பாங்கு (அதான்) என்றால் என்ன?
தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழியில் ‘பாங்கு’ என்றும் கூறப்படும். தமிழிலும் பாங்கு என்றே சொல்லப்படுகிறது. தொழுகைக்கு முன்னால் பாங்கும், இகாமத்தும் சொல்வது சுன்னத்து, பர்ளுத் தொழுகைக்கும், விடுப்பட்ட (கழா) தொழுகைக்கும் தனியாகவோ, கூட்டாகவோ தோலும் போது பாங்கும், இகாமத்தும் சொல்வது நன்று.
தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன?
தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன:
1. முஸ்லிமாக இருத்தல்.
2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல்.
3. ஜனாபத் என்னும் பெருந்தொடக்கு மாதாந்த ருது, பிரசவருது, வுழு முறித்தல் ஆகியன இல்லாதிருத்தல்.
4. உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் நஜீசை விட்டும் துப்பரவாயிருத்தல்.
5. ஆண் பிள்ளைகளும், அடிமையும், அடிமைப் பெண்ணும் தொப்புள் தொடக்கம் முட்டுக்கால் வரை மறைத்தல் (இதற்கு அவ்றத்தை மறைத்தல் என்று கூறப்படும்)
6. கிப்லா என்னும் கஃபாவின் திசையை இயன்றளவு சரிநோக்கிக் கொள்ளுதல்.
7. தொழுகை, தன் மீது தவிர்க்க முடியாத கட்டாய கடமை என்பதை உணர்ந்திருத்தல்.
8. அந்தத் தொழுகைகளின் உரிய நேரங்களை அறிதல்.
9. தொழும் விதத்தை அறிதல்.
10. பர்ளை பர்ளு என்றும் சுன்னத்தை சுன்னத் என்றும் விபரமாக அறிந்திருத்தல்.
தொழுகையின் பர்ளுகள் என்ன?
தொழுகையின் கடமைகள் 19 அவையாவன:
1. நிய்யத்துச் செய்தல் (மனதில் நினைத்தல்)
2. அந்த நிய்யத்துடன் அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைச் சொல்லுதல்.
3. பர்ளுத் தொழுகைகளில் இயன்வர்கள் நின்று தொழுதல்.
4. பிஸ்மில்லாஹ்வுடன் அல்ஹம்து சூரத்தி ஓதுதல்.
5. ருக்கூஃ செய்தல்.
6. அந்த ருக்கூவில் தாமதித்தல்.
7. இஃதிதால் என்னும் சிறு நிலைக்கு உயருதல்.
8. அந்தச் சிறு நிலையில் தாமதித்திருத்தல்.
9. முதலாவது ஸஜ்தா செய்தல்.
10. அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்.
11. முதலாம் ஸஜ்தாவிலிருந்து சிறு இருப்புக்கு வருதல்.
12. அந்தச் சிறு இருப்பில் தாமதித்திருத்தல்.
13. இரண்டாம் ஸஜ்தா செய்தல்.
14. அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்.
15. பிந்திய அத்தஹிய்யாத் ஓதுவதற்காக இருத்தல்.
16. அந்த இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்.
17. பிந்திய அத்தஹிய்யாத்தில்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அன்னவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்.
18. வலது பக்கம் முதலாம் ஸலாம் சொல்லுதல்.
19. இப்போது இங்கு விபரிக்கப்பட்ட 18 பர்ளுகளையும் சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிராமமாய்ச் செய்தல்.
தொழுகையை முறிக்கும் காரியங்கள் எவை?
தொழுகையை முறிக்கும் காரியங்கள் 9 அவையாவன:
1. தொழுகையை விட்டுவிடலாம், என்று எண்ணினாலும் தொழுது முடிப்போமா? அல்லது விடுவோமா? என இருமனம் கொண்டாலும் தொழுகை முறியும்.
2. தொடராக மூன்று செயலைச் செய்தல். ஆனால் சொறி, சிரங்கு, நடுக்கம் முதலியவற்றால் அவதிப்படுபவர்கள் பலமுறை சொரிந்தாலும், நடுங்கினாலும் தொழுகை முறியாது.
குறிப்பு: மூன்று செயல் என்பது, ஒரு இடத்தில் தன் கை உசும்பாமலிருக்க, அதன் விரலால் எத்தனை முறை சொறிந்தாலும் தொழுகை முறியாது.
3. குர்ஆன், துஆ, திக்ரு அல்லாத இரு எழுத்துக்களைக் கொண்ட சொல்லை மொழிவதாலும், கனைப்பதாலும் தொழுகை முறியும். ஆனால் நோயாளர் இவ்வாறு செய்தால் தொழுகை முறியாது. இதேபோன்று, தொழுகைக்கு பர்ளான அளவுக்கு ஓத வேண்டிய ஓதலை ஓத முடியாதிருக்கும் நிலைமையில் கணித்து அதனால் இரு எழுத்துக்கள் வெளியானாலும், நோன்பாளி காரலை உட்கொள்ளாமல் இருப்பதற்காக கனைத்து, அதனால் இரு எழுத்துக்கள் வெளிப்பட்டாலும் தொழுகை முறியாது.
4. நோன்பை முறிக்கும் வஸ்த்துக்களை விழுங்குதல், தொண்டைக்கு வெளியே வந்த கார்லை விழுங்குதல் ஆகியவைகள் தொழுகையை முறிக்கும்.
5. கிப்லா திசையை விட்டும் நெஞ்சைத் திருப்புதல்.
6. செயலாலுள்ள பர்ளுகள் ஞபகத்துடன் அதிகப்படுத்தல்.
7. காற்றடிக்கும்போது புடவை உயர்வதனால் அவ்ரத் (மறைக்க வேண்டிய உறுப்பு) வெளியாகினால் அதை உடனே தன்கையால் மறைக்காவிட்டால் தொழுகை முறியும்.
8. சப்தமாய்ச் சிரிப்பது, அழுவது, முனங்குவது ஆகியவையும் தொழுகையை முறிக்கும்.
9. ஒரு பர்ளை அல்லது ஷர்த்தை விட்டால் தொழுகை முறிந்து விடும்.
ஜும்ஆ தொழுகை என்றால் என்ன?
வெள்ளிக்கிழமை லுஹருடைய நேரத்தில் லுஹருடைய நாலு ரக்அத்துக்களைத் தொழாமல், இமாம் குத்பா ஓதி, இரண்டு ரக்அத்துக்கள் இமாமுடன் சேர்ந்து தோழா வேண்டும். குறைந்தபட்சம் நாற்பது பேர்களாவது (ஊரில் நிரந்தரமாய் வசிப்பவர்கள்) சமுகமளித்திருக்க வேண்டும்.
ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனைகள் எவை?
1. பாங்கு சப்தம் கேட்கும் எல்லைக்குட்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நிகழ வேண்டும்.
2. ஜும்ஆ தொழுது ஸலாம் கொடுக்கும்வரை லுஹருடைய நேரம் இருக்க வேண்டும்.
3. ஓர் ஊரில் ஒரு ஜும்ஆதான் தொழவேண்டும்.
4. இமாமைச் சேர்த்து நட்பது பேருக்கும் குறைவில்லாமல் தொழுகை நிகழ வேண்டும்.
5. முந்தின ரக்அத்து முழுவதிலும் இமாமைப் பின்பற்றி இருத்தல். ஒருவர் இரண்டாம் ருகூஉக்குப் பிறகு வந்து இமாமுடன் சேர்ந்தால் ஜும்ஆ நிய்யத்துடன் நான்கு ரக்அத்துகள் தோழா வேண்டும்.
6. இரண்டு குத்பாவிற்குப் பிறகு தொழுகை நடைபெற வேண்டும்.
ஐங்கால முன் பின் சுன்னத்து தொழுகைகள்
இதன் முக்கியத்துவம்
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி,” என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்."
நூல் : தாரமீநபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் கூறினான்: எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.”
நூல் : ஸஹிஹுல் புஹாரி
எனவே, ஐந்து நேர பர்ளான தொழுகைகளுக்கு முன் பின் தொழும் சுன்னத்து தொழுகைகள் மிகவும் முக்கியமானவை.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
♦ அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் பெற்றுத்தரும்.
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வழிமுறையை பின்பற்றுவதால் அன்னவர்களின் அன்பை பெற்று தரும்.
♦ நாளை மறுமையில் எமது பர்ளுகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.
♦ எமது நன்மை கணக்கை அதிகப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தரும்.
♦ அல்லாஹ்விடம் கேட்கும் துஆக்கள் எல்லாம் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்.
ஐந்து நேர தொழுகையின் முன் பின் சுன்னத்தான தொழுகைகளின் விபரம்:
பர்ளு முன் சுன்னத் பின் சுன்னத்
சுப்ஹ் தொழுகை 2 2 ♣ -
ழுஹர் தொழுகை 4 2 ♣ + 2 ☻= 4 2 ♣
அஸ்ர் தொழுகை 4 4 ☻ -
மக்ரிப் தொழுகை 3 2 ☻ 2 ♣
இஷா தொழுகை 4 2 ☻ 2 ♣
மொத்தம் 17 4 ♣ + 10 ☻ = 14 6 ♣
♣சுன்னத் முஅக்கதா - வலியுறுத்தப்பட்ட சுன்னத்
☻சுன்னத் ஙைரு முஅக்கதா - வலியுறுத்தப்படாத சுன்னத்எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
உதாரணமாக - ழுஹரின் முன் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்போது -
“ழுஹரின் முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்”
உதாரணமாக - இஷாவின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்போது -
“இஷாவின் பின் சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்”
எப்படி தொழ வேண்டும்?
சாதாரண தொழுகை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
ஜனாஸா தொழுகை என்றால் என்ன?
ஒரு முஸ்லிமான ஆணோ, பெண்ணோ
மரணித்து விட்டால் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகள் 4.
1. அம்மையித்தைக் குளிப்பாட்டல்.
2. கபனிடல்.
3. தொழுவித்தல்.
4. மார்க்கச் சட்டப்படி நல்லடக்கம் செய்தல்.
ஜனாஸா தொழுகையின் விதிகள் என்ன?
1. ஜனாஸா தொழுவதாக நிய்யத்து வைத்தல்.
2. தொழ சக்தியுள்ளவர்கள் நின்று தொழுதல்.
3. முதல் தக்பீர் உட்பட நான்கு தக்பீர்கள் சொல்லல்.
4. முதலாம் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாதிஹா ஓதுதல்.
5. இரண்டாம் தக்பீருக்குப் பின் ஸலவாத்து ஓதுதல்.
6. மூன்றாம் தக்பீருக்குப் பின் மையித்தின் மறுமையின்
காரியத்திற்காக பிழை பொறுக்கத் தேடுதல்.
7. நான்காவது தக்பீருக்குப் பின் ஸலாம் சொல்லுதல்.
வித்ர் தொழுகை
ஜமாஅத்துடன் தொழுவது விதியாக்கப்படாத ஸுன்னத்துத் தொழுகைகளில் மிக ஏற்றமானது வித்ரு தொழுகையாகும். இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை வாஜிபாகும். இமாம் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை சுன்னத்தாகும்.
வித்ரு தொழுகை என்றால் என்ன?
இது ஒரு பிரதான ஸுன்னத்தான தொழுகை. வித்ரு என்பதின் அர்த்தம் ஒற்றை. இஷா தொழுத பின்னரில் இருந்து தஹஜ்ஜத் வரை வித்ரு தொழுகையை நிறைவேற்றலாம். குறைந்தது ஒரு ரக்அத். கூடியது பதினொரு ரக்அத்துகள். இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுத்த பின்னர் ஒரு ரக்அத்து தொழுது முடிக்க வேண்டும்.
எப்போது தொழ வேண்டும்?
அதனுடைய நேரமாகிறது, இஷா தொழுதபின் அதிகாலை ஸுபுஹ் சாதிக் (மெய் வெள்ளை) ஏற்படுகிற நேரம் வரையிலாயிருக்கும்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவது மிக்க உசிதமானது. ஃபஜ்ருக்கு முன் விழித்து (இரவின் கடைசி நேரத்தில்) வித்ரு தொழ முடியும் என்று நம்பிக்கையுள்ளவர், வித்ரை இரவின் கடைசியில் பிற்படுத்தித் தொழுவது சுன்னத்தாகும். ரமழானில் இவ்வாறு தொழுவதால் ஜமாஅத்து தவறிவிட்டாலும் சரியே.
ஒருவர் இஷாவுக்குப் பின் வித்ரு தொழுதுவிட்டுத் தூங்கி, பிறகு தஹஜ்ஜுதுக்கு எழுந்து அதனைத் தொழுதபின் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல. ஆனால், தஹஜ்ஜுதுடைய எண்ணத்தில் அதனை மீண்டும் தொழுதால் அது நஃபிலாகி விடும். எனினும் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல என்பதை அறிந்து கொண்டே மனமுரண்டாகத் திரும்பத் தொழுதால் அத்தொழுகை பாத்திலாகிவிடும்.
அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வித்ரு தொழுது விட்டுத் தூங்கி, பிறகு எழுந்து தஹஜ்ஜுத் தொழுவார்கள். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தூங்கி எழுந்து வித்ரு தொழுதுவிட்டுப் பின் தஹஜ்ஜுத் தொழுவார்கள். இவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இவ்விஷயத்தைக் கூறிய பொழுது “அபூபக்கர் நற்கருத்தை எடுத்துக் கொண்டார். உமர் தன் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்றும், அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), அவர்களைப்போன்றும் செய்து வந்தார்கள். இமாம் ஷாஃபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அபூஅக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்று செய்து வந்தார்கள்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
வித்ரில் குறைந்தது ஒரு ரக்அத்: மிகக் கூடுதலானது பதினொரு ரக்அத்துகள்.
நிரப்பத்தில் தாழ்ந்தது மூன்று ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஐந்து ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஏழு ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஒன்பது ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது பதினொரு ரக்அத்துகள்.
வித்ருடைய எண்ணத்தில் பதினொரு ரக்அத்துகளை விட அதிகப்படுத்துவது கூடாது. இத்தனை ரக்அத்துகள்தான் தொழுவேன் என்று ஆரம்பத்திலேயே குறிப்பாக்க வில்லையானாலும் பதினொரு ரக்அத்துகள் வரை தொழலாம். இத்தனை ரக்அத்துகள் தொழுவேன் என்று ஆரம்பத்தில் குறிப்பாக்கியவர் பிறகு அதிகப்படுத்த நாடினால் முன் குறிப்பாக்கிய ரக்அத்துகள் முடிந்தபிறகு அதிகமானதைத் தொழுவதற்கு எழும் முன் அதிகப்படுத்துவதை நிய்யத்துச் செய்து கொள்ளவும். குறைக்க நாடுகிறவன் அத்தஹியாத்தில் உட்காரும் முன் நிய்யத்துச் செய்து கொள்ளவும்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
♣ வித்ரு இரண்டு ரக்அத்தின் தக்பீர்:
"உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்"
“சுன்னத்தான வித்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
♣ வித்ரு ஒற்றை ரக்அத்தின் தக்பீர்:-
உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அதன் முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.
“சுன்னத்தான வித்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக ஸலாத்துடன் தொழுதுவிட்டு கடைசி ஒரு ரக்அத்தை தனி ஸலாத்தில் தொழுவது ஏற்றமானது. மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
மூன்று ரக்அத் தொழ நாடியவர், முதல் ரக்அத்தில் சூரா பாத்திஹா ஓதிய பின்னர் “ஸப்பிஹிஸ்ம” சூராவும், இரண்டாவது ரக்அத்தில் “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு, குல் அஹூது பிரப்பில் ஃபலக், குல் அஹூதுபிரப்பின் நாஸ் ஆகிய சூராக்களும் ஓதுவது சுன்னத்து. அதிகம் தொழ நாடியவர் பிந்திய மூன்று ரக்அத்துகளில் மேற்கூறப்பட்ட சூராக்களை ஓதுவது சுன்னத்து.
ஸலாம் கொடுத்ததும் என்ன ஓத வேண்டும்?
ஸுப்ஹான மலிக்கில் குத்தூஸ் என்று மூன்று தடவை சொல்லிக் கொள்ள வேண்டும். மூன்றாவது தடவை சத்தத்தை உயர்த்திக் கூற வேண்டும்.
ரமலானில் வித்ரில் குனூத் ஓதுதல்
ரமலான் மாதத்தில் பிந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் நிமிர்ந்து, நிலையில் குனூத் ஓதுவது சுன்னத்தாகும். குனூத் ஓத மறந்தால் ஸஜ்தா ஸஃவு (மறதிக்கான ஸுஜூது) செய்ய வேண்டும். முந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் குனூத் ஓதுவது மக்ரூஃ (வெறுக்கத்தக்கது) ஆகும். -
தஹஜ்ஜுத் தொழுகை
தஹஜ்ஜுத் தொழுகை என்றால் என்ன?
இது இரவில் சிறிது நேரமாகிலும் நித்திரை செய்து விழித்தபின் தொழும் தொழுகையாகும். ஸுப்ஹு நேரம் வரை இத்தொளுகையை நிறைவேற்றலாம். இதில் கூடுதலாக எத்தனை ரக்அத்துகளும் தொழுது கொள்ளலாம். குறைந்தது இரண்டு ரக்அத்துக்களாகும். இந்த தஹஜ்ஜுத் தொழுகையின் பின் வித்ரு தொழுது கொள்வது ஆகச் சிறந்தது.
இதன் முக்கியத்துவம்
தஹஜ்ஜுதும், வித்ரும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது ஃபர்லாக ஆக்கப்பட்டிருந்தது. இலேசைக் கருதியும், சடைவு ஏற்பட்டு, அதை விட்டு விட்டால் குற்றவாளிகளாகி விடுவார்களே என்ற இரக்கத்தினாலும், உம்மத்தினர் மீது அவையிரண்டும் ஃபர்லாக்கப்படவில்லை. எனினும், ஞானவான்கள் அதனை ஃபர்லைப் போன்றே கருதி செயல்பட்டார்கள்.ஏனெனில், அதில் ஏரளாமான நன்மைகளும் சிறப்புகளும் காணப்படுவதலாகும். இதற்கு எழுதி முடிக்கமுடியாத அளவு சிறப்புகள் உண்டு. ஆகையால் கொஞ்சமானாலும் வழக்கமாகத் தொழுது வருவது ஸுன்னத்தாகும்.
எப்போது தொழ வேண்டும்?
இது இரவில் தூங்கி விழித்துத் தொழும் ஸுன்னத்துத் தொழுகையாகும். ஸுப்ஹுடைய பாங்கிற்கு முன்பு தொழலாம்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
தஹஜ்ஜுதில் குறைந்தது இரண்டு ரக்அத்துகள். அதிகத்திற்கு அளவில்லை. எனினும், பன்னிரண்டு ரக்அத்துகள் என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே. அதில் சூராயாசீன், சூரா முஸம்மில் ஆகியவற்றை ஓதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்திகாரா தொழுகை என்றால் என்ன?
இஸ்திகாரா என்பது நலவைத் தேடுதல் என்பதாகும். வியாபாரம், விவாகம், விவசாயம், வீடு கட்டுதல், பிரயாணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நற்காரியங்களைத் தொடங்கும் போது, தொடங்கும் காரியம் நலமாக முடிய வேண்டும் என இரண்டு ரக்அத்து ஸுன்னத் தொழுவதாகும்.
தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை என்றால் என்ன?
“தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்றால் பள்ளிவாசல் காணிக்கை என்பதாகும். பள்ளிவாசலுக்குள் புகுந்தவுடன் உட்காருவதற்கு முன் இரண்டு ரக்அத்து ஸுன்னத்துத் தொழ வேண்டும்.
தஹிய்யத்துல் வுழு தொழுகை என்றால் என்ன?
தஹிய்யத்துல் வுழு என்றால், வுழுவின் காணிக்கையாகும். இத்தொழுகை வுளுசெய்து நீர் உலர முன் இரண்டு ரக்அத்தக்கள் ஸுன்னத் தொழுவதாகும்.
இஷ்ராக் தொழுகை
இஷ்ராக் தொழுகை என்றால் என்ன?
இஷ்ராக் தொழுகை சூரியன் உதித்தபிறகு தொழும் தொழுகையாகும். சூரியன் உதித்து சுமார் 7 முழு அளவுக்கு உயர்ந்த பிறகு இரண்டு ரக்அத் ஸுன்னத்து தொழவேண்டும்.
இதன் முக்கியத்துவம்
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒருவர் சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுதுவிட்டு சூரிய உதயம் வரை அதே இடத்தில் அமர்ந்தவராக திக்ரு செய்துக்கொண்டு இருந்து, பின்னர் சூரிய உதயத்திற்கு பின்னர் இரண்டு ரக்அத் நபில் (இஷ்ராக்) தொழுதால், அவர் ஒரு ஹஜ்ஜும் ஒரு உம்ராவும் செய்த நன்மையை பெற்றுக்கொள்வார்"
நூல் - திர்மிதி
எப்போது தொழ வேண்டும்?
இது சூரியன் உதயமாகி ஓர் (வல்லயப்பிரமாணம்) ஈட்டியின் உயரம் மேலே உயர்ந்த பிறகு தொழ வேண்டும். அதாவது, சூரிய உதயத்திற்கு பின்னர் சுமார் பதினைந்து அல்லது இருபது நிமிடம் கழித்து தொழ வேண்டும்..
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான இஷ்ராக் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
எங்கு தொழ வேண்டும்?
ஆண்கள் மஸ்ஜிதில் தொழுவது மிக சிறந்தது. மேலே சொன்ன ஹதீஸின்படி பஜ்ர் தொழுகை முடிந்து அதே இடத்தில் அமர்ந்தவராக காத்திருந்து பின்னர் தொழுவது ஹஜ் உம்ரா செய்த நன்மைகளை பெற்று தரும். முடியாதவர்கள், வீட்டிலும் தொழலாம்.
பெண்கள் மேலே சொன்ன முறைப்படி வீடுகளில் தொழுது கொள்ளலாம். அதே நன்மை அவர்களுக்கும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
ழுஹா தொழுகை
லுஹா தொழுகை என்றால் என்ன?
இது ஸுன்னத்து இதன் நேரம் சூரியன் 7 முழத்தின் அளவு உயர்ந்தது முதல் லுஹர் நேரம் வருமளவாகும். இது குறைந்தது இரண்டு ரக்அத்துகளாகும். நிரப்பமானது எட்டு ரக்அத்துகள். அதிகமானது பன்னிரண்டு ரக்அத்துகளாகும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழலாம்.
இதன் முக்கியத்துவம்
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒருவர் பன்னிரண்டு ரக்அத்துகள் ழுஹா தொழுதால் அல்லாஹ் அவருக்காக சுவர்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்"
நூல் - திர்மிதி
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"சுவனபதியில் ஒரு நுழைவுவாயிலுக்கு ளுஹா என்று பெயர். ளுஹாத் தொழுகையினைத் தொடர்ந்து தொழுபவர்கள் இவ்வாயிலின் வழியாக நுழைந்து வருமாறு அழைக்கப்படுவார்கள்"
நூல் : தபரானி
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"ளுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொடர்ந்து தொழுபவரின் பாவங்கள் கடலின் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும்
நூல் : அபூதாவூத்
எப்போது தொழ வேண்டும்?
சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ளுஹர் தொழுகையின் நேரம் வரும் வரை ளுஹா தொழலாம். ஆனால் பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்று மணிநேரம்) சென்றபின் தொழுவது சிறப்பானதாகும். சுமாராக காலை 9 மணி முதல் 11 மணிவரை என்று குறிப்பிடலாம்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
இது குறைந்தது இரண்டு ரக்அத்துகள் தொழலாம் . கூடியது பன்னிரண்டு ரக்அத்துகள் தொழலாம்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான ழுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
ஆனால், லுஹா தொழுகையின் முதல் ரக்அத்தில் ஃபாத்திஹாவுக்குப் பின் வஷ்ஷம்ஸி சூராவும் இரண்டாவது ரக்அத்தில் வள்ளுஹா சூராவும் ஓத வேண்டும் அல்லது முதல் ரக்அத்தில் குல்யா அய்யுஹல் காபிஃரூன் சூராவும் இரண்டாவதில் குல்ஹுவல்லாஹு சூராவும் ஓதுவது சிறப்பானதாகும்.
எங்கு தொழ வேண்டும்?
ஆண்கள் மஸ்ஜிதில் தொழுவது மிக சிறந்தது. மஸ்ஜிதில் தொழுகின்ற சிறப்பு, ஏற்றமான நேரத்தில் தொழுகின்ற சிறப்பு ஆகிய இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும், மற்றது கிடைக்காது என்றிருந்தால், வணக்கத்தைக் கொண்டு சம்பந்தப்பட்டிருக்கும் நேரத்தின் சிறப்பை, இடத்தைக் கொண்டு சம்பந்தப்பட்டிருக்கும் சிறப்பை விட முற்படுத்த வேண்டும்.
பெண்கள் மேலே சொன்ன முறைப்படி வீடுகளில் தொழுது கொள்ளலாம். அதே நன்மை அவர்களுக்கும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
அவ்வாபீன் தொழுகை
அவ்வாபீன் தொழுகை என்றால் என்ன?
இது மக்ரிபுக்கும், இஷாவுக்கும் இடையில் தொழும் ஸுன்னத்தான தொழுகையாகும். இது இருபது ரக்அத்துகள் கொண்டது. இதை ஆறு, நான்கு, இரண்டு ரக்அத்துகளாகவும் தொழலாம்.
இதன் முக்கியத்துவம்
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மஃரிப்பிக்கு பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுது அவற்றிக்கிடையே எந்த தீய பேச்சுக்களும் பேசாமல் இருக்கிறாரோ அவரது அத்தொழுகை பன்னிரென்டு வருடத்து வணக்கத்துக்கு நிகரானவை"
நூல் - திர்மிதி, இப்னு மாஜா
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"யார் மஃரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்"
நூல் : தபரானி
எப்போது தொழ வேண்டும்?
மஃரிபுடைய பின் ஸுன்னத்தான தொழுகைகள், அவ்ராதுகள் ஆகியவற்றை முடித்தபின் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் தொழவேண்டும்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
பொதுவாக ஆறு ரக்அத்துகள் தொழ வேண்டும். கூடியது இருபது ரக்அத்துகள் தொழலாம்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான அவ்வாபீன் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
அந்த நேரத்தில் வேறு தொழுகைகளை தொழுதால் இதை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா?
ஆம், அந்த நேரத்தில் வேறு ஏதேனும் தொழுகைகளை தொழுவதை கொண்டு இந்த தொழுகையை நிறைவேற்றிய நன்மை கிடைத்து விடும். அதாவது, இத்தொழுகையானது தஹியத்துல் மஸ்ஜித் தொழுகையை தொழுவதை கொண்டும் அல்லது ஃபர்லான அல்லது ஸுன்னத்தான ஏதாவது தொழுகைகளைக் அந்த நேரத்தில் களாச் செய்வதை கொண்டும், அல்லது வேறு எந்தத் தொழுகைகளை அந்த நேரத்தில் தொழுவதை கொண்டும் நிறைவேறிடும். தனியாக மீண்டும் இதை தொழ தேவை இல்லை.
தராவீஹ் தொழுகை
எப்போது தொழ வேண்டும்?
ரமழான் மாதம் முப்பது நாட்களும் இஷாவின் பிந்தின ஸுன்னத்துத் தொழுகைக்குப் பிறகு இத்தொழுகையைத் தொழவேண்டும். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து வைகறைப் பொழுது வரை இத்தொழுகையின் நேரமாகும்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும்.
"ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்"
அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104
மேலும் தராவீஹ் எத்தனை ரக்அத்துகள் என்பது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸுகளை படிக்க இந்த லிங்க்கை அழுத்துங்கள்
ஹாபிள்களை நியமித்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. ஒரு நாளைக்கு ஒன்னே கால் ஜுஸ்வு குர்ஆன் ஓதி 27ம் பிறையில் கத்தம் செய்துவரும் பழக்கம் எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது. ஹாபிள்கள் இல்லாத ஊர்களில் சிறிய சூராக்களையும் ஓதி தொழுது கொள்ளலாம். ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது கொள்ள வசதி இல்லாதவர்கள் தனிமையிலும் தொழுது கொள்ளலாம்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தராவீஹ் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி மஃமூமாக அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும். தனிமையில் தொழுதால் “மஃமூம்” என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும். இத்தொழுகையை நிறைவேற்றுவது ஷாபியீ, ஹனபி இரு மத்ஹபிலும் ஸுன்னத்துதான்.
எப்படி தொழ வேண்டும்?
சாதாரணமாக ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும். மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.
ஸலாம் கொடுத்ததும் என்ன ஓத வேண்டும்?
ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கு பின் ஸலாம் கொடுத்ததும் ரமலானில் ஓத வேண்டிய துஆ, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத், ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு பின்னரும் நேர்வழி பெற்ற கலிபாக்களை நினைவு கூர்தல் போன்றவை வழமையாக ஓதப்படுகின்றன.
குறிப்பு: - தராவீஹ் தொழும் சமயம் ஸலாம் கொடுத்ததும் ஓதக்கூடிய திக்ருகள் பாடமில்லாதவர்கள் எந்த திக்ரையும் ஓதிக்கொள்ளலாம். மேலும் திக்ர் செய்யாவிட்டாலும் குற்றமில்லை.
இஷா தொழும் முன் தராவீஹ் தொழலாமா?
ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழையும்போது, இஷா தொழுகை முடிந்திருந்தால் முதலில் இஷாவின் பர்ளு ஸுன்னத் தொழுகைகளைத் தொழுத பிறகுதான் தராவீஹ் தொழுகையின் ஜமாஅத்தில் சேர்ந்து தொழவேண்டும். இதற்கிடையில் விட்டுப்போன தராவீஹ் ரக்அத்துகளை வித்ரு தொழுத பிறகு தொழுதுகொள்ள வேண்டும். இத்தகையவர் வித்ரு தொழுகையை ஜமாஅத்துடன் தொழவேண்டும்.
தஸ்பீஹ் தொழுகை
தஸ்பீஹ் தொழுகையின் சிறப்புஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபை நோக்கிக் கூறியதாவது:- அப்பாஸே! எனது பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? உங்களுக்குக் கொடுக்கட்டுமா? உங்களுக்கு நன்கொடையாக கொடுக்கட்டுமா? உங்களில் பத்து விடயங்களை ஏற்படுத்தட்டுமா? அதனை நீங்கள் செய்தால் அல்லாஹ் உங்களது பாவங்களில் முன்னையது பின்னையது, பழையது புதியது, தவறுதலாக செய்தது தெரிந்து கொண்டே செய்தது, சிறியது பெரியது, இரகசியமானது பரகசியமானது ஆகிய அனைத்தையும் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு ஸுராவையும் ஓத வேண்டும். முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் என பதினைந்து முறை கூறுங்கள். பின்னர் நீங்கள் ருகூஃ செய்து ருகூஃவில் இருந்த வண்ணம் அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ருகூஃவிலிருந்து உயர்த்தி அதனை பத்து விடுத்தம் கூறுங்கள். பின்னர் குனிந்து ஸுஜூது செய்து ஸுஜூது செய்த நிலையிலேயே அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி பத்து முறை கூறுங்கள். பின்னர் ஸுஜூது செய்து பத்து முறை அதனைக் கூறுங்கள். பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனை பத்து முறை கூறுங்கள். அதனை நான்கு ரக்அத்துக்களிலும் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒருமுறை செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (செய்து கொள்ளுங்கள்)
நூற்கள் - அபூதாவூத் 1297, இப்னுமாஜா 1386, 1387 (தரம் - ஸஹீஹ்)
எப்போது தொழ வேண்டும்?இந்தத் தொழுகையை முடிந்தால் நாள் தோறும் தொழுது வருவதும், இயலாவிடில் வாரத்திற்கொரு முறை தொழுவதும், இயலாவிடில் மாதத்திற்கொரு முறை தொழுவதும், இயலாவிடில் ஆண்டுக்கொரு முறை தொழுவதும், அதுவும் இயலாவிடில் ஆயுளில் ஒரு தடவையாவது தொழுவதும் சுன்னத்தாகும்.
இத்தொழுகையை வெள்ளிகிழமை ஜும்ஆவுக்கு முன் தொழுவது சிறப்பாகும். அதிக நன்மைகளை பெற்று தரும் ரமழான் மாதத்திலும் அதிகம் இதனை தொழலாம்.
எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?
இது நான்கு ரக்அத்துகளாகும். இரண்டிரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் தொழுவது ஏற்றமாகும். நான்கு ரக்அத்துகளை ஒரே ஸலாமிலும் தொழலாம்.
எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?
இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தஸ்பீஹ் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.
எப்படி தொழ வேண்டும்?
♦ தக்பீர் தஹ்ரீமா கட்டியபின் வஜ்ஜஹ்த்து, சூரத்துல் பாத்திஹா, மற்றொரு சூரா ஆகியவை ஓத வேண்டும்.
♦ இப்போது நிலையில் 15 (பதினைந்து) தடவை மூன்றாம் கலிமாவில் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்பது வரை ஓத வேண்டும்.
♦ இப்போது ருகூவிற்கு செல்ல வேண்டும். அங்கு வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அலீம் வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்பதை 10 (பத்து) தடவை ஓத வேண்டும்.
♦ இப்போது நிலைக்கு வந்து அங்கு வழமையாக ஓதுவதை ஓதிவிட்டு 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ இப்போது ஸுஜூதுக்கு சென்று அங்கு வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ பின்னர் சிறு இருப்பில் இருந்து 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ இப்போது இரண்டாவது ஸுஜூதில் வழமையாக ஓதும் "சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி" என்பதை மூன்று முறை ஓதி விட்டு மீண்டும் 10 (பத்து) தடவை மேற்சொன்ன மூன்றாம் கலிமாவை ஓதவேண்டும்.
♦ பின்னர் இஸ்திராஹத் இருப்பில் 10 (பத்து) தடவை மேற்சொன்ன கலிமாவை ஓதி எழும்ப வேண்டும்.
இவ்வாறு ஒரு ரக்அத்தில் எழுபத்தைந்து தடவை வீதம் நான்கு ரக்அத்துகளில் முன்னூறு தடவை ஓதவேண்டும். மேற்கூறப்பட்ட அந்தக் கலிமாவுடன் விரும்பினால் ‘வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹி அலிய்யில் அளீம்’ என்பதையும் சேர்த்து ஓதலாம்.
♦ இரண்டாவது ஸஜ்தாவில் இருந்து இஸ்திராஹத் இருப்பிற்கு எழுந்திருக்கும்போது தக்பீர் சொல்லி எழுந்து உட்கார்ந்து, பிறகு பத்து தடவை தஸ்பீஹ் ஓதியபின் தக்பீர் சொல்லாமல் எழுந்திருக்க வேண்டும்.
♦ இரண்டாவது ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவுக்குப் பின் எழுந்து இருக்கும் அத்தஹியாத் இருப்பில் அத்தஹிய்யாத்துக்கு முன் முதலில் 10 (பத்து) தடவை மேற்சொன்ன கலிமாவை ஓத வேண்டும். பின்னர் அத்தஹிய்யாத் ஓதவேண்டும்.
♦ பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும்.
ருகூஇல் ஓத வேண்டிய தஸ்பீஹை மறந்து சிறு நிலைக்கு வந்துவிட்டால் திரும்ப ருகூவுக்குப் போவதோ, மறந்த தஸ்பீஹை சிறு நிலையில் ஓதுவதோ கூடாது, எனினும், அந்த பத்து தஸ்பீஹையும் ஸுஜுதில் ஓதிக் கொள்ள வேண்டும்.
தஸ்பீஹ் தொழுகையில் முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் ‘அல்ஹாக்குமுத் தகாதுர்’ சூராவும், இரண்டாவது ரக்அத்தில் ‘வல் அஸ்ரி’ சூராவும் மூன்றாம் ரக்அத்தில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் சூராவும், நான்காம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு சூராவும் ஓதுவது சிறப்பாகும்.
மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான http://tmwsinfo.blogspot.com/ இல் கற்று கொள்ளுங்கள்.
Popular Posts
-
“சுதந்திரமாகப் பிறந்த மனிதன் சுதந்திரமாகவே வாழ வேண்டும்” எனும் கருத்தினை மனித சுதந்திரத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்ட தத்துவஞானியான ‘ஜீன்...
-
தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன? தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன: 1. முஸ்லிமாக இருத்தல். 2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல். 3. ஜனாபத் ...
-
நாளைய தலைவர் நீங்கள் சிறந்த தலைவரின் செயற்பாடு... ஒரு குழுவின் தலைவர் அர்ப்பணிப்பு, முன்மாதிரிகை, விசுவாசம், நேர்மை, மனிதத்துவம...
-
பாங்கு (அதான்) என்றால் என்ன? தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழிய...
-
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினா...
-
LED බල්බ නිෂ්පාදන පාඩම් මාලාව 1 මාසිකව අසීමිතව උපයන්න..අලුත් මගක්.. led bulbs sri lanka අන්තර්ජාලය තුලින් මාසිකව අසීමිතව උ...
-
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஜனாஸா என்றவுடனேயே நம் அனைவருக்கும் மனசுக்குள் ஒரு பதட்...
-
மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும் . அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை . மலக்குகள் தரிசனம் கொடு...
-
இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3...
-
பிறப்பு முதல் நபித்துவம் வரை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே...