==========================
இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக ஈரான் உட்பட முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்புகளை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஈரானிய ஆன்மீக தலைவரும் அந்நாட்டின் ஹஜ் யாத்திரை குழுவின் தலைவருமான அயத்துல்லா ஸ்லாமி வாஷி அஸ்கார் தலைமையிலான ஈரானிய தூதுக் குழுவினர் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பில் கடந்த முறையை போன்றே இம்முறையும் பல உலக நாடுகள் இலங்கையை ஆதரிக்கும்.
இலங்கையின் மனிதாபிமானத்திற்கான போராட்டத்தின் நியாயத்தை உலகத்திற்கு எடுத்துரைக்க இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
இலங்கையின் அபிவிருத்திக்காக ஈரான் உட்பட பல அரேபிய நாடுகள் பல தசாப்த காலமாக இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
எனினும் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து பல மேற்குலக நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டி வருவதுடன் விசாரணை ஒன்றின் ஊடாக இலங்கையின் நிர்வாகத்தை வீழ்த்த முயற்சித்து வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.