“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி)
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அஹ்மத்
தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லரு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.
மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள் குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்” அறிவிப்பவர் : நாபிவு(ரழி) நூல்கள் : புகாரி, முஅத்தா
“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்” என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)
இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின் வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன் ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் – அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல நேர்ந்தால் – அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். (அல் இஸாபா, பாகம் 2, பக்கம் 349) இது போன்ற காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.
அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ‘தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள் என்றால், ்குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.
“தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ‘ஷரஹுல்’ முஹத்தப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் தனது தாடியை நீளத்திலும், அகலத்திலும் குறைப்பார்கள்” என்று திர்மிதீயில் ஒரு ஹதீஸ் உள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம் பெறுகின்ற உமர் இப்னு ஹாரூன் என்பவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுவதால். அது ஆதாரமாகாது, எனினும் உமர் இப்னு ஹாரூன் இன்றி ‘உஸாமா’ என்பவர் மூலமும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் ‘மீஸானில்’ குறிப்பிடுகிறார்கள். அந்த அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் தாடியைக் குறைத்திருக்கிறார்கள் என்று அறிய முடிகின்றது. அதைப் பார்த்தே இப்னு உமர்(ரழி) அவர்களும் தம் தாடியைக் குறைத்திருப்பார்கள் என்று அனுமானிக்கலாம்.
ஸாலிம் இப்னு அப்துல்லா(ரழி) அவர்கள், இஹ்ராம் கட்டுவதற்கு முன், தனது தாடியில் சிறிது குறைத்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவில் பதிவு செய்துள்ளனர்.
மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, “தாடியை விட்டு விடுங்கள்!” என்ற நபிமொழியின் கருத்து “சிரைக்கக் கூடாது” என்பது தான் என்று தெளிவாக உணரலாம்.
கன்னத்தைக் சிரைத்துக் விட்டுத் தாழ்வாயில் மட்டும் முடிகளை விட்டுவிட்டு, அதைத் தாடி என்று சிலர் கருதுகின்றனர். “கன்னம், தாழ்வாய்” இரண்டும் சேர்ந்தே தாடி எனப்படும். இதில் ஒரு பகுதியைச் சிரைத்தாலும், தாடியைச் சிரைத்ததாகவே கருதப்படும். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கிய தாடியை வைத்து, நபி வழியில் நடப்போமாக – ஆமீன் .