Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 September 2014

பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்


'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)
ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மனைவியான ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.
கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் உம்மு குல்ஸூம் ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.
''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.
''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள்.(அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப்படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX