு தடை நடவடிக்கை இவ்வாறு அமைந்திருந்தது. நபியவர்களையும் இஸ்லாத்தைத் தழுவுவோரையும் துன்புறுத்துவதற்கென்றே குறைஷியரின் பெரும் தலைவர்கள் 25 பேரைக் கொண்ட சபை ஒன்று நிறுவப்பட்டது. அதன் தலைவனாக நபியவர்களின் தந்தையின் சகோதரனும் அண்டை வீட்டானுமான அபூலஹபே காணப்பட்டான். இவனே நபியவர்களையும் முஸ்லிம்களையும் துன்புறுத்துவதில் முன்னணி வகித்தான்.

அபூலஹபின் ஆண் மக்களாகிய உத்பா, உதைபா ஆகிய இருவரும் நபியவர்களின் இரு பெண் மக்களான றுகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் மணம்புரிந்திருந்தனர். நபியவர்களின் தஃவாப் பணியினால் ஆத்திரமடைந்த அபூலஹப் நபியவர்களின் பிள்ளைகளை விவாகரத்துச் செய்யுமாறு தம் மக்களை நிர்ப்பந்தித்து அவ்வாறே செய்வித்தான். அபூலஹபின் மனைவியான உம்மு ஜமீலும் கணவனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவளல்ல என்பது போல நடந்து கொண்டாள். இவள் நபியவர்களின் வீட்டு வாசலிலும் அவர்கள் செல்லும் வழியிலும் இரவோடிரவாக முட்களைப் பரப்பி வைப்பாள்.

இதேபோல், நபியவர்களைத் துன்புறுத்துவதில் அபூலஹபுக்கு அடுத்த இடத்தை வகித்தவன் அவர்களின் நெருங்கிய உறவினன் அபூஜஹ்ல் ஆவான். அபுல்ஹிகம் (அறிவின் தந்தை) எனப்பாராட்டப்பட்ட இவன் தனது தீய செயல்களினால் பிற்காலத்தில் அபூஜஹ்ல் (மடமையின் தந்தை) எனப் பெயர் பெற்றான். இவன் நபியவர்களைத் துன்புறுத்தியது மாத்திரமன்றி அவர்களைத் துன்புறுத்துமாறு பிறரையும் ஏவி வந்தான்.

நபியவர்களைப் போன்றே ஸஹாபாக்களும் பலவாறு இம்சிக்கப்பட்டனர். குறிப்பாக அடிமைகள், ஏழைகள், குடும்பச் செல்வாக்குக் குறைந்த நிலையில் இருந்தோர் அதிகமாகச் சித்திரவதைக்கும் கொடுமைகளுக்கும்  உள்ளாக்கப்பட்டனர்.


இஸ்லாமியப் பயிற்சிப் பாசறை (தாருல் அர்க்கம்)

இஸ்லாத்தின் முதல் பயிற்சிப் பாசறையாக அமைந்தது "தாருல் அர்க்கம்" எனப்பட்ட அர்க்கம் எனும் நபித் தோழரின் இல்லமாகும்.நுபுவ்வத்தின் 5ம் ஆண்டு தொடக்கம் இது இஸ்லாமிய அடிப்படையிலான பயிற்சிக்கான பிரதான மையமாகச் செயல்பட ஆரம்பித்தது.

ஸபா எனப்பட்ட ஒரு குன்றின்மீது அமைந்திருந்த இவ்வில்லம் எதிரிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமையாதிருந்ததால் இவ்விடத்தையே நபியவர்கள் பொருதாமான இடமெனக் கருதித் தெரிவு செய்தார்கள். இக்காலப் பிரிவில் நபியவர்கள் பகிரங்கப் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த போதும் முஸ்லிம்களின் நலன் கருதி பிறர்  அறியாவண்ணமே நபியவர்களும் முஸ்லிம்களும் அங்கு கூடி வந்தனர். முஸ்லிம்களும் பொதுவாக இக்காலப் பிரிவில் தமது ஈமானை வெளிக்காட்டாது இருந்துவந்தனர். இந்த இல்லத்தில்தான் உமர் (ரழி) உட்படப் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அபிஸீனிய ஹிஜ்ரத்

முஸ்லிம்கள்மீது குறைசியர் கொண்டிருந்த வெறுப்பும் கோபமும் நாளுக்கு நாள் அதிகரித்தது போன்றே அவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே சென்ன்றன. இந்த இன்னல்களையெல்லாம் முஸ்லிம்கள் சகித்துக்கொண்டபோதும் அவர்கள் அத்தனைபேரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நபியவர்களுகே இருந்தது. எனவே முஸ்லிம்களில் ஒரு குழுவினர் குறைஷியர் அறியாவண்ணம் "ஹபஷா" (அபிஸீனியா)வுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பன்னிரண்டு ஆண்களையும் நாங்கு பெண்களையும் கொண்ட இக்குழுவில் நபியவர்களது மகளார் ருகையாவும் அவரது கணவர் உஸ்மான்(ரழி) அவர்களும் இடம்பெற்றனர். நுபுவ்வத்தின் 5ல் இந்நிகழ்வு இடம்பெற்றது.முஸ்லிம்கள் செங்கடலைத் தாண்டி அபிஸீனியாவைப் போயடைந்தனர். இதன்போது குறைஷியர் முஸ்லிம்களைத் துரத்திச் சென்றனராயினும் அவர்களால் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை.

நபியவகளின் இ ந் நடவடிக்கை தலைவனொருவன் தனது பாதுகாபைவிடதன்னைச் சார்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பையே முதலில் உறுதி செய்ய வேண்டுமென்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மட்டுமன்றி நபித்தோழர்கள் இஸ்லாத்துக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதையுமிந்த ஹிஜ்ரத் எமக்கு உணர்த்துகிறது.

அபிஸீனியாவின் அப்போதைய மன்னனாகவிருந்த நஜ்ஜாஸி முஸ்லிம்களுக்குத் தனது நாட்டில் புகலிடம் கொடுத்து ஆதரித்தான். அவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்தபோதும் அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஏறத்தாழ நாங்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் அபிஸீனியாவில் தங்கினர்.

நபியவர்கள் அல்குர் ஆனின் ஸூரா நஜ்மை இக்காலப் பிரிவில் ஒருமுறை இனிமையாக ஓதியதால் ஈர்க்கப்பட்ட குறைஷியர் தம்மை அறியாமலேயே நபியவர்களோடு சேர்ந்து "ஸஜ்தா திலாவத்தில்" வீழ்ந்துவிட்டனர். மஸ்ஜிதுல் ஹரமில் பகிரங்கமாக நடைபெற்ற இச்செய்தி திரிபடைந்து மக்கத்துக் குறைஷியர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அபிஸீனிய முஸ்லிம்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் நுபுவ்வத்தின் 5ம் வருடமே அவர்கள் மக்கா திரும்பினர். உண்மை தெரிய வந்ததும் சிலர் வந்த வழியே அபிஸீனியா மீண்டனர்.  வேற்சிலர் இரகசியமாக வந்து வாழ்ந்தனர்.  இன்னும் சிலர் குறைஷியரின் பக்கத் துணையோடு மக்கா வந்தனர்.

மன்னன் நஜ்ஜாஸி முஸ்லிம்களைத் திருப்பியனுப்பாது அவர்களுக்கு அபயமளித்தமையானது  குறைஷியருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. என்வே அவர்கள் முஸ்லிம்கள்ள் மீது கொடுமைக்கு மேல் கொடுமை செய்யத் துணிந்தனர்.

நஜ்ஜாஸியின் நற்பண்பை ஊகித்தறிந்த நபியவர்கள் முஸ்லிம்களின் அனுபவத்தின் மூலம் அதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். எனவே அங்கு இரண்டாம் முறை ஹிஜ்ரத் செல்ல ஒரு குழு தயார் செய்யப்பட்டது. இதுவும் முஸ்லிம்களைப் பாதுகாப்பததற்கு எடுக்கப்பட்டதொரு நடவடிக்கையாகும்.நிதானமாகவும் தூர நோக்கோடும் ஹிஜ்ரத்துக்கான திட்டம் தீட்டப்பட்டது.இந்த ஹிஜ்ரத்தில் 83 ஆண்களும் 18 பெண்களுமாக மொத்தம் 101 முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

இம்முறை குறைஷியர் மிகவும் விழிப்பாக இருந்தனர்.முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறாவண்ணம் கண்காணிப்பாக நடந்து கொண்டனர். முதலாம்ஹிஜ்ரத்தினால் அவர்கள் படித்துக்கொண்ட பாடமாக இந்த நடவடிக்கை அமைந்தது. ஆனால் குறைஷியர் கண்ணில் படாதவாறு முஸ்லிம்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். குறைஷியர் முஸ்லிம்களது வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்களைத் தொடர்ந்து சென்றனராயினும் இவர்களால் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை.

அபிஸீனியாவுக்கான 1ம் 2ம் ஹிஜ்ரத்துக்கள் நபியவர்களின் சிறந்த திட்டமிடலுக்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

தடுத்து நிறுத்தும் முயற்சி தோல்வியடையவே குறைசியர் பிறிதொரு சூழ்ச்சியில் இறங்கினர். தூதுவர் இருவரை அவர்கள் அபிஸீனியாவுக்கு அனுப்பி வைத்தனர். அம்ர் இப்னு ஆஸ்,  அபூ ரபீஆ ஆகிய அவ்விரு தூதுவர்களுமபிஸீனியாவின் அரசவை மந்திரி பிரதானிகளுக்கக் கையுறை வழங்கி முதலில் அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் மன்னனிடம் சென்று முஹாஜிர்களைப் பற்றி, "இவர்கள் எமது நாட்டில்குற்றமிழைத்தவர்கள்; தேச் துரோகிகள்; அங்கிருந்து உங்கள் நாட்டுக்குத் தப்பியோடி வந்தவர்களாவர்"  என்று முறையிட்டு, அவர்களைக் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர்.

நஜ்ஜாஷி முஹாஜிர்களை விசாரணைக்காக அழைத்தார். முஸ்லிம்கள் சார்பில் பேசிய ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள் ந்பியவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாத்தை நயம்பட எடுத்துக் கூறி, இஸ்லாத்தை ஏற்றதற்காகக் குறைஷியர் தமக்கிழைத்த கொடுமைகளையும் மன்னனுக்கு விளக்கினார்கள். இதைக்கேட்டுத் திருப்தியுற்ற மன்னன் குறைஷித் தூதரின் வேண்டுகோளின்படி முஸ்லிம் அகதிகளை தூதுவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். மேலும், முஸ்லிம்கள் தமது நாட்டில் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கு அனுமதியளித்தார்.

குறைஷித் தூதர்கள் இருவரும் உடனே தம் நாடு திரும்பவில்லை. மறுநாள் மற்றொரு சூழ்ச்சியில் இறங்கினர். நபி ஈஸா (அலை) அவர்கள் பற்றிய முஸ்லிம்களின் கொள்கை என்னவென்று விசாரிக்கப்பட்டது. அதிலும் குறைஷியருக்குத் தோல்வியே கிட்டியது. குறைஷித் தூதுவர் இருவரும் அவமானத்துடன் நாடு திரும்பினர்.

இதன் பின்னர், மக்காவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களை குறைஷியர் மேலு சித்திரவதை செய்யலாயினர். ஆயினும், அவர்கள் இழைத்த கொடுமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

குறைஷியருக்குத் தொடர்ந்து தோல்வி ஏற்படவே அவர்கள் அபூதாலிபின் மூலம் தமது இலட்சியத்தை அடைய எண்ணினர். அவரிடம் மற்றொரு முறை தூது சென்று நபியவர்களின் பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துமாறும் இன்றேல் அவருக்கும் தமக்கும் இடையே தடைக் கல்லாக இருக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அபூதாலிபின் நிலையிலும் சிறிது தளம்பல் ஏற்பட்டாலும் கூட இறுதியில் நபியவர்களுக்கு உதவுவதாக அவர் வாக்களித்தார்.

மற்றும் ஒரு முறை குறைஷியர் அபூதாலிபிடம் சென்று வலீதின் மகன் இமாறத் என்ற வாலிபனை பிரதியீடாகப் பெற்றுக் கொண்டு நபியவர்களை கொலை செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர். இதற்கும் அபூதாலிப் இணங்கவில்லை. இத்தூதுக் குழுக்கள் இரண்டுமே நுபுவ்வத் ஆறாம் ஆண்டு இடம்பெற்றன.

இவ்வாறு தமது திட்டங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தமையால் குறைஷியர் நபியவர்களை கொலை செய்வதற்கு பலவாறு முயற்சித்தனர்.

இதன்வழியாக ஒருமுறை உதைபா நபியவர்களைக் கொலை செய்வதற்கெனச் சென்று முடியாமல் போகவே அவர்களின் ஆடைகளைக் கிழித்து முகத்தில் காறி உமிழ்ந்ததோடு வேறுபல இன்னல்களையும் செய்தான்.

பிறிதொரு தடவை உத்பா ஸுஜூதிலிருந்த நபியவர்களின் பிடறியில் ஏறி மிதித்தபோது அவர்களது கண்களிரண்டும் பிதுங்க ஆரம்பித்தன.

இன்னொருமுறை நபியவர்கள் ஸுஜூதில் இருக்கும் சமயம் பாராங்கல் ஒன்றைத் தலையில் போட்டு அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்ட அபூஜஹ்ல், தனது முயற்சியில் தோல்வி கண்டு பின்வாங்கினான். எனினும் மற்றொருதரம் நபியவர்களின் தலையில் கல்லால் அடித்துக் காயப்படுத்தினான்.

குறைஷியர் சிலர் ஒன்று சேர்ந்து நபியவர்களின் மேலங்கியால் அவர்களின் கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்றுவிட முயற்சித்தனர்.

இவ்வாறு நபியவர்களியக் கொலை செய்யப் பல முறை குறைஷியர் முயன்றும் அவர்களால் அவர்களது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எதிரிகளது அத்தனை சூழ்ச்சிகளில் இருந்தும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான்.


தடுப்புக் காவல் ( சமூகப் பகிஷ்காரம் )

குறைசியர் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்த நடவடிக்கைகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்தது மாத்திரமன்றி முஸ்லிம்களது எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதே வேளை பெரும் வீரர்களான ஹம்ஸாவும் உமரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதன் மூலம் முஸ்லிம்களதி பலம் மேலும் வலுவடைந்தது.

நபியவர்களின் உறவினர்களான ஹாஷிம் மற்றும் முத்தலிப் கோத்திரத்தார் அபூதாலிபின் தலைமையில் ஒன்று திரண்டு நபியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வரலாயினர்.

எனவே குறைஷியர் நபியவர்களையும் அவர்களின் உறவினர்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர். சமூக, பொருளாதார,தகவல் பரிமாற்ற, அரசியல் ரீதியான சகல தொடர்புகளையும்  குறைஷியர் துண்டித்துக் கொண்டனர். "முஹம்மதைக் கொலை செய்வதற்காக ஒப்படைக்கும் வரை ஹாஷிம், முத்தலிப் கிளையார்களின் எந்தவொரு சமாதானத்தையும் ஏற்பதில்லை; அவர்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை" என்ற பொது அறிவித்தலொன்றும் கஃபாவில் தொங்கவிடப்பட்டது.

நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான குறைஷியரின் கூட்டு நடவடிக்கைக்கு இது சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும்.

குறைஷியரின் பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து நபியவர்களும் உறவினர்களும் முஸ்லிம்களும் "ஷிஃபு அபீ தாலிப்" எனும் பள்ளத்தாக்கில் ஒதுங்கி ஒன்றாக வாழ்ந்தனர். இக்காலப் பிரிவில் அவர்கள் பல விதமான இன்னல்களை அனுபவித்தனர். உணவு, உடை, வீடு, மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாத்வாறு அவர்கள் தடுக்கப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் முதியோரும்பசியின் கொடுமையினால் அழுது பிரலாபித்தனர். "அஷ்ஹுருல் ஹுரும்" எனப்பட்ட சங்கையான மாதங்களில் மட்டுமே அவர்களுக்கு அச்சமின்றி வெளியில் செல்லக்கூடியதாக இருந்தது. தமக்குத் தேவையான பொருட்களை வெளிப் பிரதேச் வணிகர்களிடம் மட்டுமே கொள்வனவு செய்ய்ய முடியுமான நிலை இருந்தபோதும் அதற்கும் கூடக் குறைஷியர் விடுபவர்களாக இருக்கவில்லை.

ஆனால் பகிஷ்கரிப்பை விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட குறைஷியர் சிலர் பிறர் அறியா வண்ணம் இரகசியமாக முஸ்லிம்களுக்கு உணவுப் பண்டங்ககளைக் கொடுத்துதவி வந்தனர். இக்கால கட்டத்திலும் நபியவர்கள் தமது அழைப்புப் பணியை கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். அவர்கள் வெளி நாட்டு ஹாஜிகளைச் சந்தித்து பிரசாரம் செய்து வந்தார்கள். அதேவேளை குறைசியர் தஃவாவைக் குழப்பும் முயற்சியைக் கைவிடவுமில்லை.

இந்நிலையில் மூன்றாண்டுகள் உருண்டோடின. இதற்கிடையில் நபியவர்களும் அவர்களோடு ஷிஃபு அபூதாலிபில் வாழ்தோரும் பட்ட துன்பங்களைக் கண்டு அனுதாபப்பட்ட நல்ல மனம் கொண்ட குறைஷியர் சிலர் பகிஷ்கரிப்பு அறிவித்தலுக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சியில் இரகசியமாக இறங்கினர். பின்னர், இப்பணிக்கெனச் சேர்ந்த ஐவர் வரையில் கஃபாவில் கூடி பகிஷ்கார அறிவித்தலைக் கிழித்தெறிய வேண்டுமென தமக்குள் பேசிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த அபூஜஹ்ல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான். இது பற்றிய வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த அபூதாலிப் பகிஷ்கரிப்பு ஒப்பந்தத்தைக் கறையான் அரித்துவிட்டதாகவும் அதிலிருந்த அல்லாஹ்வின் நாமம் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நபியவர்கள் கூறி தம்மை அனுப்பி வைத்த செய்தியைக் கூறினார்.

முஸ்லிம்கள் மீது அனுதாபம் கொண்ட குறைஷியர்ருள் ஒருவரான முத்இம் இப்னு அதீ என்பவர் அறிவித்தலைக் கிழித்தெறிவதற்காக அங்கு சென்ற போது நபியவர்களின் வாக்குப்படி அல்லாஹ்வின் நாமத்தைத் தவிர ஏனைய அனைத்துமே கறையான்களால் அரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அறிவித்தலை இரகசியமாக எதிர்த்த குறைஷியர் முஸ்லிம்களை பகிரங்கமாக ஆதரிக்க முற்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் முற்றுகையிலிருந்து வெளிவந்தனர்.

நுபுவ்வத் 7ம் ஆண்டு முஹர்ரம் மாதம் ஆரம்பமான முற்றுகை நுபுவ்வத் 10ம் வருடம் முடிவடைந்தது.

பகிஷ்கரிப்பு கை விடப்பட்ட போதிலும் காபிர்கள் தமது கெடுபிடிகளைத் தளர்த்தவில்லை. நபியவர்களால் தமது தஃவாப் பணியை நிம்மதியாக, சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. குறைஷியர் பெரிதும் இடையூறாகவே இருந்து வந்தனர்.

கடைசியாக குறைஷியர் அபூதாலிபிடம் தூது சென்றார்கள். இக்குழுவில் உத்பா, ஷைபா, உமையா, அபூஜஹ்ல். அபூசுப்யான் போன்ற குறைஷித் தலைவர் உட்பட ஏறத்தாழ 25 பேர் இடம்பெற்றனர்.

தூதுக்குழுவின் அச்சுறுத்தலைக் கேட்ட அபூதாலிப் நபியவர்களை அழைத்து இணக்கமானதொரு வழிக்கு வருமாறு ஆலோசனை கூறினார். ஆனால், நபியவர்கள் இதில் விட்டுக்கொடுப்பதற்கில்லை என்றும், தனது வலக்கரத்தில் கதிரவனையும் இடக்கரத்தில் வெண்மதியையும் வைத்தாலும் குறைஷியர் சமாதானம் பேசிய போதிலும் அதற்குத் தான் இசைவாகப் போவதில்லை; தனது தஃவத் பணியைக் கைவிடப் போவதில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தொடர்ந்து தனக்கு ஆதரவளிக்க அபூதாலிபால் முடியாவிட்டால் அவர் தனது ஆதரவை விளக்கிக் கொள்ளலாம் என்றும் நபியவர்கள் அறிவித்தார்கள். நபியவர்களின் தளரா உறுதியைக் கண்டு எந்நிலையிலும் அவர்களைக் கைவிடுவதில்லை என்று அபூதாலிப் உறுதியளித்தார்.

ஆமுல் ஹுஸுன் (துக்க ஆண்டு)

பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட  சில காலத்தில் அபூதாலிப் அவர்களும் அடுத்து கதீஜா (ரழி) அவர்களும் காலமானார்கள். இவ்விருவரது இழப்பு நபியவர்களுக்குப் பெரும் சோதனையாக அமைந்தது.

அபூதாலிப் நபியவர்களைப் பல வழிகளிலும் காப்பாற்றியவர். குறைஷியரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் நபியவர்களுக்குத் துணையாக நின்று அவர்களை கண்ணெனக் காத்தவர். அவரது மரணம் நபியவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் பேரிழப்பாக அமைந்தது.

நபியவர்கள் மீது அபூதாலிபுக்கு அளவு கடந்த அன்பு இருந்தது போன்றே  நபியவர்களுக்கும் இவர்களிடம் அதிகளவு அன்பு இருந்தது. அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்று விமோசனம் பெற வேண்டுமென நபியவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

அவரின் மரணப் படுக்கையிலும் நபியவர்கள் இவ்வேண்டுகோளை முன்வைத்தார்கள். ஆனால், அபூதாலிப் தனது இறுதி நேரத்திலும் கலிமா மொழிந்து முஸ்லிமாகவில்லை. இது நபியவர்களுக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது.

அப்பொழுது, "(நபியே) நீர் விரும்புபவர்களை (எல்லாம்) நிச்சயமாக நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நிச்சயமாக நேர்வழியில் செலுத்துகிறான்." (28:56) என்ற வசனத்தின் மூலமாக அல்லாஹ் நபியவர்களுக்கு ஆறுதல் வழங்கினான்.

அபூதாலிப் மரணமடைந்த துக்கத்திலிருந்து நபியவர்கள் மீளவில்லை. அதற்குள் நபியவர்களின் அருமை மனைவி கதீஜா (ரழி) அவர்களும் மரணமடைந்தார்கள். கால் நூற்றாண்டு கால வாழ்க்கையில் கதீஜா (ரழி) அவர்கள் நபியவர்களுக்குப் பல வழிகளிலும் உதவியாக இருந்தார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள். கதீஜா (ரழி) அவர்கள் வபாத்தாகும் வரை நபியவர்கள் வேறெந்தப் பெண்ணையும் மணக்கவில்லை.

கதீஜா (ரழி) அவர்கள் பற்றி குறிப்பிடும் போது நபியவர்கள், "மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை நபியென நம்பினார். மக்கள் என்னைப் பொய்யன் என்ற போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எனக்குக் கொடுக்காத போது அவர் என்னைத் தனது செல்வத்தில் பங்காளராக்கினார். மற்றைய மனைவியரினால் எனக்குக் குழந்தைகள் இல்லை. அவர் மூலம் அல்லாஹ் எனக்குக் குழந்தைப் பாக்கியத்தை அருளினான்" என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இத்துக்ககரமான நிகழ்ச்சிகள் இரண்டும் நடைபெற்ற நுபுவ்வத் 10ம் வருடம் 'ஆமுல் ஹுஸ்ன்' (துக்க ஆண்டு) எனப் பெயர் பெற்றது.


தாயிபில் தஃவாப் பணி

குறைஷியர் சத்தியத்தை ஏற்காதது மாத்திரமன்றி அதை ஒழித்துக் கட்டவும் அயராது முயற்சித்து வந்தனர். குறைஷியர் நபியவர்களின் போதனைகளை செவிமடுக்கக் கூடாதென்ற கட்டுப்பாடு மக்காவில் கண்டிப்பாகப் பேணப்பட்டு வந்ததால் பிரசாரத்திற்கான புதியதொரு களத்தை அமைத்துக் கொள்வதற்காக நபியவர்கள் தமது கவனத்தை தாயிப் நகரின் பக்கம் திருப்பினார்கள். தாயிபில் வாழும் செல்வாக்குமிக்க ஸகீப் கிளையினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மக்கத்து முஸ்லிம்கள் இன்னல்களிலிருந்து பாதுகாப்புப் பெற வழி பிறக்கும். இஸ்லாம் எழுச்சி பெற அது நெம்பு கோலாக அமையும் என்று நம்பி தாயிப் நகரை இப்பணிக்குத் தெரிவு செய்தார்கள்.

தயிப் பயணத்தில் நபியவர்களுடன் வளர்ப்பு மகன் ஸைதும் சென்றார். மக்கா - தாயிப் பாதையில் வசிப்போருக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்துக்கொண்டே நபியவர்கள் தாயிப் நகர் சென்றடைந்தார்கள்.இப்பணியில் தயிபில் பத்து நாட்களை அவர்கள் கழித்தார்கள்.

ஸகீப் குலத் தலைவர்கள் மூவரோடு உரையாடி அழைப்புக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் மக்கத்துக் குறைசியரின் எதிர்ப்புக்கு  அஞ்சி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அத்துடன் நில்லாது அவர்கள் நபியவர்களை ஊரைவிட்டே வெளியேறிச் சென்றுவிடுமாறு வேற் எச்சரிக்கையும் செய்தார்கள். நபியவர்கள் அங்கிருந்து வெளியேறி வந்த போது மக்கள் அவர்களை கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். இச்சன்ந்தர்ப்பத்தில்  தோட்டம் ஒன்றில் பணி செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ  அடிமை ஒருவர் நபியவர்களுக்கு உதவியதோடு  அவர்களோடு உரையாடி இஸ்லாத்தைப் பற்றி அறிந்து முஸ்லிமானார்.

