
Posted on : Tue 18-02-2014 11:02:50 AM
மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினர் முன்னெடுக்கும் போராட்டத்தினால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஓல்கோட் மாவத்தை மூடப்பட்டுள்ளது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகள் விரைவில்..
மாடுஅறுப்பதை நிறுத்தாவிடில் சிங்களவர் உயிர்த்தியாகம் செய்வர் : சிங்கள ராவய எச்சரிக்கை

மாடு வெட்டுவதற்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு முன்பிருந்து கொழும்பு வரையிலான பாத யாத்திரையினை ஆரம்பித்திருந்தது. இதன் இறுதிக்கட்டமாக நேற்று கொழும்பில் சிங்கள ராவய அமைப்பினர் தமது பாத யாத்திரையினை முடிவிற்குக் கொண்டு வந்தனர்.
இதன்போதே இவ் பௌத்த அமைப்பினால் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த சிங்கள ராவய பௌத்த அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இன்று பாவச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் தொன்மையான சிங்கள பண்புகளையும் தமிழர் மதப் பண்புகளையும் அழித்து எம்மை கொச்சைப்படுத்தும் வகையில் இன்று அந்நிய மதத்தவர் செயற்பாடுகள் அமைந்துள்ளது. குறிப்பாக நாட்டில் மாடறுப்பதென்பது மிகப்பெரிய பாவச் செயலாகும். அதனையே இன்று இந்த நாட்டில் செய்து வருகின்றனர்.
மாடுகளை அறுத்து கொலை செய்யும் பாவச் செயலினை உடனடியாக நிறுத்தாவிடின் இதற்காக கடுமையான விளைவுகளை பலர் சந்திக்க வேண்டியிருக்கும். இவ் விடயத்தில் பொறுமையாக வட்டமேசைகளில் அமர்ந்திருந்தது பேச்சு வார்த்தைகளை நடத்தவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர் கையளித்து இது தொடர்பில் பேசவோ நாம் தயாராக இல்லை. எமக்கு வேண்டியதெல்லாம் இப்பாவச்செயலினை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பது மட்டுமே.
கடந்த ஆண்டு மாடு அறுப்பதனை தடுக்கக் கோரி எமது தேரர் ஒருவர் தன்னை தானே தீ மூட்டி உயிர்த் தியாகம் செய்து நாட்டிற்கே பாரிய எச்சரிக்கையினை விட்டார். அதே பாணியினையே நாமும் கையாள்வோம். உடனடியாக இவற்றினை நிறுத்தாவிடின் எமது உயிர்த்தியாகத்தின் மூலமாவது அரசாங்கத்திற்கு பலத்த கோரிக்கையினை விடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள ராவய அமைப்பினைச் சேர்ந்த அதிகளவிலான பௌத்த பிக்குமார்களும் ஆதரவாளர்களும் பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பு பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்தனர்
புறக்கோட்டையில் சிஹல ராவய பிக்குகள் மீது சிவில் உடையில் சென்ற இனந்தெரியாத நபர்கள் தாக்குதலால் பதற்றம்.
ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையிலிருந்து கோட்டைக்கு செல்லும் ஒருவழிப் பாதையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிலிருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு சிஹல ராவய பிக்குகளினால் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் சிவில் உடையில் சென்ற இனந்தெரியாத நபர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.