Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

25 August 2014

தனியார் சட்டங்கள் சமூகத்திற்குக் கிடத்த வரப்பிரசாதமாகும்

இலங்கையில் வாழும் மக்கள் பல்வகைப்பட்ட சட்டங்களினாலே ஆளப்பட்டு வருகின்றனர். எமது நாட்டின் கலாசார விழுமியங்கள் கோட்பாடுகளை மையமாகக் வைத்து தோற்றம் பெற்ற தனியார் சட்டங்களான, கண்டியர் சட்டம், முஸ்லிம் சட்டம், தேசவழமை என்பவற்றுடன் ஒல்லாந்தரினால் அறிமுகம் செய்யப்பட்ட றோமன், டச்சு மற்றும் ஆங்கிலேயர் வருகையுடன் கலப்புற்றவாறு பல்வகை சட்டங்கள் உள்ளது.
சட்டமானது விதிகளின் பிரதிபலிப்பாகும். விதிகளை விட்டு விலக முடியும். ஆனால் சட்டத்தை விட்டு விலக முடியாது. அத்துடன் சட்டம் பற்றி ஒருவரின் சொந்தக் கருத்து கவனத்திற் கொள்ளப்படமாட்டாது. எனவே தனியார் சட்டம் சமூகத்திற்குக் கிடத்த வரப்பிரசாதமாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வி.தவராஜா அவர்களின் தலைமையில் சிறுவர் கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சியின் போது வளவாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட அஸீஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நீதியின் போக்கானது சமமானவற்றை சமனான முறையில், சமனற்றவற்றை சமனற்ற முறையிலும் நடத்துதல் ஆகும். தனியார் சட்டம், பகிரங்க சட்டம் என இரண்டு சட்டங்கள் உள்ளன. இங்கு தனிப்பட்ட சட்டம் என்ற வகையில் ஆட்கள் சட்டம், ஆதனச் சட்டம், ஒப்பந்த சட்டம் என்பன முக்கியமானவை. ஆனால் நீதி, நிருவாக சட்டம், குற்றவியல் சட்டம் என்பன பொதுச் சட்டங்கள் ஆகும். ஏனெனில் சமுகத்தில் கடமைகள், உரிமைகள் பற்றி அவைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சட்டம்
இலங்கையில் தனியார் சட்டங்களில் முழு இஸ்லாமிய சமயத்தினர்களுக்கும்; உரித்தான சட்டமாக முஸ்லிம் சட்டம் இருக்கின்றது. இச்சட்டத்தின் மூலம் திருமணம், விவாகரத்து மற்றும் வக்பு சபை போன்ற விடயங்களைக் கையாள முடியும். ஆனால் இலங்கையில்ஷரீஆசட்டம் நடைமுறையில் உள்ளது என தவறாக எவரும் நினைத்து விடக் கூடாது. இலங்கை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனையோர்கள் ஒரு பதிவுத் திருமணம் செய்யும் போது 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு;ள்ளது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இவ்வயதுக் கட்டுப்பாடு இல்லை. பனிரெண்டு வயதுக்கு மேல்நிகாஹ்செய்யலாம். இது ஏனைய முஸ்லிம் நாடுகளில் வௌவேறு வயதுகளைக் கொண்டிருக்கிறது. அத்துடன்; சட்ட ரீதியாக நான்கு திருமணம் முடிப்பதற்கான அங்கீகாரத்தையும் சில நிபந்தனைகளின் அடிப்படையில்காழிநீதிபதியின் அனுமதியுடன் இச்சட்டம் வழங்கியுள்ளது. ஏனைய சமயத்தினர் ஒரு திருமணம் வலிதாக இருக்கும் போது, மற்றுமொரு திருமணம் செய்வது ஏழு வருடம் சிறைத்தண்டணை வழக்கக்கூடிய குற்றமாகும்.
கண்டிய சட்டம்
கண்டியச் சட்டத்தின் கீழ் கண்டியில் பிறந்தவர்கள் உயர்ந்த சாதிகள் என்ற எண்ணம் ஆதிகாலத்தில் இருந்தது. இதனால் அவர்கள் தனியான சட்டம் ஒன்றின் கீழ் ஆழப்பட்டு வந்தனர். கண்டியச் சட்டத்தின் கீழான திருமணம் தற்போது நியதிச் சட்டங்களின் கீழான திருமணங்களாக கொள்ளப்படுகிறது. ஆயினும் மனைவியின் நிலைமை அங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. பின்லன் திருமணம், தீக திருமணம் என்ற பெயர்களுடன் இத்திருமணங்கள் அழைக்கப்படும்.
கணவனின் மறைவிற்குப் பின்பு அவனுடைய ஆதனத்தில் பெருமளவிலான உரிமை கொள்வதினாலும் மற்றும் உண்மையில் உயர்ந்த சாதி அந்தஸ்தில் உள்ளவர்கள் திருமணம் தொடர்பில் ஏற்படக்கூடிய கலப்புக்களினை கட்டுப்படுத்துவதினாலும் அச் சந்தர்ப்பங்கள் அக் குடும்பத்தின் கௌரவத்துடன் தொடர்புடைய விடயம் என்பதினாலும் இது முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது. இருப்பினும் இவ்விடயம் பற்றிய அண்மைய சட்டவாக்கம் வரையில் பராமரிப்பு, திருமணம் மணப்பிரிவினை என்பன தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்மானி;ப்பதில் ஒரு தெளிவற்ற நிலையே காணப்படுகிறது.
தேசவழமை சட்டம்
தேசவழமை என்பது யாழ் மாகாணத்திற்குட்பட்ட வழக்காறுகளை ஒன்றிணைத்தது எனப் பொருள்படுவதோடு யாழ்ப்பாண மாகாணத்தில் வசிக்கின்ற மலபார் வாசிகளிற்கு உரித்துடையது. இது இலங்கையில் ஆள்சார் சட்டங்களில் ஒன்றாக கருதப்பட்டாலும் இதன் சிறப்பியல்பு சிலவிடயங்களில் இது இடம்சார் சட்டமாகவும் இருப்பதாகும்.
எமது பாரம்பரிய விழுமியங்களில் இணைந்து காணப்பட்ட அடிமை முறைமை மற்றும் சாதி முறைமை என்பவை தேசவழமை சட்டப்பரப்பில் இடம்பெறவில்லை என்பது தற்கால நவீன கண்ணோட்டத்தில் சமத்துவமான உரிமையைப் பிரதிபலிப்பதாக காணப்பட்டாலும் எமது வழக்காறுகள் முழுமையாக தேசவழமை தொகுப்பில் உள்வாங்கப்படவில்லை என்பதற்கு சான்றாகவே கொள்ள வேண்டும். தேசவழமைக்கு உட்பட்ட ஆதனமானது முதுசொம், சீதனம், தேடிய தேட்டம், என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு சொத்துரிமை விடயத்தில் கணவனின் எழுத்துமூலமான சம்மதம் இன்றி தனது அசைவற்ற சொத்தை பிரிக்க மனைவிக்கு உரிமையில்லை. அத்துடன் தேடிய தேட்டச் சொத்து, கணவன், மனைவிக்கு கூட்டுச் சொத்தாக இருந்தும் அச்சொத்தை கணவன் விற்க, வாடகைக்கு கொடுக்க வேறுவகையில் ஏதேனும் செய்ய உரிமையுண்டு ஆனால் அவ் உரிமை மனைவிக்கு மறுக்கப்படுகிறது எனவும் அஸீஸ் தெரிவித்தார்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX