
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் செய்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதி அல்ல, அவர் முஸ்லிம் இனவாதிகளின் பிரதிநிதி என்றும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு யார் வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்று அதனை மதிக்க வேண்டும். அமைச்சர் ஹக்கீம் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே அவரை நாங்கள் விமர்சித்தோம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மாத்திரம் கையளிக்கவில்லை. அவர் மிகவும் துஷ்டத்தனமாக அந்த அறிக்கையை குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளார்.
இது மிகவும் பாரதூரமான செயல். காரணமாக குவைத் மற்றும் சவூதி ஆகிய நாடுகளுக்கு ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இம்முறை வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என்றார்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை செய்வதற்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விலக மறுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.