மக்கா திரும்பும் வழியில் நபியவர்கள் "வாதீ நக்ஹ்லா"  எனுமிடத்தில் சில நாட்கள் தங்கினார்கள். அங்கு ஜிங்களில் ஒரு தொகுதியினர். நபியவர்களிடம் வந்து அல்குர் ஆனைச் செவியுற்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

தயிபிலிருந்து திரும்பிய  நபியவர்கள் "முத்இம்" என்ற ஒருவரின் பாதுகாப்பில் மக்கா வன்ந்து  சேர்ந்தார்கள். குறைசியரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக சுதேசிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே நபியவர்கள் வியாபார நோக்கிலும் ஹஜ்ஜுக்காவும் வந்த் வெளியூர்வாசிகளிடம் தஃவாப் பணியை மேற்கொண்டார்கள். இதனால் "யஸ் ரிப்" வசிகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

நூவ்வத்தின் 11ம் ஆண்டு ஹஜ் காலத்தில் நபியவர்கள் யஸ்ரிபில் இருந்து வந்த அறுவருக்கு அழிப்புக் கொடுத்தார்கள். "அஸ்அத் இப்னு ஸுராரா என்பவரின் தலைமையில் வந்திருந்த  "கஸ்ரஜ்" கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் அறுவரும், இஸ்லாத்தைத் தழுவினர். பின்னர் இவர்கள் யஸ்ரிப் சென்று அங்கு ஒ வ்வொரு வீடாகச் சென்று இஸ்லாத்தைப் பற்றி  எடுத்துக் கூறினர்.

மனைவி கதீஜாவின் மரணத்தால் தாரமிழந்து தனிமையில் வாழ்ந்த நபியவர்கள் நுபுவ்வத்தின் 10ம் ஆண்டே "ஸவ்தா பித் ஸம்ஆ"  எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் நுபுவ்வத்தின் 11ம் ஆண்டு நபியவர்கள்  ஆய்ஷா பிந்த் அபூபக்ரைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் நனடைபெற்றது.


முதலாம் அகபா உடன்ப்டிக்கை

நுபுவ்வத்தின் 11ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுச் சென்ற யஸ்ரீப் வாசிகள் அறுவரினதும் முயற்சியால் அடுத்த ஹஜ்ஜின்போது நுபுவ்வத்தின் 12ம் வருடம் பன்னிரண்டு பேர் அங்கிருந்து வந்து நபியவர்களைச் சந்தித்து உரையாடி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களுள் முன்னையோரில் ஐவரும் புதியோர் 70 பேர்களும் இருந்தனர். அவர்களுள் இருவர் ஔஸ் வர்க்கத்தினர்; ஏனையோர் கஸ்ரஜ் வர்க்கத்தினராவர்.

இப்பன்னிருவரும் நபியவர்களுடன் "பைஅத்" செய்து கொண்டார்கள். இதன் நிபந்தனைகள் பின்வருமாறு:
1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பதில்லை
2. திருடுவதில்லை
3. விபசாரம் செய்வதில்லை
4. குழந்தைகளைக் கொலை செய்வதில்லை
5. அவதூறு சொல்வதில்லை
6. நபியவர்களுக்கு மாறு செய்வதில்லை.

மினாவிலுள்ள "அகபா" எனுமிடத்தில் இந்த பைஅத் நடைபெற்றமையினாலும் இதன்பிறகு அடுத்த வருடம் இதே இடத்தில் பிறிதொரு பைஅத் நடை பெற்றமையாலும் இந்த பைஅத்  முதலாம் அகபா உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது.

இப்பன்னிருவரும்  யஸ்ரீப் மீண்டபோது அவர்களுடன் நபியவர்கள் தனது பிரதிநிதியாக முஸ்அப் இப்னு உமைர் எனும் தனது தோழர் ஒருவரை அனுப்பி வைத்தார்கள். முஸ்அப் (ரழி), அஸ் அத் எனும் பிறிதொரு தோழரோடு இணைந்து இருவருமாக யஸ்ரீபில் முழுமூச்சாக தஃவப் பணியில் ஈடுபட்டனர். இதனால்  யஸ்ரீப் வாசிகளில் கணிசமான தொகையினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இச்சுப செய்தியுடன் அடுத்த ஹஜ்ஜுக்கு முன்பதாகவே முஸ்அப் (ரழி) மக்கா திரும்பினார்.

நபியவர்களின் வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்த மக்காப் பருவத்தில் கடைச்ப் பகுதியான இக்காலகட்டத்திலேயே "மிஃராஜ்" என்ற மாபெரும் அற்புத நிகழ்ச்சியான விண்ணுலக யாத்திரை இடம்பெற்றது. இது நபியவர்களுக்கு மன ஆறுதலும் தெம்பும் அளிப்பதாக அமைந்தது.


இரண்டாம் அகபா உடன்படிக்கை

நுபுவ்வத்தின் 13ம் ஆண்டு யஸ் ரிபில் இருந்து 73 ஆண்களும்  02 பெண்களுமாக 75 முஸ்லிம்கள்  ஹஜ்ஜுக்கு வருகை தந்தனர். இவர்களி நபியவர்கள் நள்ளிரவில் அகபாவில் சந்தித்தார்கள் நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரழி) அப்போது இஸ்லாத்தை ஏற்காவிடினும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

யஸ்ரிப் வாசிகள் நபியவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் மீது பைஅத் செய்து கொடுத்தனர்.
1. முன்னர் கூறப்பட்ட 1ம் அகபா உடன்படிக்கையின் நிபந்தனைகள்
2. செல்வத்திலும் வறுமையிலும் தீனுக்காகச் செலவு செய்தல்
3. நலவற்றை ஏவுதல்; தீயவற்றைத் தடுத்தல்
4. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றல். இது விடயத்தில் எவரது எதிர்ப்புக்கும் அஞ்சாதிருத்தல்
5. ஆபத்துக்களில் இருந்து நீங்கள் உங்களையும் உங்களது மனைவி மக்களையும் பாதுகாப்பது போன்று என்னைப் பாதுகாத்தல்.

நீங்கள் இவற்றை நிறைவேற்றினால் உங்களுக்குச் சுவர்க்கம் உண்டு என்று நபியவர்கள் கூறினார்கள்.

இதுவே இரண்டாம் அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. இதன்போது இருதரப்பினரும் மீண்டும் மீண்டும் ஷரத்துக்களைக் கூறிச் சத்தியப்பிரமாணத்தை உறுதி செய்து கொண்டனர்.

இந்த இரண்டாம் அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களின் சார்பில் அப்பாஸும் சில சந்தர்பங்களில் பேசினார். தான் இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் நபியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், என்றாலும் அவர்கள் யஸ்ரிப் வர விரும்புவதாகவும், அவர்கள் அங்கு வரும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது யஸ்ரிப் வாசிகளின் தலையாய கடமை என்றும் அப்பாஸ் யஸ்ரிப் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

பைஅத் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர், பிரசார வேலைகளுக்காகவும் மக்களை வழி நடாத்துவதற்காகவும் யஸ்ஸ்ரிப் வாசிகளில் "நுகபா" (தலைவர்) என்றழைக்கப்பட்ட பன்னிருவர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் ஒன்பது கஸ்ரஜ்களும் மூன்று ஔஸ்களும் இடம் பெற்றனர்.

நள்ளிரவில் நடைபெற்ற இக்கூட்டம் பற்றிக் குறைஷியருக்குத் தெரியவந்ததாயினும் அவர்களால் அதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஹஜ் முடிவுற்று மக்கள் கூட்டம் கலைந்த பின்னரே அவர்களுக்கு செய்தி ஊர்ஜிதமாயிற்று. இதனால் அவர்களால் யஸ்ரிப் முஸ்லிம்களைப் பிடிக்க முடியவில்லை. ஆயினும் ஒரு சிலரை மட்டும் கைது செய்து துன்புறுத்தினர்.

ஹிஜ்ரத்

இரண்டாம் அகபா சத்தியப் பிரமாணத்திற்கு முன்பிருந்தே மக்கத்து முஸ்லிம்களில் சிலர் யத்ரிபுக்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ளலாயினர். எனினும், இச்சத்தியப் பிரமாணத்தின் பின்னரே ஹிஜ்ரத் துரிதமாக இடம்பெறலாயிற்று. நபியவர்களே யத்ரிபுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு ஸஹாபாக்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இதன் விளைவாக ஹபஷா சென்றிருந்த ஒருசிலர் கூட அங்கிருந்து திரும்பி யத்ரிப் சென்றார்கள். இரண்டாம் அகபா சத்தியப் பிரமாணம் நடைபெற்ற சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்காவில் நபியவர்களுடன் அபூபக்கர் (ரழி), அலி (ரழி) போன்ற சிலரும் காபிர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிலரும் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். நபியவர்களும் ஹிஜ்ரத் செய்வதற்காக் அல்லாஹ்வின் அனுமதியை எதிர்பார்த்திருந்தார்கள்.

இரண்டாம் அகபா சத்தியப் பிரமாணத்தையும் அதையடுத்து முஸ்லிம்கள் யத்ரிப் செல்வதையும் அறிந்த குறைஷியர் நபியவர்களும் அங்கு சென்று தன்னைப் பலப்படுத்திக் கொள்வார்களோ என அஞ்சினர். இது பற்றி ஆலோசனை செய்வதற்காக 'தாருன்னத்வா'வில் ஒன்று கூடினர். குறைஷியரின் பல்வேறு கபீலாக்களில் இருந்தும் கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் சமூகமளித்தனர். நீண்ட கலந்துரையாடலின் பின் அபூஜஹ்லின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு மன்றம் கலைந்தது.

ஒவ்வொரு கபீலாவிலிருந்தும் துணிச்சலும் உற்சாகமும் உடைய ஒவ்வொரு வாலிபனைத் தெரிவு செய்து அவர்களிடம் கூரிய வாள்களைக் கொடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து சமகாலத்தில், ஒரே வீச்சில் வெட்டிக் கொல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு வாலிபர்களைத் தயார்செய்வதற்கென்று பதினொரு பேர் கொண்ட குழு ஒன்றும் நிறுவப்பட்டது.

நபியவர்களை ஹிஜ்ரத் செய்யுமாறும் அன்றிரவு தமது வழமையான படுக்கையில் உறங்க வேண்டாமெனவும் அல்லாஹ்வினால் அறிவிக்கப்பட்டது. எனவே, பகல் வேளையில் நபியவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களின் இல்லம் நோக்கிச் சென்று தமது ஹிஜ்ரத் தீர்மானம் பற்றி அறிவித்தார்கள். அவ்வேளை அபூபக்கர் (ரழி) அவர்கள் தாமும் உடன் வருவதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புஹாரி)

குறைஷியர் தமது திட்டப்படி செயலாற்றத் தொடங்கினர். நபியவர்களின் இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. இரவு வேளை, வாலிபர் கூட்டம் கூரிய வாட்களை ஏந்தியவாறு கொலை வெறியுடன் தயார் நிலையில் இருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் நபியவர்கள் அல்லாஹ்வ்வின் அணைப்படி அலி (ரழி) அவர்களைத் தமது படுக்கையில் உறங்குமாறு பணித்துவிட்டு வீட்டிலிருந்து தன்னந்தனியாகப் புறப்பட்டார்கள். இச்சம்பவம் பற்றி அல் குர்-ஆன் "நாம் அவர்களுக்கு முன்னே ஒரு திரையையும் அவர்களுக்குப் பின்னே ஒரு திரையையும் ஏற்படுத்தியுள்ளோம். (இவ்வாறாக) அவர்களை மறைத்து விட்டோம். ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது." (36:09) என்று கூறுகின்றது. வீட்டிலிருந்து புறப்படும் போது இந்த அல் குர்-ஆன் வசனம் நபியவர்களின் நாவிலிருந்து வெளிவந்த அதேவேளை, கைகள் முற்றத்தில் ஒரு பிடி மண்ணை அள்ளிக் காபிர்கள் பக்கம் தூவின.

இது பற்றி அல்லாஹ் "(பகைவர் மீது மண்ணை) எற்றிந்த போது அதனை நீங்கள் எறியவில்லை. அல்லாஹ் தான் எறிந்தான்." (08:17) என்று குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வ்வின் பேரருளால் நபியவர்கள் காபிர்களின் கண்களில் படாதவாறு வெளியேற முடிந்தது. த்மது வீட்டிலிருந்து நண்பர் அபூபக்கர் (ரழி) அவர்களின் இல்லம் சென்று அங்கிருந்து அவ்விருவரும் சேர்ந்து ஹிஜ்ரத் மேற்கொண்டனர்.

நபியவர்களின் வீட்டைச் சுற்றிக் காவல் புரிந்த குறைஷி வீரர்கள் ஏமாந்து விட்டனர். அவர்கள் வீட்டினுள் நபியவர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அலி (ரழி) அவர்களை நபியவர்கள் என எண்ணிக் கொண்டனர். ஆனால், படுக்கையிலிருந்தவர் அலி (ரழி) என்று தெரிய வந்ததும் அவர்களெல்லோரிடமும் "முஹம்மத் எங்கே" என்ற வினா பிறந்தது.


அல்லாஹ் குறைஷியரின் சதித்திட்டத்தை முறியடித்தான். நபியவர்களை அவன் காப்பாற்றினான். இது பற்றி அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரைவிட்டு வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களும் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். (அல்குர் ஆன் 8 ; 30)

தமது ஹிஜ்ரத் பயணத்தை நங்கு திட்டமிட்டிருந்த நபியவர்கள் தொடக்கத்தில் யஸ் ரிபின் பக்கம் வடக்கே செல்லாது எதிர்த் திசையான யமன் பக்கம்  தெற்கே சுமார் ஐந்து மைல் தூரம் சென்று "ஸவ்ர்" குகையை அடைந்தார்கள்.

"ஸவ்ர்" உயர்ந்ததொரு மலை, கற்கள் நிறைந்தது. செல்லும் வழியும் செம்மையில்லை. அதில் ஏறுவதும் சிரமம். அதிலொரு பொதும்பு இருந்தது. அதற்குள் இருவரும் புகுந்து கொண்டனர்.

குறைஷியரின் முற்றுகை தோல்வியடையவே அவர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.எதிரிகள் மலை மீதேறிக் குகை வாயிலுக்கு அண்மையில் சென்றபோது வாயிலில் ச்லந்தி வலை பின்னப்பட்டிருப்பதைக் கண்டு (குகையைச் சுட்டிக்காட்டி) இதற்குள் அவர் புகுந்திருந்தால் சிலந்தி இங்கு இருக்க முடியாதெனத்  தமக்குள்  பேசிக்கொண்டனர். (முஸ்னத் அஹ்மத்)

இந்நிகழ்வை அல்குர்ஆன் பின்வருமாறு சித்தரிக்கின்றது.

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு எவ்வித் இழப்புமில்லை) நிராகரிப்போர் அவரை ஊரைவிட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்.  குகையில் இருவரில் ஒருவராக இருந்தபோது  (நம் தூதர்) தம் தோழரிடம் கவலைப் படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான், என்று கூறினார். அப்போது அல்லாஹ் தன் சாந்தியை அவர் மீது இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்பொரின் வாக்கைக் கீழாக்கினான். (9 : 40)

இருவரும் குகையில் மூன்று இரவுகள் தங்கினர். அபூபக்ர் (ரழி) அவர்களின் மகன்  அப்துல்லாஹ் (ரழி), பணியாளர் ஆமிர் இப்னு புகைர் ஆகிய இருவரும் தகவல் பரிமாற்றமும் உணவு விநியோகமும் செய்தனர். மகள் அஸ்மா பயணப் பொதிகளைத் தயார் செய்து கொடுத்தார்.  அப்துல்லாஹ் இப்னு உறைகித் என்ற காபிர் வழிகாட்டியாகக் கூலிக்கு அமர்த்தப்பட்டார்.

ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் இரவு பயணம் மீண்டும் ஆரம்பமாகியது. வழியில் உம்மு மஃபத் என்ற பெண்ணின் ஆட்டில் பால் கறந்து எல்லோரும் வயிறாரப் பருகினர்.

தொடக்கத்தில் தெற்கு நோக்கி யமன் பக்கமாகச் சிறிது தூரம் சென்று பின்னர் மேற்காகத் திரும்பிச் செங்கடலோரத்துக்கு அணித்தாக வந்தனர். பின்னரே யஸ்ரிபின் பக்கம் வடக்கு நோக்கிச் சென்றனர். இவ்வழியாக மக்கள்  யஸ்ரிப் பயணம் மேற்கொள்வது மிக மிக அரிதாகும்.

நபியவர்களும் அபூபக்ர் (ரழி)யும் பாதையை மாற்றி ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போதும் " சுறாக்கா இப்னு மாலிக்" என்ற குறைஷி, அவர்கள் இருவரையும் கண்டு கொண்டது மட்டுமன்றி அதிவேகமான தந்து குதிரையில் அவர்களை நெருங்கியும் வந்துவிட்டார். எனவே நபியவர்கள் அவ்விடத்தில் பிரார்த்தனை செய்தார்கள்  உடனே குதிரையின் காலகள்  அதன் வயிறு வரை நிலத்தில் புதைந்துபோனது. பின்னர் சுறாக்காவின் வேண்டுகோளுக்கு  இணங்க   நபியவர்கள் மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். உடனே குதிரையின் கால்கள் விடுபட்டன.

இந்நிகழ்ச்சியினால் சுறாக்கா இஸ்லாத்தை ஏற்று அங்கிருந்து மக்கா திரும்பினார். வழியில் நபியவர்களைத் தேடிக்கொண்டு வந்த குறைஷியர்  அனைவரையும் தொடர்ந்து செல்லவிடாது தன்னுடன் திருப்பி அழைத்துக்கொண்டு சென்றார். இவ்வாறு அல்லாஹ் நபியவர்களைக் காப்பாற்றினான்.

ஈற்றில் அல்லாஹ்வின் பேரருளால் எவ்விதமான ஆபத்துமின்றி நபியவர்கள் யஸ் ரிபுக்கு அண்மையில் உள்ள "குBபா" எனும் கிராமத்தைச் சென்றடந்தார்கள்.

ஹிஜ்ரத்துக்கான காரணங்கள்

நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றமைக்கு பல காரணங்களும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மதீனா மக்களின் அழைப்பாகும். முதலாவது, இரண்டாவது அகபா உடன்படிக்கைகளின் போது மதீனாவாசிகள் நபியவர்களைத் தங்கள் நகருக்கு வருமாறு பல முறை அழைத்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு அழைத்தமைக்கு சமயக் காரணிகள் மட்டுமன்றி அரசியற் காரணிகளும் இருந்தன. மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்துக்கும் கஸ்ரஜ் கோத்திரத்துக்கும் இடையே நீண்ட காலமாகப் போர்கள் நடைபெற்று வந்தன. இந்த இரு கோத்திரங்களும் தமது பிணக்கை நடுவர் ஒருவரின் மூலம் தீர்த்துக் கொள்ள விரும்பினர். நபியவர்கள் இப்பிணக்கை எவ்விதப் பக்க சார்புமின்றி நியாயமான முறையில் தீர்த்து வைக்கக் கூடியவர்க் என அவர்கள் நம்பினர். மேலும் மதீனா வாசிகள், மக்காவில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த குறைஷியரின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்திருந்தனர். அத்தகையதொரு சந்தர்ப்பம் தமக்கெதிரே இருப்பதை அவர்கள் கண்டனர். இதற்குள்ள ஒரே வழி நபியவர்களை தம் தலைவராக ஏற்றுக்கொள்வதே என்று அவர்கள் தீர்மானித்தனர்.

மேலும், நபியவர்களுக்கு மதீனா நகர் ஒரு புதிய நகராக இருக்கவில்லை. அவர்களது பாட்டனார் ஹாஷிம் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த மதீனத்துப் பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். அதன் மூலம், மதீனா நகரத்தவர்களோடு நபியவர்கள் இரத்த உறவைப் பேணி வந்தார்கள். இவ்விரத்த உறவும் நபியவர்களின் மதீனாக் குடியேற்றத்திற்கு ஓர் ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததெனலாம்.


ஹிஜ்ரத்தின் விளைவுகள்

நபியவர்களின் மதீனா ஹிஜ்ரத் வரலாற்றில் பல்வேஎறு விளைவுகளை ஏற்படுத்தியதைக் காணலாம். இந்த ஹிஜ்ரத் நபியவர்களது வாழ்வில் புதியதொரு திருப்பத்தையும் இஸ்லாத்தின் வளர்ச்சியில் ஓர் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. முஸ்லிம்களது ஆண்டுக் கணிப்பு முறையான ஹிஜ்ரி வருடம் இந்த சம்பவத்திலிருந்தே ஆரம்பமாகின்றது எனலாம். இந்த ஆண்டுக் கணிப்பை முதன் முதலில் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களே துவக்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரத் சம்பவம் நபியவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு புதிய மாற்றத்தின் தோற்றத்தையே குறிப்பிடுகிறது. இச்சம்பவத்தோடு நபியவர்களின் மக்கா வாழ்க்கை முடிவுற்று மதீனத்து வாழ்க்கை உதயமாகியது. துன்பமும் துயரமும் தோல்வியும் நிறைந்த ஆண்டு அஸ்தமித்து வெற்றியின் ஆண்டு உதயமானது. மக்களால் வெறுக்கப்பட்ட மனிதராக மக்காவைத் துறந்து வந்த நபியவர்கள் ஓர் உன்னத மனிதராக - ஒரு சமூகத் தலைவராக - மதீனாவினுள் பிரவேசித்தார். மதீனா மக்கள் யாவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கு தமது வீடு, பொருள், நிலம் அனித்தையும் வழங்கி உதவினார்கள். அதனால், மதீனா வாசிகளுக்கு நபியவர்கள் அன்சாரிகள் என்ற பெயரைச் சூட்டி கௌரவித்தார்கள்.

இந்த ஹிஜ்ரத் பிற்காலத்தில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய கிலாபத்தை நிறுவ ஊன்றப்பட்ட முதல் வித்தாக அமைந்தது. உலகின் மூன்றில் ஒரு பகுதியை இஸ்லாம் சென்றடைவதற்கு இதுவே காரணமாக அமைந்தது. ஹிஜ்ரத்தின் பின்னர் அதுவரை இருந்த அச்ச சூழ்நிலை நீங்கி அதிகாரம் கையில் கிடைத்ததால் இஸ்லாத்தை அதன் முழுப் பரிமாணத்தோடு அமுல் நடாத்தவும் முடிந்தது.



நபியவர்களின் மதீனா வாழ்க்கை


முஹாஜிர் அன்ஸார் உறவுகள்

நபியவர்கள் முஹாஜிர் அன்ஸார்களுக்கிடயே சகோதரத்துவப் பிணைப்பை ஏற்படுத்திவிட்டமையானது இஸ்லாத்தி உயர் மனிதாபிமான ப் பண்பாட்டியல் நீதியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

முஹாஜிர்களைப் பொறுத்தவரை அவர்கள் தமது சொத்து சுகங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்துவிட்டு உலகச் செல்வங்கள் எதுவுமற்றவர்களாக மதீனாவுக்கு வந்தவர்களாவர். அன்ஸார்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மிடமுள்ள விவசாயம், கைத்தொழில், ஏனைய வளங்கள் காரணமாக செல்வந்தர்களாகத் திகழ்ந்தவர்களாவர். எனவே அவர்களில் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனைப் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும். வாழ்வின் இன்ப துன்பங்களை அவர்களோடு பங்கு போட்டுக் கொள்ளட்டும். செல்வந்தராக இருந்தால் தனது செல்வத்தில் அரைப் பகுதியை தனது சகோதரனுக்கு வழங்கிவிடட்டும் என நபியவர்களால் அன்ஸார்கள் வேண்டப்பட்டனர்.  இந்த சகோதரத்துவப் பிணைப்பு ஏற்படுத்திவிட்ட சமூக நீதியைவிட உயர்ந்த ஒரு நீதியை உலகில் எங்கும் காண முடியாது.

மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தம் குடும்பத்தாரின் அன்பு, ஆதரவு, உதவி முதலானவற்றை இழந்தனர். அவர்களுள் இருந்த ஏழை முஸ்லிம்கள் தம் குடும்பத்தின் பொருளாதார நலன்களை அனுபவிக்க முடியாதவர்களாயினர். குடும்ப பலம் அற்றதனால் துன்புறுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடையே அன்பையும் ஆதரவையும் பரஸ்பர உதவியையும் வழிகாட்டுதலையும் வழங்கும் முகமாக ஹிஜ்ரத்துக்கு முன்பே மக்கத்து முஸ்லிம்களை நபியவர்கள் சகோதரர்களாக பிணைத்து விட்டார்கள். முஸ்லிம்களிடையே துளிர்த்த இந்த சகோதரத்துவ உணர்வு மக்கா வாசிகள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது மிக அழகாகத் தொழிற்பட்டது. முஹாஜிர்கள் மதீனாவுக்கு வரும் போது தம் சொத்துக்களையெல்லாம் இழந்து வெறும் கைகள் சகிதமே வந்து சேர்ந்தார்கள். வர்த்தகர்களான அவர்களிடம் அதற்கான மூலதனம் கூட இருக்கவில்லை. விவசாயத்துக்கு உகந்த நிலம் மதீனாவில் காணப்பட்ட போதும் மக்கா வாசிகளுக்கு விவசாயம் செய்யும் அனுபவம் இருக்கவில்லை. இதனால், அன்சாரிகள் முஹாஜிர்களுக்கு தம் விளைச்சலில் பங்கு கொடுத்தனர். வீடு கட்ட நிலத்தையும் வழங்கினர். இவ்வேற்பாடு தற்காலிகமானதாக மைந்து விட்டால் முஹாஜிர்களின் பிரச்சினை தீராது எனக் கருதிய நபியவர்கள் மதீனா வாசிகள் ஒவ்வொருவரோடும் முஹாஜிர்கள் ஒவ்வொருவரையும் சகோதரர்களாக்கி விட்டார்கள். இவர்கள் சுய உழைப்பில் மட்டுமன்றி வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் பிரச்சினைகளை எதிர் கொள்வதில் சகோதரர்களாகத் தொழிற்பட்டார்கள். இதற்கும் அப்பால் அவர்களது சொத்திலும் வாரிசுரிமைப் பங்கைப் பெற்றனர். சொத்தில் பங்கு வழங்கும் இச்செயற்பாடு அசாதாரண ஒரு சூழலுக்கு மிகப் பொருத்தமானதாக இருந்த போதும் இரத்த உறவின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட முடியாததாக இருந்ததால் மதீனாவின் வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டும் பத்ருப் போரில் ஓரளவு கனீமத்துப் பொருட்கள் கிடைத்தும் இருந்ததால் அல் குர்-ஆன் இக்கொள்கை வழிச் சகோதரத்துவத்திற்குட்பட்ட வாரிசுரிமை மரபை ரத்துச் செய்தது. எனினும், வாரிசுரிம்னை தவிர்ந்த ஏனைய அனைத்து அம்சங்களிலும் இவர்கள் தொடர்ந்தும் சகோதரர்களாகவே பிணைக்கப்பட்டிருந்தனர்.

இச்சகோதரத்துவ இணைப்பானது அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஓர் உடனடித் தீர்வாக மட்டும் அமையாது நபியவர்கள் அமைக்க விரும்பிய சமூக அமைப்புக்கான ஓர் அடித்தளமாகவும் அமைந்தது. வர்க்க, கோத்திர, நிற, மொழி பேதமற்ற ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப இச்சகோதரத்துவ உணர்வு பெருமளவில் உதவியது.


மஸ்ஜிதுல் நபவியின் பங்கு

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற பின்னர் மதீனாவில் மேற்கொள்ளப்பட்ட முதன்மையான பணிகளுள் மஸ்ஜித் நிர்மாணமும் ஒன்றாகும்.  மக்கா வாழ்க்கைப் பகுதியில் மஸ்ஜிதுகளை நிறுவும் வாய்ப்பு நபியவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் ஹிஜ்ரத்தைத் தொடர்ந்து குபாவில் மஸ்ஜிதுத் தக்வாவும் மதீனாவில் மஸ்ஜிதுல் நபவியும் நிர்மாணிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பேரீத்தம் மரக் குற்றிகளாலும் பேரீந்து ஓலைகளினாலும் எளிய முறையில் மஸ்ஜிதுல் நபவி எழுப்பப்பட்டது.

நபியவர்கள் எங்கு தங்கினாலும் அங்கு முளிம்கள் ஒன்றுகூடக் கூடிய வகையில் ஒரு மஸ்ஜிதை முதலில் கட்டிவிடுவார்கள். மஸ்ஜிதுல்  குபாவை இதற்குதரணமாகக் குறிப்பிடலாம். இந்தவகையிலேயே மஸ்ஜிதுன் நபவியும் அமைந்ததெனலாம். இஸ்லாத்தில் மஸ்ஜிதுக்கு வழங்கப்படக்கூடிய முக்கியத்துவத்துகு இவை போதிய சான்றாகும். இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகள் யாவும் ஆன்ம பரிபக்குவத்தை நோக்காகக் கொண்டவை மட்டுமன்றி பரஸ்பர ஒத்துழைப்புக்கான  அடிப்படைகளைப் பலப்படுத்துபவையுமாகும். ஐவேளைத் தொழுகை, ஜுமாத் தொழுகை, பெரு நாள் தொழுகை முதலாம் சகல வழிபாடுகளும் முஸ்லிம்களின் ஒற்றுமை, ஐக்கியம், ஒருமித்த இலக்குகள் போன்றவற்றை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.

இவ்வகையிலேயே மஸ்ஜிதுன் நபவி நபியவர்களால் மதீனா நகரில் நிறுவபட்டது. மக்காவில் அமைக்க இயலாது போன சமூக அமைப்பை மதீனாவில் கட்டியெழுப்ப ஆயத்தமானார்கள்.  அந்த இலக்கை அடைவதற்கு மஸ்ஜித் என்ற பெயரில் ஒரு சமூக நிறுவனம் அவசியமாகியது. மக்களை ஒன்றுகூட்டும் இடமாக ம்ஸ்ஜிதும் ஒன்று கூட்டும் அழைப்பாக  அதானும் அமைந்தது. இங்கு கூட்டுத் தொழுகைக்காக ஒன்றுகூடியோர் அதனூடாக சமூக இணக்கத்துக்கும் இயக்கத்துக்குமான பயிற்சிகளைப் பெற்றனர்.இவற்றுக்கும் மேலாக அங்கு வந்த மக்களுக்கு தலைவரைத் தெரிவு செய்தல், தலைமைக்குக் கீழ்ப்படிதல், தலைமையின் தவறைச் சுட்டிக் காட்டல் மக்களோடு இனக்கமாக நடத்தல் பரஸ்பர் உதவி ஒத்தாசை செய்தல் முதலாம் பயிற்சிகளும் கூட்டுத் தொழுகையினூடாக வழங்கப்பட்டன.

இந்த மஸ்ஜித் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கான பயிற்சிப் பாசறையாக மாத்திரமன்றி உலகியல் விவகாரங்களுக்கான ஒரு மையமாகவும் விளங்கியத். அங்கு நடைபெற்ற கல்விப் போதனைகளில் அஸ்ஹாபுஸ்-ஸுப்பாக்கள் நிரந்தர மாணவர்களாக அமர்ந்திருந்தனர். வாரந்தம் குத்பாக்கள் இடம் பெற்றதோடு மக்காளது நாளந்தத் தேவைகள் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடல்களும் நடைபெற்றன.வழக்கு விசாரணையின் பின்னர் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்திகளை வரவேற்க தனியிடன் அமைக்கப்பட்டது. பைத்துல் மாலின் மையயமாகவும்  இராணுவப் பள்ளியாகவும் தொழிற்பட்டது. மதீனத்து முஸ்லிம் சமூகத்தின் தலைவரான நபியவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களைச் சந்திக்க வந்தோர் இனகேயே சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உயர் சாதியினர் எனக் கருதப்பட்ட குறைஷியர்,மதீனத்து சுதேசிகள், இஸ்லாத்தை ஏற்ற யூதர்கள், வெளிப் பிரதேச் முஸ்லிம்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும்  முரண்பாடுகளைத் தவிர்த்து ஒருமுகப்பட்டோடு வாழும் நிலையை நபியவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஏற்படுத்திக் கொடுத்தது.

மதீனாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி

முக்கிய நிகழ்வுகள்

மதீனாவில் நபியவர்கள் நிலைகொண்டமையானது குறைசியருக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வெஞ்சினத்தையும் அமைதியின்மையையும் தோற்றுவித்தன.முஹம்மத் மதீனத்து சமூகத்த்ன் தலைவராகிவிட்டார் என்பதையும் நாளுக்கு நாள் இஸ்லாமிய அரசு செழிப்புற்றோங்கி வருவதையும் கண்டு கலங்கி நின்றனர். எனவே அவர்கள் மதீனாவில் அமையப் பெற்ற இஸ்லாமிய அரசை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டுமெனத் தீர்மார்னித்தனர். எதிரிகளின் இத்தகைய தீர்மானம்தான் பிற்காலத்தில் சந்திக்க நேர்ந்த யுத்தங்களாகவும் உடன்படிக்ககளாகவும் வேறு கில முக்கிய நிகழ்வுகளாகவும் வெற்றிகளாகவும் அமைந்தன.

பத்ர் யுத்தம்
இந்த யுத்தம் ஹிஜ்ரி 2ம் ஆண்டு ரமழான்மாத 17ம் தினத்தில் நிகழ்வுற்றது. ஷாமிலிருந்து மக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வியாபாரக் குழுவை வழிமறிக்குமாறு நபியவர்கள் ஸஹாபாக்களைப் பணித்தார்கள். குறைஷிகளைப் பயமுறுத்தவேயன்றி அவர்களோடு யுத்தம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் நபியவர்கள் இதனைச் செய்யவில்லை. எவ்வாறாயினும் வியாபாரக் குழுவினர். ஸஹாபிகளிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

வியாபாரக் குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற அபூஸுப்யான் பாதுகாப்பு உதவிகோரி முன்னதாகவே குறைஷியரிடம் தூதனுப்பியிருந்தமையால் சுமார் 1000 போராளிகளோடு குறைஷியர் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்தனர். அவர்களில் 600 போர்க்கவசம் அணிந்த வீரர்கள். கவச்மிடப்பட்ட 100 குதிரைகள்; 700 கோவேறு கழுதைகள். இவற்றுக்கு அப்பால் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக  மேளம் கொட்டி வசை பாடவெனப் பெண்களையும் அழைத்து வந்தனர்.

முஸ்லிம்களில் 313/314 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்ஸார்களாவர். அவர்களிடம் 70 ஒட்டகைகளும் 2 /3 குதிரைகளுமே காணப்பட்டன. இதனால் ஸஹாபாக்கள் ஒட்டகைகளில் மாரி மாறி அமர்ந்து  யுத்த களத்தை நோக்கிப் பயணித்தனர்.

ஈற்றில் இரு அணியினரும் ரமழான் 17ல் மதீனாவுக்குத் தென்-மேற்காக உள்ள பத்ர் எனும் இடத்தில் சந்தித்துக் கொண்டன. அந்த விதமான போர்ப் பயிற்சியுமற்ற முஸ்லிம்கள் ஆயுதம் தாங்கிய 1000 எதிரிகளோடு போரிட்ட்டு வெற்றியீட்டினர். எதிரிகளில்  அபூஜஹ்ல், உத்பா, உமையா போன்ற குறைஷித் தலைவர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இவர்கள் மனிதத் தன்மையொடு நடாத்தப் பட்டனர். முஸ்லிம்களின் வெற்றியோடு இந்த யுத்தம் நிறைவு பெற்றது.

இந்த யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் புதியதொரு திருப்பத்தையும் மகத்தான மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இஸ்லாம் எனும்  சத்தியம் அசத்தியத்தோடு போரிட்டு வெற்றி பெற்றது. ஜாஹிலிய்யத்தினாதிக்கத்துக்கு   இதனூடாக முடிவு கட்டப்பட்டது. பத்ருப் போரின் வெற்றி குழந்தைப் பருவத்தில் இருந்த இஸ்லாத்தைத் துரித வளர்ச்சி பெறச் செய்ததோடு  அதன் செல்வாக்கை அரபு உலகெங்கும் ஊன்றவும் வழிவகுத்தது. நபியவர்கள் மதீனாவில் பெற்றிருந்த செல்வாக்கை மேலும் வலுப்பெறச் செய்தது. முஸ்லிம்கள் நபியவர்கள் மீது  வைத்திருந்த நம்பிக்கையை மேலும் பலம் பெறச் செய்தது. மதீனாவில் பயந்தும் ஒதுங்கியும்  வாழ்ந்த முஸ்லிம்கள் தலை நிமிர்து வாழலானர்கள். உண்மையில்   பத்ரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றிதான்  அவர்கள் பிற்காலத்தில் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது.(அல்பிரட் கியூம்)

உஹ்த் யுத்தம்
உஹ்த் யுத்தம் ஹிரி 3 ஷவ்வால் 15ம் நாள் நடைபெற்றது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழி தீர்த்துக்கொள்ளும் வகையில் குறைஷியர் மதீனா சென்று நபியவர்களோடு யுத்தம் செய்யத் தயாராகினர். குறைசியர் தம்மோடு நேசம் கொண்டிருந்த 3000 பேரைத் திரட்டிக் கொண்டு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர்.  அவர்களில் 700கவசமணிந்த படை வீரர்கள், 200 குதிரை வீரர்கள் உட்பட  17 பெண்களும் அடங்கி இருந்தனர். பெண்கள் குழுவில் அபூஸுபியானின் மனைவி ஹிந்தாவும் உள்ளடங்கியிருந்தார். இவரது தந்தை பத்ரில்  கொல்லப்பட்டிருந்தார்.  குறைசிப் படை மதீனாவுக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள உஹ்த் மலைக்கு முன்னாலுள்ள பள்ளத்தாக்கை வந்தடைந்தது.

உஹத் மலைச்சாரல் உருக்கி வார்க்கப்பட்ட கற்கோட்டை போன்றது. எனினும், அம்மலையில் கணவாய் ஒன்றிருந்தது. அக்கணவாயில் திறமை வாய்ந்த ஐம்பது அம்பு வீரர்களை அப்துல்லாஹ் இப்னு சுபைர் என்பவரின் தலைமையில் நிறுத்தி, வெற்றி ஏற்பட்டாலும் தோல்வி ஏற்பட்டாலும் அவ்விடத்தை விட்டும் சிறிதும் நகரக் கூடாது என்றும், எதிரிகள் மீது ஓயாமல் அம்பு எய்து கொண்டிருக்க வேண்டுமென்றும் நபியவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

போர் ஆரம்பமானது. முஸ்லிம்கள் எதிரிகளைத் தோற்கடித்தனர். பகைவர்கள் பின்வாங்கி ஓடவே முஸ்லிம்கள் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை சூறையாடலாயினர். கணவாயிலிருந்த முஸ்லிம் வீரர்களும் இதனைக் கண்ணுற்று, பெருமானாரின் கட்டளையையும் தம் தளபதி இப்னு சுபைரின் எச்சரிக்கையையும் மீறி கணவாய்க் காவலை விட்டு பகைப் பொருட்களைச் சூறையாட ஓடினார்கள். இதனை எப்படியோ கண்டுகொண்ட எதிரிகளின் தளபதி காலித் இப்னு வலீத் நூறு வீரர்களுடன் பாய்ந்து சென்று கணவாயைப் பிடித்துக் கொண்டார். இதனால், முஸ்லிம்களுக்கு முற்றிலும் சாதகமாக இருந்த போர் மறுபக்கம் திரும்பலாயிற்று. காலிதும் அவர்களுடைய வீரர்களும் ஓயாமல் அம்பெய்து முஸ்லிம் படையை நிலைகுலையச் செய்தனர். இதே சமயத்தில் இப்னு காமிய என்ற குறைஷி வீரன் நபியவர்களை நோக்கிக் கற்களை வீசி எறிந்தான். இதனால், நபியவர்களின் முன் பல்லொன்று உடைந்து போயிற்று. எனினும், முஸ்லிம்கள் அஞ்சாமல் நின்று நெஞ்சுரத்தோடு போரிட்டனர். முஸ்லிம்களின் உக்கிரமான தாக்குதலால் மீண்டும் எதிரிகள் பின் வாங்கினர். முஸ்லிம்கள் மீண்டும் அக்கணவாயைக் கைவசப்படுத்திக் கொண்டனர். இப்போர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இப்போரில் ஹம்ஸா (ரழி), முஸ்-அப் (ரழி) உட்பட சுமார் 70 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் படுகாயமுற்றனர். எனினும், குறைஷியரில் சுமார் 22 பேர் மாத்திரமே கொலை செய்யப்பட்டனர்.

இப்போரில் முஸ்லிம்கள் முழுமையாகத் தோல்வி அடையவில்லையாயினும் அதிக இழப்பும் சிரமங்களும் அவர்களுக்கு ஏற்பட்டன. சில வரலாற்றாசிரியர்கள் இதனை முஸ்லிம்களின் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களது கட்டளையை மீறித் தங்களின் சொந்த விருப்பத்தின் படி நடந்தமையினாலேயே இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற பாடத்தை உஹ்த் போர் முஸ்லிம்களுக்குக் கற்பித்தது. இப்பாடத்தைத் தொடர்ந்து, அவர்கள் எச்சமயட்த்திலும் நபியவர்களின் ஆணையை மீறவில்லை. இதனால், அவர்களுக்கு தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.

அகழி யுத்தம் (அஹ்ஸாப் போராட்டம்)

ஹிஜ்ரி 5 ஷவ்வால் மாதம் இடம்பெற்ற இந்த யுத்தம் ஹந்தக் போர் எனவும் அழைக்கப்படுகிறது.

பனூ நுழைர் கோத்திரத்தார் நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்களின் சில தலைவர்கள் மக்காவில் உள்ள குறைஷியரிடம் வந்து நபியவர்களோடு போரிடுமாறு வேண்டுகோள் விடுத்து ஊக்கமளித்தனர். குறைஷியர் இதற்கு சாதகமான பதிலை வழங்கியதைத் தொடர்ந்து அந்த யூதத் தலைவர்கள் கத்பான் எனும் கோத்திரத்தாரிடம் சென்றனர். அவர்களும் இவர்களுக்கு சாதகமாகப் பதிலளித்தனர். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து மிக உற்சாகத்தோடு மதீனாவை நோக்கிப் படையெடுத்தனர். இதனை அறிந்த நபியவர்கள் தோழர்களோடு கலந்தாலோசித்த போது ஸல்மான் எனும் தோழர் மதீனாவைச் சுற்றி அகழி வெட்டுமாறு ஆலோசனை வழங்கினார். இதனை ஏற்ற நபியவர்கள் அகழி வெட்டும் பணியில் ஈடுபடுமாறு தோழர்களுக்குப் பணித்ததோடு தாமும் அப்பணியில் இணைந்து கொண்டார்கள்.

குறைஷிகளும் அவரது சகாக்களும் மதீனாவை வந்தடைந்ததும் தமக்கு முன்னால் அகழி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு பீதியடைந்தனர். ஏனெனில், அரபிகளைப் பொறுத்த வரை இந்த நடவடிக்கை புதுமையானதாகவே இருந்தது. போருக்கு வந்த காபிர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 ஆகவும் முஸ்லிம் போராளிகளின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆகவும் காணப்பட்டன.

காபிர்களின் குதிரை வீரர்களில் சிலர் அகழியின் ஒரு புறம் இருந்த ஒடுக்கமானதோர் இடத்தைப் பயன்படுத்தி உட்சென்றதால் யுத்தம் ஆரம்பமானது. முஸ்லிம்களும் அவர்களோடு போரிட்டனர். பிறகு, நுஐம் இப்னு மஸ்-ஊத் என்பவர் நபியவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறவே அதற்கிணங்க நபியவர்கள் நீங்கள் எங்களில் ஒருவராக ஆகிவிட்டீர்கள். எனவே, உங்களால் முடியுமாயின் அவர்களை ஏமாற்றி விடுங்கள். ஏனெனில், யுத்தம் என்பது ஏமாற்றுவதுதான். என்று குறிப்பிட்டார்கள்.

நுஐமும் தனது அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி குறைஷியர், அவர்களின் நேசர்களுக்கிடையேயும் பனூ குறைழாக்களுக்கிடையேயும் பிளவை ஏற்படுத்தினார். இரண்டு பிரிவினரது உள்ளங்களிலும் அடுத்த பிரிவினர் பற்றிய சந்தேகங்களை விதைத்து விட்டார்.

கடுமையான குளிரைக் கொண்ட மாரி கால இரவொன்றில் அல்லாஹ் அவர்கள் மீது பலமானதொரு காற்றை அனுப்பினான். இதன் காரணமாக அவர்களது தீப்பந்தங்கள் அணைந்து போனதோடு முகாம்களும் அழைந்து போயின. இதனால், அவர்களது உள்ளங்களில் பயம் ஆட்கொண்டு விடவே குறித்த இரவிலேயே அவர்கள் வெளியேறி விட்டார்கள். முஸ்லிம்கள் காலையில் எழுந்து பார்த்த போது எதிரிகளில் எவரியும் காண் முடியவில்லை. இந்த யுத்தம் தொடர்பாக அல் குர்-ஆன் சூரா அஹ்ஸாப் 9 ம் வசனம் முதல் 11ம் வசனம் வரை குறிப்பிடுகிறது.

மதீனா நகர் மிகப் பெரும் ஆபத்தொன்றில் இருந்து இறைவனின் வல்லமையினால் காப்பாற்றப்படது. இஸ்லாம் இப்போரின் மூலம் மிகப் பெரிய வெற்றியொறைப் பெற்றுக் கொண்டதோடு அது அடைந்திருந்த ஸ்தானத்தையும் ஸ்திரப்படுத்திக் கொண்டது.


கைபர் போர்
இந்த யுத்தம் ஹிஜ்ரி 7ம் ஆண்டு முஹர்ரம் இற்திப்பகுதியில் நடைபெற்றது. கைபர் பிரதேசம் ஷாம் பக்கமாக மதீனாவுக்கு வடக்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள, யூதர்கள் வாழ்ந்த ஒரு பெரு-நிலப்பரப்பாகும்.ஹுதைபிய்யா மூலம் ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொண்ட நபியவர்கள் மதீனாவின் எல்லைப் புறங்களில் வாழ்ந்த யூதக் குழுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்டார்கள். ஏற்கனவே மதீனாவில் வாழ்ந்த யூதர்களை வெளியேற்றி விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைபர் பிரதேசத்தில் யூதர்களுக்கு மிகப் பாதுகாப்பான அரண்கள் காணப்பட்டன. அவற்றில் சுமார் 10,000 போராளிகள் வாழ்ந்து வந்தனர். பாரியளவிலான ஆயுத பலத்தையும் ஏனைய வசதிகளையும் பெற்றிருந்த அவர்கள் மிக மோசமானவர்களாகவும் தந்திரமிக்கோராகவும் ஏமாற்றுக்கரர்களாகவும் காணப்பட்டனர். எனவே, முஸ்லிம்களின் தலைநகரான இவர்கள் பிரச்சினைக்குரியவர்களாக மாறு முன்னர் அவர்களது பிரச்சினையை அவசியம் தீர்த்து விட வேண்டி இருந்தது.

இதன் காரணமாகவே நபியவர்கள் முஹர்ரம் மாதத்தின் இறுதிப் பகுதியில் 1600 போர் வீரர்களோடு கைபரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் 200 குதிரை வீரர்களும் அடங்கியிருந்தனர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துகொண்ட எல்லா ஸஹாபாக்களையும் நபியவர்கள் யுத்தத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். வீரர்களுக்கு நீர் வி நியோகிக்கவும் காயமுற்றோருக்கு முதலுதவி செய்யவும் சில பெண்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைபரில் ஆறு கோட்டைகள் இருந்தன. அவ்ற்றில் 20,000 வீரர்கள் ஆயுதம் தரித்து நின்றனர்.

யுத்தம் ஆரம்பமானது. முஸ்லிம்கள் ஒவ்வொரு கோட்டையாக வெற்றிகொள்ள ஆரம்பித்தார்கள்.  முதலில், உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நாயிம் எனும்  கோட்டையைத் தாக்கித் தம்வசமாக்கினர். இதனைத் தொடர்ந்து ஏனைய கோட்டைகளும்  ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கொள்ளப்பட்டன. இறுதியில் இரண்டு கோட்டைகள் மாத்திரமே யூதர்கள் வசமிருந்தன. அக்கோட்டைகளில் இருந்த யூதர்கள் நபியவர்களோடு சமாதானம் செய்துகொள்ள விரும்பினர். இதன்படி தமது போராளிகளின் இரத்தத்தைச் சிந்தக் கூடாதெனவும் தமது பெண்கள், பிள்ளைகளோடு கைபர் பிரதேசத்திலிருந்து தாம் வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும், ஔவொருவரும் ஒரேயோர் ஆடையை மாத்திரமே எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிடனர். இதற்கு உடன்பட்ட நபியவர்கள் ஏதும் மறைத்து வைத்து வைத்திருந்தால் அலாஹ்வினதும் அவனது தூதரினதும் பொறுப்பிலிருந்து அவர்கள் நீன்ங்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

பின்னர் யூதர்கள் அவ்விரு கோட்டைகளில் இருந்தும் வெளியேறிச் சென்றனர். முஸ்லிம்கள் அங்கு அதிகமான ஆயுதங்களையும் தௌராத் பிரதிகளியும் கண்டெடுத்தார்கள். யூதர்கள் அவற்றை மீளக் கேட்டு வரவே நபியவர்களும் அவற்றைத் திருப்பிக் கொடுக்குமாறு பணித்தார்கள். இந்த யுத்தத்தில் 93 யூதர்கள் கொல்லப்பட்டதோடு முஸ்லிம் தரப்பில் 15 பேர் ஷஹீதானார்கள். யூதர்களின் கெஞ்சுதலின் பேரில் அவர்களின் விளை நிலங்களுக்கு நிலவரி செலுத்தும் ஒப்பந்தத்தின் கீழ் அவர்களை மன்னித்து, இங்கு தொடர்ந்து குடியிருக்க நபியவர்கள் அனுமதி  அளித்தார்கள்.

இந்த யுத்தங்களுக்கு அப்பால் நபியவர்கள் மரணிக்கும் வரைக்குமான காலப் பகுதிவரை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்களும்  நடைபெற்றுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
1. முஅத்தாப் போராட்டம்  (ஹிஜ்ரி 8, ஜமாதுல் ஊலா மாதம்
2. ஹுனைன் யுத்தம் (ஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம் பிறை 10)
3.  தபூக் யுத்தம் ( ஹிஜ்ரி 9. ரஜப் மாதம்)


உடன்படிக்கைகள்

அ). மதீனா சாசனம்

முஹாஜிர், அன்ஸார்களுக்கிடையில் சகோதரத்துவத்தை  ஏஏற்படுத்திய  நபியவர்கள் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் இணைத்து ஒரு சாசனத்தை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் யூத சமூகத்தாருடன் சமாதானமாக வாழ்வதெனவும், அவர்களது மார்க்கம், செல்வங்கள் அனைத்தையுமங்கீகரிப்பதெனவும் ஏற்றுக்கொண்டார்கள்.   இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதல் இஸ்லாமிய அரசுக்கான அடிப்படைகளை அது உள்ளடக்கி இருந்தது. இந்த சாசனத்தில் மானுடத்துவம், சமூக நீதி, மத சகிப்புத் தன்மை, சமூக நலனுக்கான பரஸ்பர ஒத்துழைப்பு முதலாம் அம்சங்கள் விளக்கப்பட்டிருந்தன. (முஸ்தஃபா ஸிbபாஈ)

இந்த நிலையான வரலாற்று ஆவணம் உள்ளடக்கியிருந்த பொதுவான அடிப்படைகளாவன:
1. பிளவுகளற்ற முஸ்லிம் சமூக ஐக்கியம்.
2. உரிமைகளிலும் கௌரவத்திலும் சமூக அங்கத்தவர்கள் அனைவரும் சமமானவர்கள்.
3. அநியாயம், பாவம், அத்துமீறல் போன்றவற்றுக்கெதிரான சமூகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பு.
4. எதிரிகளுடனான உறவுகளைத் தீர்மானிப்பதில் சமூகப் பங்கேற்பு, ஒரு முஃமின் இன்னொரு முஃமினுடனன்றி சமாதானம் செய்து கொள்ள முடியாது.
5. சிறந்ததும் நேர்த்தியானதும் நிலையானதுமான ஒழுங்குகளின் அடிப்படியில் சமூகத்தைக் கட்டியெழுப்புதல்.
6. அரசுக்கும் அதன் பொது ஒழுங்குகளுக்கும் எதிராக செயற்படுபவர்களுடன் போராடுவதும் அவர்களுக்கு உதவி செய்வதைத் தவிர்த்துக் கொள்வதன் அவசியமும்.
7. முஸ்லிம்களுடன் சமாதானமாகவும் ஒத்துழைப்போடும் வாழ விரும்புவோரைப் பாதுகாத்தலும் அவர்கள் மீது அத்துமீறுதல், அநியாயம் இழைத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுதலும்.
8. முஸ்லிமல்லாதோர் அவர்களது மார்க்கத்தையும் செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்ள உரிமையுடையவர்கள். அவர்கள் ம்முஸ்லிம்களின் பின்பற்ற வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள். அத்துடன், அவர்களது செல்வங்கள் சூறையாடப்படவுமாட்டா.
9. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதோரும் நாட்டின் செலவினங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
10. எதிரிகள் மேற்கொள்ளும் அத்துமீறல்களினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முஸ்லிம்களுடன் முஸ்லிமல்லாதோரும் ஒத்துழைக்க வேண்டும்.
11. நாடு யுத்த சூழலில் இருக்கும் போது முஸ்லிமல்லாதோரும் யுத்த செலவினங்களில் பங்கெடுக்க வேண்டும்.
12. அநியாயம் இழைக்கப்படுகின்றவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். மேலும், அத்துமீறலுக்கு உட்படுகின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது உதவ வேண்டும்.
13. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதோரும் நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
14. சமூக நலன் சமாதானத்தில் தங்கியிருக்குமெனின், முஸ்லிமான, முஸ்லிமல்லாத, நாட்டினுடைய அனைத்துப் பிரஜைகளும் அதனை ஏற்க வேண்டும்.
15. ஒருவர் செய்த குற்றத்துக்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார்.குற்றமிழைப்பவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் எதிராகவே அதனைச் செய்கிறார்.
16. நாட்டுக்கு உள்ளும் வெளியேயும் நடமாடுவதற்கான சுதந்திரம் நாட்டின் பாதுகாப்புக்கேற்ப உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
17. பாவம், அநியாயம் இழைப்பவனுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது.
18. இறையச்சம், நன்மை, பரஸ்பர புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையிலேயே சமூகம் கட்டியெழுப்பப்படும். அது பாவம், அத்துமீறலின் அடிப்படையில் அமைந்திருக்க மாட்டாது.

ஆ). ஹுதைபிய்யா உடன்படிக்கை

இ ந் நிகழ்வு ஹிஜ்ரி 6ம் ஆண்டு துல்கஃதா மாதம் இடம்பெற்றது. நபியவர்கள், தானும் தனது தோழர்களும்  தலை முடி சிரைத்தவர்களாக  கஃபாவுக்குள் அச்சமின்றிப் பாதுகாப்பாக  நுழைவதைக் கனவில் கண்டார்கள் எனவே உம்றாச் செய்வதற்காக மக்கா செல்லத் தயாராகுமாறு மக்களுக்கு நபியவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.

சுமார் 6 வருடங்களாக கஃபாவைத் தரிசிக்கும் சந்தர்ப்பத்தை இழந்திருந்த முஹாஜிர்களுக்கும் அன்சார்களுக்கும் கஃபாவைக் காண வேண்டும் என்ற பேரார்வத்தோடு நபியவர்களோடு அவர்கள் மக்காவை நோக்கிச் சென்றார்கள். அவர்களோடு சில நாட்டுப் புற அரபிகளும் இணைந்து கொண்டனர். நபியவர்கள் கஃபாவை கண்ணியப்படுத்துவதற்கென வழமையாகக் கொண்டு செல்லும் ஆடு, ஒட்டகைகளை தமக்கு முன்னால் ஓட்டிச் சென்றார்கள்.

நபியவர்கள் தாம் யுத்தத்துக்காக வரவில்லை என்பதை குறைஷியருக்கு உணர்த்துவதற்காக துல் ஹுழைஃபா எனுமிடத்தில் உமராவுக்கான இஹ்ராமைக் கட்டிக் கொண்டார்கள். சுமார் 1500 பேர் நபியவர்களோடு வருகை தந்திருந்தனர். அக்காலத்தில் பயணிகள் தமது தற்காப்புக்கென எடுத்துச் செல்லும் உறை வாள்களையே நபியவர்களும் மக்களும் எடுத்துச் சென்றிருந்தனர். அஸ்ஃபான் எனுமிடத்தை இவர்கள் அடைந்த போது நபியவர்களிடம் ஒருவர் வந்து "உங்களது வருகையை அறிந்த குறைஷியர் நீங்கள் அங்கு நுழைவதை தடுக்கும் நோக்கில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து புலித்தோலை அணிந்தவர்களாக வெளியேறி உள்ளார்கள்" எனக் கூறினார்.

இதைக் கேட்ட நபியவர்கள் "குறைஷியருக்கு சாபம் உண்டாகட்டும்.அவர்கள் எங்களுக்கு வழி விடாமல் இருக்க அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கிறது, அவர்கள் எனக்குத் தீங்கு செய்யவே விரும்புகிறார்கள். அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தந்தால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தினுள் நுழைந்து விடுவார்கள். அல்லாதபோது அவர்களிடம் பலமிருக்கும் வரை போராடுவார்கள். குறைஷியர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எனக்கு வழங்கிய இத்தூதுக்கு வெற்றி கிட்டும் வரை அல்லது இப்பாதையில் மரணிக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்" எனப் பதிலுரைத்தார்கள்.

நபியவர்களும் தோழர்களும் மக்காவுக்கு சமீபமாக உள்ள ஹுதைபிய்யா (தற்போது இப்பிரதேசம் மக்கா-ஜித்தா வீதியில் அமைந்துள்ளது) என்ற இடத்தை அடைந்தார்கள். அவ்வேளை, ஹுஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் நபியவர்களின் வருகைக்கான காரணத்தை வினவிய போது தாம் உம்ராவை நிறைவேற்றும் நோக்கிலேயே வந்துள்ளதாக அவர்களிடம் குறிப்பிட்டார்கள். பின்னர், அவர்கள் குறைஷியரிடம் சென்று நீங்கள் முஹம்மதுடைய விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் எனவும் அவர் யுத்தம் செய்ய வரவில்லை. மாறாக, கஃபாவை தரிசிக்கவே வந்திருக்கிறார் எனவும் கூறினர். இது கேட்ட குறைஷியர் "இல்லை, இல்லை. இறைவன் மீது ஆணையாக! அவர் எமது பிரதேசத்தினுள் ஒருபோதும் பலாத்காரமாக நுழைய முடியாது. அரபு மக்கள் இது தொடர்பாக எம்மைப் பற்றி இழிவாகப் பேசவும் கூடாது" எனக் கூறினார்கள்.

இவ்விடயம் குறித்து நபியவர்களோடு நபியவர்களோடு பேசுவதற்கென குறைஷிகள் தமது தரப்பிலிருந்து உர்வத் இப்னு மஸ்-ஊத் என்பவரை அனுப்பி வைத்தனர். இவருக்கும் சில ஸஹாபிகளுக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின் குறைஷிகளிடம் அவர் திரும்பிச் சென்று நபித்தோழர்கள் நபியவர்கள் மீது வைத்துள்ள் அன்பு, கௌரவம், அபிமானம் குறித்தும் அவர்கள் சமாதானத்தில் கொண்டுள்ள வேட்கை குறித்தும் எடுத்துக் கூறினார். ஆயினும், குறைஷியர் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர், நபியவர்கள் தமது வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்களை குறைச்ஷியரிடம் அனுப்பி வைத்தார். மக்கா சென்ற உஸ்மான் (ரழி) அவர்களின் வருகை தாமதமாக அமையவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தி முஸ்லிகளுக்கு மத்தியில் பரவத் தொடங்கியது. இதனை அறிந்த நபியவர்கள் இக்கூட்டத்தாரோடு யுத்தம் புரியாது இந்த இடத்திலிருந்து நகர மாட்டோம் எனக் கூறிவிட்டு ஜிஹாதில் ஈடுபடவும் அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைய்யவும் தன்னிடம் பைஅத் செய்யுமாறு தோழர்களை வேண்டிக் கொண்டார்கள். இதன்படி அங்கிருந்த மரமொன்றின் நிழலிலிருந்து போராட்டத்தில் போராட்டத்தில் பின்வாங்குவதில்லை எனவும் ஒன்று சமாதானம் அல்லது வீர மரணம் என நபியவர்களது கையில் தோழர்கள் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

நபியவர்கள் இவ்வாறு தோழர்களிடம் பைஅத் செய்து கொண்டதை அறிந்த குறைஷிகள் அது குறித்து அச்சம் கொண்டு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக சமாதானம் செய்து கொள்ள முன்வந்தனர். இதன்படி, சில நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையொன்று குறைஷியருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கைச்சாத்தானது. இந்த உடன்படிக்கையே இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை என வழங்கப்படுகிறது.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நிபந்தனைகள்
1. நபியவர்களும் தோழர்களும் இவ்வருடம் உம்ரா செய்யாது மதீனாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அடுத்த வருடம் மூன்று நாட்கள் மட்டுமே மக்காவில் தங்கிச் செல்ல முடியும். அவ்வாறு வரும் போது பயணிகள் வழக்கமாக எடுத்துச் செல்லும் உறை வாள்களையும் ஈட்டிகளையும் மட்டுமே எடுத்து வர முடியும்.
2. இரு பிரிவினருக்கிடையேயும் 10 வருடங்களுக்கு யுத்தம் இடம்பெற மாட்டாது. இவ்விடைக்காலத்தில் இரு தரப்பினரும் எவ்வித பயமுமின்றி நாட்டில் வாழ முடியும்.
3. முஹம்மதிடமிருந்து மக்கா வரும் எவரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அதுபோலவே, மக்காவில் முஹம்மதிடம் வரும் அனைவரும் மக்காவுக்கு திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும்.
4. இரு தரப்பினரும் தாம் விரும்பிய ஏனைய வர்க்கத்தினரோடு உடன்படிக்கைகள் செய்து கொள்ளலாம். எனினும், ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரின் ஆதரவாளர்களுக்கெதிராக போர் தொடுக்கக் கூடாது.

இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்காக குறைஷியர் சார்பில் சுஹைல் இப்னு அம்ர் என்பவர் கலந்து கொண்டார். ஈற்றில் குறைஷியரது விருப்பத்துக்கு ஏற்பவே உடன்படிக்கையும் கைச்சாத்தானது. உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முஸ்லிமகள் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறித்த நிபந்தனைகள் தொடர்பாக தோழர்கள் நபியவர்களோடு தர்க்கிக்கவும் முனைந்தார்கள். நபித்தோழர் உமர் (ரழி) மிகக் கடுமையாகவே இருந்தார். இந்த இக்கட்டான நிலையிலும் நபியவர்கள் உறுதி குலையாதவராக நின்று "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை. அவன் என்னை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வழிதவறச் செய்ய மாட்டான்" என்று கூறி அவர்களின் வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

நபித்தோழர்களுக்கு அத்திரத்தை ஊட்டிய ஆனால், நபியவர்கள் ஏற்றுக் கொண்ட இந்த நிபந்தனைகள் மேலோட்டமாக முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினாலும் குறித்த நிபந்தனைகளின் பயன்களை பிற்பட்ட காலங்களில் காண முடிந்தது. இவை நபியவர்களின் தூர நோக்கு, அறிவுக் கூர்மை, கருத்திலும் செயலிலும் அவர்களை நேர்வழிப்படுத்திய வஹியின் வழிகாட்டல் முதலானவற்றால் பெறப்பட்டனவாகும்.

இந்த வெற்றி குறித்து அல் குர்-ஆன் பின்வரும் வசங்களின் ஊடாக ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிச் செல்லும் வழியிலேயே முன்னறிவிப்புச் செய்தமை நோக்கத்தக்கது.
"(நபியே!) நிச்சயமாக நாம் மிக மகத்தான வெற்றியை அளித்தோம். (அல் ஃபத்ஹ் 1)

இந்த வசனத்தில் வரும் மகத்தான வெற்றி என்பது ஹுதைபிய்யா உடன்படிக்கையின் விளைவுகளுள் ஒன்றாக அமைந்த மக்கா வெற்றியையே சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மக்கா வெற்றி

மக்கா வெற்றி எனபடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு ஹிஜ்ரி 8ம் ஆண்டு ரமழான் மாதம் இடம் பெற்றது.

எந்தவோர் அரபுக்  கோத்திரமும் தமது விருப்பத்தின் பிரகாரம் முஸ்லிம்களுடனோ அல்லது குறைஷியருடனோ உடன்படிக்கை செய்து கொள்ள முடியும் என்ற ஹுதைபிய்யா நிபந்தனையின்படி குஸாஆ எனும் கோத்திரம் நபியவர்களோடும் பக்ர் கோத்திரத்தார் குறைஷியரோடும் உடன்படிக்கை செய்து கொண்டனர். ஹிஜ்ரி 8ல் பக்ர் கோத்திரத்தார் குஸாஆ கோத்திரத்தாரைத் தாக்கி சுமார் 20 பேரைக் கொலை செய்து விட்டிருந்தனர். அதேவேளை குறைஷியர் அவர்களுக்குத் தமது தோழமைக் கூட்டணி என்ற வகையில் ஆயுதங்களையும் செல்வங்களையும் வழங்கி உதவி புரிந்தனர்.

விடயமறிந்த நபியவர்கள் கடும் கோபமடைந்த நிலையில் குறைசியரோடு யுத்தம் செய்யும் நோக்கோடு  குறித்த வருடம் ரமமழான் மாதம் 10ம் நாள் சுமார் 10,000 பேர் கொண்ட படையணியினரோடு மதீனாவிலிருந்து வெளியேறிச் சென்றார்கள். பயணக் களைப்பு மிகுதியால் முஸ்லிம்கள் இடையில் நோன்பையும் முறித்துக் கொண்டனர். முஸ்லிம் படை " மர்ரு லஹ்ரான்" எனுமிடத்தில் தங்கிய வேளை அபூஸுபியானும் மேலும் இருவரும் முஸ்லிம் வீரர்களால் கைது செய்யப்பட்டு நபியவர்கள் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். குறைஷிகளின்  தலைவரும் நபியவர்களின் மிகக் கொடிய எதிரிகளுள் ஒருவருமான  அபூஸுபியான், அவரால் 20 வருடங்க்களாகப் பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு மனிதனின் கருணையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இக்காட்சி மனக் கிளர்ச்சியை அளிக்க வல்லதாயிருந்தது. ஈற்றில் அபூஸுபியான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அபூஸுப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு நபியவர்களுக்கு மக்காவில் இருந்து வந்த எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது. நபியவர்கள் தமது தோழர்களோடு தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு, இந்த மகத்தான வெற்றியை நல்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் வகையில் தமது நெற்றி, ஒட்டகத்தின் திமிலைத் தொடுமளவு தலையை முன்னோக்கித் தாழ்த்தியவர்களாக  மக்காவினுள் நுழைந்தார்கள். முதன்முதலில் கஃபாவினுள் சென்றார்கள். கஃபாவை வலம் வந்த நபியவர்கள் " சத்தியம் வென்றது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் " (17: 81) என்ற வசனங்களை உச்சரித்தவர்களாக அங்கிருந்த 360  சிலைகளையும் அகற்றியதோடு அங்கே ஏகத்துவக் கொள்கொள்கையையும் பிரகடனம் செய்தார்கள். பிறகு கஃபாவில் இரண்டு ரக் அத்துகள் தொழுதுவிட்டு அதன் வாயிலின் முன்னால் நின்று கொண்டார்கள்.

முஹம்மதால் தமக்கு என்னவெல்லாம் நேர்ந்துவிடப் போகிறதோ என்று குறைஷியர். அஞ்சினர். அவர்களைப் பார்த்த நபியவர்கள்; "குறைஷியரே, நான் உங்களுக்கு என்ன செய்வேன் என்று நினைக்கின்றீர்கள்" எனக் கேட்டர்கள். அதற்கு அவர்கள் "நீங்கள் நல்லதையே செய்வீர்கள்; நீங்கள் கண்ணியமான ஒரு சகோதரன்; கன்னியமான ஒரு சகோதரனின் புத்திரர்" எனக் கூறினர். இதனைக்கேட்ட நபியவர்கள், "நபி யூஸுப் கூறிய வார்த்தைகளையே நானும் உங்களுக்குக் கூறுகின்றேன்; இன்று உங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் அனைவரும் விடுதலை பெற்று விட்டீர்கள்; சென்று விடுங்கள்" எனக்கூறி அவர்கள் அத்தனை பேரையும் மன்னித்துவிட்டார்கள். மக்காவினுள் நபியவர்கள் வெற்றியாளராகப் பிரவேசித்தபோது நான்கு பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கினார்கள். நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றிய தோழர்களும் அமைதியாகவும் சமாதானமாகவும் மக்காவினுள்ளே நுழைந்தார்கள். அவர்கள் எந்த வீட்டையும் கொள்ளையடிக்கவுமில்லை; எந்தவொரு பெண்ணையும் நிர்ப்பந்திக்கவுமில்லை.

ஒரு துளி இரத்தமும் சிந்தாது மக்காவைக் கைப்பற்றிய இந்த நிகழ்வு வரலாற்றில் மிக உன்னதமான இடத்தை வகிக்கின்றது. அரேபியரின் சமயத் தலைவராக இருந்த குறைஷியர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும் அரபியா முழுதும் விக்கிரக வழிபாட்டின் பிடியிலிருன்ந்து விடுதலை பெற்றது. நபியவர்களின் பிறந்தகமான, இறைவனின் வேத வெளிப்பாடு முதலில் வெளியான, முதன்முதலில் இஸ்லாமியப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட, பதின் மூன்றாண்டுகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கி ஈற்றில் நபியவர்களை வெளியேற்றிய மக்கமா நகரம் இவ்வெற்றியின் பயனாக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் புனித நகராக மாறியது. இந்த மாபெரும் வெற்றி பற்றி பேராசிரியர் ஹிட்டி பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. "முற்கால வரலாறுகளிலுள்ள எந்தவொரு வெற்றிப் பிரவேசத்தையும் இந்த நிகழ்வோடு ஒப்பீடு செய்து பார்ப்பது மிக மிகக் கடினமான ஒன்றே. (அரேபியர் வரலாறு)

மக்காவை வெற்றி கொண்ட அன்றைய தினம் நபியவர்கள் தோழர் பிலாலிடம் கஃபாவின் மீது ஏறி நின்று ழுஹர் தொழுகைக்காக அதான் கூறுமாறு பணித்தார். இதுவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாது அங்கு குறைஷியருக்கு இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும், நபியவர்கள் மிக முக்கியமானதொரு நோக்கத்திற்காகவே இதனை மேற்கொண்டார்கள்.

மக்காவில் குறைஷியருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அரேபியாவில் மிகப் பழங்காலம் முதல் இருந்து வந்த ஊறிப் போயிருந்த உருவ வழிபாட்டின் வீழ்ச்சியையே குறித்துக் காட்டியது. அரேபியாவின் மக்கா நகரமே உருவ வழிபாட்டுக்கான கேந்திர மையமாக விளங்கி வந்தது. மக்கத்துக் குறைஷியர் தான் பழமை வாய்ந்த மூடக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் பிரபல்யம் பெற்று விளங்கினர். மக்கா முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததோடு அறியாமை இருள் நீங்கி இஸ்லாம் எனும் புதிய நம்பிக்கையின் பேரொளி அரேபியா எங்கும் வியாபிக்கலாயிற்று. இஸ்லாத்தின் பிற்கால வெற்றிகளின் வரலாற்றை பத்ஹ் மக்கா எனப்படும் இந்த மகத்தான மக்கா வெற்றியே ஆரம்பித்து வைத்ததெனலாம்.


இறுதி ஹஜ்

ஹில்ரி 10ம் ஆண்டு நபியவர்கள்  ஹஜ் செய்ய நாடினார்கள். எனவே குறித்த ஆண்டில் துல்கஃதா மாதம் நபியவர்கள் ஹல் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி அரபுலகம் முழுவதும் பரவியது. நபியவர்களோடு ஹஜ்  செய்யக்கூடிய  மகத்தான பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளும் பேரார்வத்தோடு அரபுலகம் முழுவதும் ஒன்று திரண்டது.

நபித்துவம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நபியவர்கள் மேற்கொண்ட ஒரேயொரு ஹஜ் இதுவாகும்.சில வரலாற்றாசிரியர்கள் நபியவர்களின் இறுதி ஹஜ்ஜுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து பதினான்காயிரமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். இதனை அண்ணளவான எண்ணிக்கை என்றே கருதலாம்.

துல்கஃதா மாதம் மதீனாவில் இருந்து புறப்பட்ட நபியவர்கள்துல்ஹஜ் 4ம் நாள் மக்காவை அடைந்தார்கள். மக்கா வந்த நபியவர்கள் முதலில்கஃபாவைத் தவாப் செய்தார்கள். பின்னர் மகாமு இப்ராமில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் ஸஈ செய்துவிட்டு துல்ஹஜ் 8ம் நாள் தோழர்கள் சகிதம் மினாவில் சென்று தங்கினார்கள். அடுத்த நாள் துல்ஹஜ் 9ல் அரபாவைச் சென்றடைந்தார்கள். இங்குதான் நபியவர்கள் வரலாற்றுப் புகழ்வாய்ந்த அந்த சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இந்த உரையைத்தான் இஸ்லாமிய வரலாறு நபியவர்களின் இறுதிப் பேருரை - ஹஜ்ஜதுல் விதா என் அழைக்கின்றது.

இந்த இறுதிப் பேரிரை நிகழ்வில் இரண்டு முக்கிய விடயங்கள் எமது கவனத்தை  ஈர்க்கின்றன.

1. அங்கு சமூகமளித்திருந்த பெருந்திரளான மக்கள் நபியவர்களை விசுவாசித்தவர்களாக, அவர்களது கட்டளைக்குக் கீழ்படிந்தவர்களாக, அவர்களது ரிஸாலத்தை உண்மைப்படுத்துபவர்களாக அரபியத் தீவகற்பத்தின் பல்வேறு பகுதிகளில் இருன்ந்தும் அங்கு வந்து குழுமியிருந்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் தீவிர சிலை வணங்கிகளாகவும் இணைவைப்பாளர்களாகவுமே இருந்து வந்தனர்.

2.நபியவர்கள் இங்கு ஆற்றிய அந்த வரலாற்று முக்கையத்துவம் வாய்ந்த பேருரை மறுமை வரை தோன்றப் போகும் முழு மனித சமுதாயத்தினருக்காகவும் ஆற்றிய மதி நுட்பமானதும் தூர நோக்குக் கொண்டதுமான ஒரு பிரசங்கமாகும். தனது தலைமைத்துவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தனது ரிஸாலத்தையும் பூரணப்படுத்தியதன் பின்னர் நபியவர்கள் அறிவிப்புச் செய்த  அடிப்படைகள்,அவர்கள் தஃவாவினாரம்பத்தில்தனிமையாகவும் இம்சைகளுக்கு உட்படுத்தப்பட்டும், அவர்களைப் பின்பற்றுபவர்கள்  எண்ணிக்கையில் குறைந்தோராகவும், பலவீனமுற்ற நிலையிலுமிருந்த வேளையிலறிவிப்புச் செய்த அடிப்படைகளை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளமை.

நபிகளாரின் இறுதிப் பேருரையின் சுருக்கம்

"மனிதர்களே! எனது பேச்சைச் செவிமடுங்கள். இந்த வருடத்துக்குப் பின்னர் இந்த இடத்தில் உங்களைச் சந்திப்பேனாஎன்பதை அறியேன். இது நபியவர்களின் அற்புதங்களில் ஒன்று. மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் வரை உங்களுடைய இரத்தமும் செல்வங்களும் கண்ணியமிக்க இந்த நாளைப்போல, கண்ணியமிக்க இந்த மாதத்தைப் போல, உங்களுக்குப் புனிதமானவையாகும்.நீங்கள் நிச்சயமாக உங்களுடைய இரட்சகனைச் சந்திப்பீர்கள்.உங்கள் செயல்கள் குறித்தவன் ஊங்களிடம் வினவுவான். இதனை நான் உங்களுக்கு எத்தி வைத்துவிட்டேன்.யாரிடத்தில் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பொருள் இருக்கிறதோ, அவர் அதனை உரியவரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.

"அஞ்ஞான காலத்து பழக்கவழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன.'

"ஓர் அரபிக்கு, அரபியல்லாதாரை விடவோ, அரபியல்லாதோருக்கு, ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை; நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்."

"முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர். உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்."

"அறியாமைக் காலத்து இரத்தப் பழிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமைஎவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸின் மகனுக்கான இரத்தப் பழியை தடை செய்கிறேன். "

அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுவிட்டன. அனைவருக்கும் முதலாக நான் எனது குடும்பத்தாரின் வட்டியை செல்லாத்தாக ஆக்குகிறேன்."

"பெண்கள் தொடர்பாக இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்ண்களுக்கும் உரிமைகள் உள்ளன.அவர்கள் உங்களது கைகளில் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருட்கள்; அவர்களை அன்போடு நடாத்துங்கள்."

"நான் உங்களிடையே ஒரு பொருளை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அதனை உறுதியாயாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் என்றுமே வழி பிறழ்ந்து போகமாட்டீர்கள்.அதுவே அல்லாஹ்வின் புனித கலாமாகும்."

இதன்பிறகு நபியவர்கள் ஷரீஅத் தொடர்பான அடிப்படைச் சட்டங்களை எடுத்துரைத்தார்கள். பின்னர் திரண்டிருந்த சனத் திரளை நோக்கி பின்வருமாறு வினவினார்கள்.

"உங்களிடம் இறைவன் என்னைப் பற்றி விசாரித்தால் என்ன சொல்வீர்கள்?"

" நீங்கள் இறைவனின் தூதை எடுத்துரைத்து விட்டீர்கள்.உங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்" என நாங்கள் கூறுவோம் என்று நபித் தோழர்கள் பதில் கூறினர்.

நபியவர்கள் வானத்தை நோக்கி விரலை உயர்த்தி மூன்று முறை "இறைவா!இதற்கு நீயும் சாட்சியாக இரு!" என்று கூறினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அல்குர் ஆனின் கீழ் வரும் வசனங்கள் இறக்கியருளப்பட்டன.

"இன்று உங்களுக்காக இந்த மார்க்கத்தை பூரணப்படுத்திவிட்டோம். நமது அருளை முழுமையாகப் பொழிந்துவிட்டோம். உங்களுக்காக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக அங்கீகரித்துவிட்டோம்'

இந்த ஹஜ்ஜின்போது நபியவர்கள் ஹஜ் செய்யும் வழிமுறைகள் அனைத்தையும் தாமே முன்னின்று செய்து காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் நபியவர்கள், " என்னிடமிருந்து ஹஜ்ஜின் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு மற்றுமொரு ஹஜ் செய்ய வாய்ப்புக் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை நான் அறியேன்." என்றும்; "இங்கே இப்போது என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் இங்கு நான் கூறிய அறிவுரைகளை இங்கு சமூகம் தராதோருக்கு எடுத்துரைப்பார்களாக!" என்றும் கூறினார்கள்.

நபிகளாரின் இந்த இறுதிப் பேருரை  வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. முஸ்லிம்களின் வாழ்க்கைச் சறப்புக்காக நிகழ்த்தப்பட்ட நபியவர்களின் போதனைகளை இப்பிரசங்கம் நினைவூட்டியது. நபியவர்கள் கொண்டிருந்த இலட்சிய சமுதாயம் பற்றிய கருத்துக்களையும், சகோதரத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு சமுதாயத்தின்  தத்துவத்தையும் பிரகடனம் செய்வதாக இப்பிரசங்கம் அமைந்தது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் சாராம்சமாக அமைந்த இந்தப் பிரசங்கத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் சமத்துவமும் சகோதரத்துவமுமே ஓர் இலட்சிய சமுதாத்தின் உயிர் நாடிகள் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX