இஸ்லாம் ஒரு சமநிலையான மார்க்கம். எனவே அதற்கான உழைப்பும் சமநிலைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியமாகிறது. இந்தச் சமநிலை இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளல், அதனை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டுமன எதிர்பார்க்கப்படுகிறது.
சமநிலை என்பது பிரபஞ்ச விதியாகும். முழுப்பிரபஞ்சமும் இச்சமநிலையின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவகையில்தான், அது மார்க்கத்தின் இயல்பாகவும், யதார்த்தமும் இஸ்லாமிய அழைப்பாளர்களது அனுபவமும் வற்புறுத்துகின்ற அம்சமாகவும் உள்ளது. முஸ்லிம் சமூகம் இச்சமநிலைப் பண்பைக் கைவிட்டு, இரு தீவிரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போதே அதில் கோளாறு தோன்ற ஆரம்பிக்கிறது.
இந்த உம்மத் ஒரு நடுநிலையான உம்மத். முன்பு வாழ்ந்த சமூகங்களிலிருந்து அது பெரிதும் வேறுபடுகிறது. யூதர்கள் இறை கட்டளைகளை நிறைவேற்றாமல் சமநிலை பிறழ்ந்தனர். கிறிஸ்தவர்களோ தீவிரமாகச் சென்று வழிதவறினர். எனவேதான், யூதர்களை 'கோபத்திற்குட்பட்டவர்கள்' என்றும், கிறிஸ்தவர்களை 'வழிதவறியவர்கள்' என்றும் அல்லாஹ் அடையாளப்படுத்தினான். யூதர்களது அறிவோடு செயல் இணையாதிருந்ததும், கிறிஸ்தவர்கள் அல்லாஹ் பற்றிய சரியான அறிவின்றி அவனை வணங்கியதுமே இதற்கான காரணமாகும். இந்தப் பின்னணியிலேயே ஸுஃப்யான் பின் உயைனா (றஹ்) பின்வருமாறு கூறினார்:
'எமது அறிஞர்களில் எவர் சீர் கெடுகிறாரோ அவரில் யூதர்;களை ஒத்த தன்மை காணப்படும். எமது வணக்கவாளிகளில் எவர் சீர் கெடுகிறாரோ அவரில் கிறிஸ்தவர்களை ஒத்த தன்மை காணப்படும்.'
'எமது அறிஞர்களில் எவர் சீர் கெடுகிறாரோ அவரில் யூதர்;களை ஒத்த தன்மை காணப்படும். எமது வணக்கவாளிகளில் எவர் சீர் கெடுகிறாரோ அவரில் கிறிஸ்தவர்களை ஒத்த தன்மை காணப்படும்.'
அல்லாஹ் 'ஸூறத்துல் பாத்திஹா'வில் மனிதர்களை மூன்று வகையினராக பிரித்துக் காட்டுகின்றான். ஒரு பிரிவினர்: அவனது கோபத்திற்குட்பட்ட யூதர்கள். அடுத்த பிரிவினர்: வழிதவறிய கிறிஸ்தவர்கள். இவ்விரு பிரிவினருமே நடுநிலைப் பண்பையும் சமநிலைப் பண்பையும் விட்டு விலகியவர்களாவர்.
மூன்றாவது பிரிவினராகிய முஸ்லிம் சமூகத்தை நடுநிலை (அஸ்- ஸிறாத் அல்- முஸ்தகீம்) சமூகமாக அவன் வர்ணிக்கிறான். அதுவே அருள் பெற்ற பாதைளூ நபிமார்கள், ஸித்தீக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களது பாதை.
முஹம்மத்; (ஸல்) அவர்கள் நபியாக வருவதற்கு முன்பிருந்த சமூக நிலையைப் பார்க்கின்ற போதும் மனிதர்கள் இரு வகையினராக இருந்ததைக் காணமுடிகிறது.
ஒரு பிரிவினர்:
சிலை வணக்கம், மது, பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கொலை, அற்ப காரணங்களுக்காக யுத்தம் புரிதல் முதலியவற்றில் ஈடுபட்ட அறபிகள்.
மறு பிரிவினர்:
மார்க்கத்தைத் திரிபுபடுத்தி, இறை வார்த்தைகளை மாற்றியமைத்து, இறைவசனங்களை அற்ப விலைக்கு விற்று வாழ்ந்த வேதக்காரர்கள்.
இந்நிலையில், இஸ்லாம் என்ற சமநிலை மார்க்கத்தை நோக்கி மனித சமூகத்திற்கு அல்லாஹ் வழிகாட்டினான். நம்பிக்கை, வணக்கம், பண்பாடு, கொள்கையை நோக்கிய அழைப்பு ஆகிய அதன் அனைத்துப் பகுதிகளிலும் இச்சமநிலை பேணப்பட்டுள்ளது. 'அஸ்- ஸிறாத் அல்- முஸ்தகீம்' என்ற இச்சமநிலைப் பாதையை தினமும் ஒவ்வொரு தொழுகையிலும் பல முறை கேட்டுப் பிரார்த்திக்குமாறு அவன் எமக்குக் கட்டளையும் பிறப்பித்திருக்கிறான்.
எனவே, இச்சமநிலைதான் இந்த உம்மத்தின் அடி நாதமாகிறது. அதன் அறிவு, செயல், கோட்பாடு, நடைமுறை ஆகிய அனைத்திலும் அதுவே பிரதிபலிக்கிறது.
இந்தவகையில், இஸ்லாத்தில் இச்சமநிலை பிரதிபலிக்கும் பாங்கினை பின்வருமாறு பகுத்து நோக்க முடியும் :
1- நம்பிக்கை (அகீதா) பகுதி :
நம்பிக்கையின் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. அவயவங்களின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைவது இந்த நம்பிக்கைதான். உள்ளத்தின் செயற்பாடாக அமையும் இது, உடலின் செயற்பாட்டை விட அதிக பாதிப்புக் கொண்டது. மட்டுமன்றி, உடல் செயற்பாடுகள் உள்ளத்தின் செயற்பாட்டை பிரதி பலிப்பனவாகவும் உள்ளன. எனவேதான், எமது இஸ்லாம் சரியானதாக அமைவதற்கும், அதனடியான செயற்பாடுகள் சரியாக அமைவதற்குமான நிபந்தனையாக அல்லாஹ் அகீதாவை ஆக்கியிருக்கிறான்.
இஸ்லாமிய அகீதா மனித சிந்தனையை மூட நம்பிக்கைகளிலிருந்து பாதுகாத்து அதற்கொரு சமநிலைத்தன்மையை வழங்குகிறது. இந்த வகையில், ஒரு முஸ்லிம் தனது ஏக இறைக் கோட்பாட்டின் மூலம் நிராகரிப்பாளர்களது உள்ளங்களில் கூடு கட்டியிருக்கும் யூகங்களிலிருந்தும் போலி நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.
உலகில் தோன்றிய பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம் உம்மத் சமநிலையான அகீதாவைக் கொண்டிருப்பது போன்றே, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல்வேறு அகீதா பிரிவுகளுக்கு மத்தியில் நடுநிலையான அகீதா கொண்டதாக அஹ்லுஸ்ஸுன்னா வல்-ஜமாஆ பிரிவினர் காணப்படுகின்றனர். இவர்களே இஸ்லாமிய அகீதாவை மிகச் சரியாகவும் சமநிலையோடும் பிரதிநிதித்துவப் படுத்;துபவர்களாவர்.
அந்த வகையில், அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய விடயத்தில் 'முஅத்திலா'க்கள், 'முஷப்பிஹா'க்கள் ஆகிய தீவிரப் பிரிவினருக்கிடையில் சமநிலை பேணுவோராக இவர்கள் உள்ளனர். படைத்தலும் திட்டமிடலும் அல்லாஹ்வின் பாற்பட்டவை என்றும், உழைப்பும் செயற்பாடும் மனிதர்களின் பாற்பட்டவை என்றும் இவர்கள் நம்புவர்.
ஈமான் விடயத்தில், 'முர்ஜிஆ' பிரிவினருக்கும், பெரும்பாவம் புரிந்தோரை காபிராகக் கருதும் 'ஃகவாரிஜ்'களுக்குமிடையில் கூட இவர்கள் சமநிலை பேணுவர்.
ஸஹாபாக்கள் பற்றிய அபிப்பிராயத்தில், அவர்களை தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்தாமலும் தாழ்நிலைக்குக் கொண்டு சென்று தூற்றாமலும் பார்த்துக் கொள்வதோடு, ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றிய விமர்சனத்திலிருந்தும் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வர்.
இவ்வாறு அகீதா தொடர்பான அனைத்து அம்சங்களிலும் அவர்களது நம்பிக்கையில் ஒரு சமநிலை காணப்படும்.
2- உலகம் - மறுமை பற்றிய முழுமையான பார்வை:
'அல்லாஹ் உங்களுக்குத் தந்திருப்பவற்றின் மூலம் மறுமை வாழ்வைத் தேடிக்; கொள்ளுங்கள். உலகில் உங்களுக்குள்ள பங்கையும் மறந்து விடவேண்டாம்'
(அல்-கஸஸ் 77)
(அல்-கஸஸ் 77)
இந்த இறைவசனமே இங்கு சமநிலைப்பண்பை நிறுத்துப் பார்ப்பதற்கான அளவு கோலாக உள்ளது.
எனவே, உலக வாழ்வை நாம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டியதுமில்லைளூ அதனையே இலட்சியமாகக் கொண்டு பின்னால் அலைய வேண்டியதுமில்லை. மாற்றமாக, அல்லாஹ்வை வணங்குவதற்கான சாதனமாக, மறுமைக்குச் செல்லும் வாகனமாக அதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், பூமியில் அல்லாஹ்வின் அருட்பாக்கியங்களை தேடிப்பெறுவது ஒரு முஸ்லிமின் கடமையாகிறது.
இது இஸ்லாம் வற்புறுத்துகின்ற 'பற்றற்ற வாழ்வு' என்ற சிந்தனையோடு முரண்படுவதாகாது. ஏனெனில், 'பற்றற்றிருத்;தல்' என்பது உள்ளத்தில் தோன்றும் ஒரு நிலையாகும். நம்மிடம் உள்ள செல்வம் அதனோடு எவ்வகையிலும் முரண்படுவதில்லை.
இமாம் அஹ்மதிடம் ஒரு முறை இவ்வாறு கேட்கப்பட்டது:
'ஓர் அடியான் ஐம்பதாயிரம் காசுகளை வைத்துக் கொண்டு பற்றற்றவனாக (ஸாஹித்) இருக்க முடியுமா?'
அதற்கவர், 'ஆம்ளூ அத்தொகை அதிகரித்தால் அவர் மகிழ்ச்சியடையாமலும், குறைவடைந்தால் கவலைப்படாமலும் இருப்பாராயின்!' எனப் பதிலளித்தார்.
உலகிற்கும் மறுமைக்குமிடையிலான இச்சமநிலை குழம்பியதே இன்று பல முஸ்லிம்கள் பலவீனமாகவும் பிற்போக்குத்தனமாகவும் இருப்பதற்கான பிரதான காரணமாகும்.
3- வணக்க வழிபாடுகளில் சமநிலை:
ஒருவர் இஸ்லாத்தில் இணைந்திருப்பதை செயல்பூர்வமாக வெளிப்படுத்துவனவே வணக்கவழிபாடுகள். இவ்வணக்க வழிபாடுகள் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
அல்- ஹஸன் அல்- பஸ்ரீ (றஹ்) கூறுகிறார்:
தீவிரம் காட்டுவோருக்கும் புறக்கணிப்போருக்கும் இடையில் இம்மார்க்கம் தொலைந்து போனது. றஸுல் (ஸல்) அவர்களது தோழர்களில் சிலர் இரவில் தூங்காமல் நின்று தொழுவதாகவும், விடாமல் நோன்பு நோற்பதாகவும், சிலர் பெண்களைத் தவிர்த்து வாழ விரும்பியதாகவும் அன்னார் கேள்விப்பட்டபோது, அது சமநிலையான செயற்பாடாக அமையாது என அவர்களுக்கு விளக்கினார்கள். 'நானும் நோன்பு நோற்கிறேன்ளூ பெண்களைத் திருமணமும் முடிக்கிறேன். எனவே யார் எனது ஸுன்னாவைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல' என்றும் கூறினார்கள்.
மற்றொரு தடவை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களால் முடிந்த அமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான். செயல்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியது தொடர்ந்து செய்யப்படுவதாகும்ளூ அது குறைவாக இருப்பினும் சரியே!'
மனித உள்ளம் முன்னேறிச் செல்வது போலவே பின்தங்கி விடுவதுமுண்டு. அது ஒரு கால்நடை போன்றது. ஓய்வும் உணவும் கொடுத்து அதனை நாம் பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே, வணக்கவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது போன்றே ஓய்வும் அவசியமாகிறது.
ஹன்ழலா (றழி) என்ற ஸஹாபி நபியவர்களது சபையை விட்டு வெளியேறும் போது தனது ஈமானிய உணர்வு மாறுபடுவதாகக் கூறிய போது அன்னார் கூறினார்கள்:
'நீங்கள் என்னுடன் இருக்கும்போதுள்ள அதே நிலையில் தொடர்ந்தும் இருப்பீர்களாயின் மலக்குகள் பாதைகளில் உங்களுக்குக் கைலாகு கொடுப்பார்கள். ஆனால், நேரத்துக்கு நேரம் இந்நிலை மாறுபடவே செய்யும்.'
இச்சமநிலை கருதித்தான் மூன்று நாட்களை விடக் குறைவான காலத்தில் அல்- குர்ஆனை ஓதி முடிக்க வேண்டாம் என நாம் தடுக்கப்பட்டோம்.
எனவே, மனித இயல்பை கவனத்தில் கொண்டு வணக்க வழிபாடுகளில் ஒரு சமநிலைத்தன்மை பேணப்படவேண்டியது அவசியமாகும்.
4- அறிவு தேடுவதில் சமநிலை:
அறிவு என்பது இரு பகுதிகளைக் கொண்டது என்பதை நாம் அறிவோம். அவற்றிலொன்று குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையிலான அறிவு. இதனையே நாம் ஷரீஆக் கலைகள் என்கிறோம். மற்றையது, அவதானத்தையும் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவு. இந்த இரண்டாவது அறிவையே பின்வரும் அல்-குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகிறது:
'நீங்கள் எதையுமே அறியாதிருக்கும் நிலையில் உங்களது தாய்மாரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளிப்படுத்தினான்ளூ உங்களுக்கு கேள்வியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தித் தந்தான்'
(அந்-நாஸ் 78)
ஆனால் இன்று முஸ்லிம்களிடமிருந்து இவ்;வறிவு காணாமற் போய்விட்டது. ஷரீஅத் அறிஞர்களுக்கும் பௌதீக-இயற்கை விஞ்ஞானிகளுக்கும் இடையில் இன்று பாரிய இடைவெளியொன்று காணப்படுகிறது. இ;வ்விரு அறிவுகளும் ஒன்றிணைவதன் மூலமாகவே இஸ்லாம் எதிர்பார்க்கின்ற அறிவுச் சமநிலை உருவாக முடியும்.
இயற்கை விஞ்ஞானத்தைக் கற்கும் சில முஸ்லிம் இளைஞர்கள் ஷரீஅத் அறிவின் வழிகாட்டலிலிருந்து தூரமாகியே அதனைக் கற்பதை நாம் காண்கிறோம். குருதிச் சுற்றோட்டம் பற்றியோ சமிபாட்டுத் தொகுதி பற்றியோ கற்கும்போது சிருஷ்டிகளில் அல்லாஹ் வைத்திருக்கும் நுணுக்கங்களை அவர்கள் உற்று நோக்குவதில்லைளூ அல்லாஹ்வின் அழைப்பை பிறருக்கு எத்திவைக்கும் வழியாக அதனை பயன்படுத்திக் கொள்வதுமில்லை.
'ஆயாத்' (அத்தாட்சிகள்) என்பதை அறிஞர்கள் இரு வகையாகக் குறிப்பிடுவர்:
1- அல்லாஹ்வின் வேதத்தில் நாம் வாசிக்கின்ற ஆயாத் (வசனங்கள்)
2- பிரபஞ்சம் என்ற விரிந்த புத்தகத்தில் நாம் காணும் ஆயாத் (படைப்புகள்).
2- பிரபஞ்சம் என்ற விரிந்த புத்தகத்தில் நாம் காணும் ஆயாத் (படைப்புகள்).
அல்-குர்ஆனிலுள்ள ஆயத்துகளைப் படித்து, அவற்றின் கருத்துகள் பற்றிச் சிந்தித்து, அவற்றின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப நாம் செயற்படுவது போலவே, பிரபஞ்ச ஆயத்துகள் பற்றிச் சிந்தித்து அல்லாஹ்வின் மகத்தான சக்தி பற்றிப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். ஏனெனில், இவ்விரண்டுமே அல்லாஹ் ஒருவன் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாக உள்ளன.
இவ்வாறு இவ்விரு பகுதிகளுக்குமிடையில் சமநிலை பேணுவதன் மூலமே கிரந்தங்களிலும் விளக்கவுரைகளிலும் அடிக்குறிப்புகளிலும் நிறைந்துள்ள அறிவை மாத்திரம் நிறையக் கற்று, தாம் வாழ்கின்ற உலகத்தின் யதார்த்தம் பற்றி எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியும்.
மறுபுறத்தில், நடைமுறை உலகம் பற்றியும் அதில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சிந்தனைகள் பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்டிருக்கும் அதேவேளை, ஷரீஆக் கலைகளோடு மிகப் பலவீனமான தொடர்பை மாத்திரம் வைத்திருக்கும் தாஈக்களாக இளைஞர்கள் மாறுவதும் இதன்மூலம் தவிர்க்கப்பட முடியும்.
ஏனெனில், இவ்விரு நிலைகளுமே தீவிரமானவை. ஷரீஅத் பற்றிய தெளிவும், யதார்த்த உலகம் மற்றும் இயற்கை விஞ்ஞானம் பற்றிய அறிவும் இஸ்லாமிய தாஈக்களிடம் ஒன்றாக அமையப்பெறுவது அவசியமாகும். அதேபோன்று, இயற்கை விஞ்ஞானம் சார்ந்தவர்கள் ஷரீஅத் அறிவை தம்மோடு இணைத்துக்கொள்வதும் அவசியமாகும். அப்போதுதான் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை அவர்களிடம் ஆழமாக வேரூன்றும்ளூ மத்திய கால ஐரோப்பாவில் கிறிஸ்தவத் திருச்சபைக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், 'மதம் மக்களுக்கு அபின்' என்பது போன்ற வாசகங்களும் மீண்டும் தோன்றாமல் அப்போதுதான் தவிர்க்கப்படும்.
5- பண்பாடுகளில் சமநிலை:
பண்பாடுகள் ஈமானின் அளவுகோலாக உள்ளன.'முஃமின்களில் சிறந்த ஈமானுள்ளவர் அவர்களில் மிக அழகிய பண்பாடு கொண்டவரே!' என்று கூறினார்கள் நபியவர்கள்.
எனினும், இப்பண்பாடுகளுக்கும் ஒரு வரையறை உள்ளது. அந்த வரையறையை தாண்டிச் செல்லும்போது அது அத்துமீறலாகவும், இருக்க வேண்டிய அளவை விட குறைந்து விடும்போது அது இழிவாகவும் மாறுகிறது.
அந்த வகையில், பணிவாக நடத்தல் என்பது கர்வத்துக்கும் இழிவுக்கும் இடையில் நடுநிலை பேணுவதாகும். கோபத்திற்கும் ஓர் எல்லையுண்டு. மார்க்க விடயமொன்றுக்காக கோபப்படலும், விரும்பத்தக்க வீரமுமே அந்த எல்லை. இவ்வெல்லையைக் கடக்கும்போது அது அநியாயமாகவும் வரம்பு மீறலாகவம் மாறிவிடுகிறது.
6- ஷரீஅத் சட்டங்களில் சமநிலை:
'ஷரீஅத் சட்டங்கள் வரம்பு மீறிய தீவிரத்தோடும், மோசமான சலுகை தேடலோடும், கட்டுப்படுவதை பலவீனப்படுத்தும் காரணத் தேடலோடும் அணுகப்படக் கூடாது' என இஸலாமிய சட்ட விதியொன்று கூறுகிறது.
'வரம்பு மீறிய தீவிரம்' என்பது எப்போதும் கஷ்டமாக இருப்பதையே தேடிச்செல்லும் இயல்பாகும்.
'மோசமான சலுகை தேடல்' என்பது விதிவிலக்காக வழங்கப்பட்ட ஃபத்வாக்களையும், அறிஞர்கள் விட்ட தவறுகளையும், நிராகரிக்கப்பட்ட அபிப்பிராயங்களையும் தேடிப் பின்பற்ற முனைவதாகும்.
'கட்டுப்படுவதை பலவீனப்படுத்தும் காரணத் தேடல்' என்பது அல்லாஹ்வின் ஏவலொன்றுக்குப் பின்னால் மறைந்துள்ள நோக்கத்தை அல்லது காரணத்தை அறிந்து கொள்ளும் வரை அந்த ஏவலை நடைமுறைப் படுத்தாதிருப்பதாகும்.
ஆனால், அல்லாஹ் எப்போதும் நல்லவற்றையே ஆகுமாக்குகிறான். மோசமானதையெல்லாம் அவன் ஹராமாக்கி விடுகிறான். நோக்கமின்றி எதனையும் அவன் சட்டமாக்குவதில்லை. அந்த நோக்கம் சிலபோது நமக்குத் தெரிய வரலாம்ளூ பலபோது தெரியாமலும் போகலாம். இந்த உண்மையை ஆழ்ந்து நம்புவதே நமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒரு பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லையெனில், அப்படியொரு பொருளே இல்லை என அர்த்தமாகி விடாது. நமது புலனறிவு அல்லாஹ்வின் எல்லையற்ற ஞானத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறுகியதாகும்.
7- நன்மையை ஏவுவதிலும் தீமையைத் தடுப்பதிலும் சமநிலை:
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணி ஒரு மார்க்கக் கடமை. அதன் மூலமே இந்த உம்மத் 'சிறந்த உம்மத்' என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. எனினும், இப்பணியில் நிதானத்தோடும் சமநிலையோடும் ஈடுபடுவது அவசியமாகும்.
சிலர் தீமையைக் கண்ட மாத்திரத்திலேயே தடுக்க முற்பட்டு விடுவர். இதன்போது கவனிக்க வேண்டிய நிபந்தனைகளையோ ஒழுங்குகளையோ அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
வேறு சிலரோ தீமையைக் கண்டாலும் அதுபற்றி எந்த வகையிலும் அலட்டிக் கொள்வதில்லை.
பின்வரும் இறைவசனத்தை இதற்கான ஆதாரமாக அவர்கள் கொள்கின்றனர்:
'விசுவாசிகளே! உங்கள் விவகாரத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி பெற்றவர்களாயின், யார் வழிகெட்டுப் போனாலும் அது உங்களை பாதிக்கப் போவதில்லை'. (அல்-மாயிதா 105)
ஆனால் அபூபக்கர் (றழி) இவ்வசனம் பற்றி பின்வருமாறு மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்:
மனிதர்களே! இவ்வசனத்தை நீங்கள் அதற்குப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்துகிறீர்கள்.
ஆனால், றஸூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்:
'மனிதர்கள் ஓர் அநியாயக்காரனைக் கண்டும் அவனது கரத்தைப் பிடித்து அநியாயத்திலிருந்து அவனைத் தடுக்கவில்லையென்றால், அல்லாஹ் தனது தண்டனையை அனைவர் மீதும் பொதுவாக இறக்குவதற்குத் தயாராகி விடுகிறான்'.
'மனிதர்கள் ஓர் அநியாயக்காரனைக் கண்டும் அவனது கரத்தைப் பிடித்து அநியாயத்திலிருந்து அவனைத் தடுக்கவில்லையென்றால், அல்லாஹ் தனது தண்டனையை அனைவர் மீதும் பொதுவாக இறக்குவதற்குத் தயாராகி விடுகிறான்'.
மறுபுறம், தீமையைத் தடுப்பதில் அளவுக்கதிகம் தீவிரம் காட்டுவோர் கவனிக்க வேண்டிய சில அம்சங்களும் காணப்படுகின்றன. இமாம் இப்னுல் கையிம் பின்வருமாறு கூறுகிறார்:
தீமையைத் தடுப்பதற்கான படித்தரங்கள் நான்காகும்:
1-தீமை நீங்கி அவ்விடத்தில் அதனைவிட நல்ல நிலை ஏற்படல்.
இதன்போது தீமையை நீக்குதல் வாஜிப் ஆகிறது.
இதன்போது தீமையை நீக்குதல் வாஜிப் ஆகிறது.
2-தீமை மொத்தமாக நீங்கி அவ்விடத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பக்கூடிய நிலையொன்று ஏற்படல். இதன்போதும் தீமையை நீக்குதல் வாஜிப் ஆகிறது.
3-ஒரு தீமை முற்றாக நீங்கி அவ்விடத்தில் அது போன்ற மற்றொரு தீமை தோன்றுதல்.
இதன்போது குறித்த தீமையை நீக்குவதா இல்லையா என்பது இஜ்திஹாதுக்கு உட்பட்டதாகிறது.
இதன்போது குறித்த தீமையை நீக்குவதா இல்லையா என்பது இஜ்திஹாதுக்கு உட்பட்டதாகிறது.
4-ஒரு தீமை நீங்கி அவ்விடத்தில் அதை விடப் பாரிய மற்றொரு தீமை தோன்றுதல்.
இதன்போது தீமையை நீக்குதல் ஹறாம் ஆகிறது.
இதன்போது தீமையை நீக்குதல் ஹறாம் ஆகிறது.
8- சகோதரத்துவத்தில் சமநிலை பேணல்:
சகோதரத்துவம் என்பது ஈமானுக்கு அடுத்த நிலையில் அல்லாஹ்வினால் வழங்கப்படக்கூடிய அருளாக உள்ளது. அது ஈமானின் அடிப்படையான பிரிவுகளுள் ஒன்றுமாகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று மஸ்ஜிதை அமைத்ததன் பிறகு மேற்கொண்ட முதற்பணி முஹாஜிர்களுக்கும் அன்ஸார்களுக்கும் இடையில் சகோதரத்துவப் பிணைப்பை ஏற்படுத்தி வைத்ததாகும். முஹாஜிர்களோடு அன்ஸாரித் தோழர்கள் தமது அனைத்துச் செல்வங்களையும் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு இந்த சகோதரத்துவம் அவர்களிடம் உயர்ந்த நிலையில் காணப்பட்டது.
இஸ்லாம் சகோதரத்துவம் என்ற இவ்வம்சத்திற்கு இவ்வளவு மகத்தான இடம் வழங்கியுள்ள போதிலும், அதில் கூட ஒரு சமநிலை பேணப்பட வேண்டும் என அது எதிர்பார்க்கிறது. இமாம் இப்னுல் கையிம் இதனை பின்வருமாறு விளக்குகிறார்:
'சகோதரர்களுடன் இணைந்திருத்தல் என்பது இருவகையானது:
முதல் வகை: ஒத்த இயல்பு கொண்டிருப்பதாலும், பொழுது போக்கு நோக்கத்துக்காகவும் சேர்ந்திருத்தல்.
இதிலுள்ள நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும். குறைந்தது உள்ளம் சீர்கெடுதல், நேரம் விரயமாதல் முதலிய தீமைகளாவது இதன்போது ஏற்பட வாய்ப்புண்டு.
இரண்டாவது வகை: அல்லாஹ்வுக்காகவும் அவனது பாதையில் உழைப்பதற்காகவும் இரு சகோதரர்கள் இணைதல். இதுவே சரியான இணைவெனினும், இதில் கூட சில அபாயங்கள் உள்ளன:
1-ஒருவர் மற்றவரது குறைகளைக் கண்டும் அது குறித்து சுட்டிக்காட்டாதிருப்பதும், சிலபோது அவரிடம் இல்லாத நல்ல பண்புகளை இருப்பதாகக் கூறிப் புகழ்வதும். இது அவர்கள் இருவருக்குமிடையில் ஷெய்த்தான் நுழைவதற்கான வழியாகி விட முடியும்.
2-தேவைக்கதிகான பேச்சும் சந்திப்புகளும்.
3-இருவருக்குமிடைலான சந்திப்பு ஒரு வழக்கமாகவும், நோக்கத்தை விட்டுத் திசை திருப்புகின்ற இன்பமான நிகழ்ச்சியாகவும் மாறிவிடல்.
மொத்தத்தில், சந்திப்பு என்பது மகரந்தச் சேர்க்கை போன்றது. எந்த மகரந்தச் சேர்க்கை நல்லதாக அமைகிறதோ அதன் விளைச்சலும் நல்லதாகவே இருக்கும். எனவே, சகோதரத்துவம் தொடர்பான ஒழுங்குகளையும் விதிகளையும் நாம் பேணிக் கொள்வது அவசியமாகும். அப்போதுதான் அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் சிறந்த விளைவுகளை அறுவடை செய்யமுடியும்.'
9- தஃவா பணியில் சமநிலை:
இஸ்லாமியப் போதனைகளை சிலர் உள்ளத்தோடும் நடைமுறையோடும் தொடர்புபடுத்தாது வரட்டுத் தொனியில் முன்வைக்கின்றனர். இது பாரிய தவறாகும். அல்லாஹ் தன்னை வணங்குமாறு நம்மை அழைக்கின்ற போது கூட நன்மையின் பால் ஆசையூட்டியே அழைக்கிறான்.
உதாரணமாக, நோன்பு பற்றிய கட்டளையை எடுத்துக் கொள்ளுங்கள். 'நோன்பு உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது' என்று கூறுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல், 'விசுவாசம் கொண்டவர்களே!' என முதலில் அவன் விளிக்கிறான். 'உங்களுக்கு முன்பிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று' என்பதன் மூலம், அது ஒரு புதிய கடமையல்ல என்றும் உணர்த்துகிறான். பின்னர், 'நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக' என்று கூறி நோன்பின் நோக்கத்தை விளக்குகிறான். தொடர்ந்து, அந்த அந்த நோன்பு 'குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரமே' என்றும், பிரயாணிக்கும் நோயாளிக்கும் அதில் சலுகை உள்ளது என்றும் விளக்கி அதனை இலகுபடுத்திக் கொடுக்கிறான்.
ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகள் பற்றிக் குறிப்பிடும் போதும் இதே அணுகு முறையினையே அல்-குர்ஆனில் நாம் பார்க்கிறோம்.
மறுபுறத்தில், இஸ்லாமியப் போதனைகளை கேட்போரின் செவிகளில் இடியாக இறக்குகின்ற சில அழைப்பாளர்களும் இருக்கவே செய்கின்றனர். நன்மையின் பால் ஆசையூட்டும் பண்பு இவர்களிடம் சற்றும் காணப்படுவதில்லை. இவர்களுக்குத் தெரிந்த உபதேசமெல்லாம் கப்ரிலும் மறுமையிலும் இடம்பெறக்கூடிய வேதனைகள் மாத்திரமே.
சிலர் நன்மையில் ஆசையூட்டும் வழிமுறையை மாத்திரமே கையாள்வர். இதுவும் தவறானதாகும். அல்-குர்ஆன் இவ்விரண்டையும் கலந்த ஒரு முறையினையே பின்பற்றுகிறது. நன்மையில் ஆர்வமூட்டும் அதேவேளை, தீமை குறித்து அச்சமூட்டவும் அது தவறவில்லை. 'நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாகவும், மிக்க மன்னிப்பும் கருணையும் கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்'. (அல்-மாயிதா 98) என அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.
மார்க்கத்தின் பால் அழைக்கப்படுபவர்கள் பற்றியும், அவர்களது உளவியல் நிலைமைகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியப்பாட்டை இது எமக்கு உணர்த்துகிறது.
தஃவாவில் சமநிலை பேணுதல் என்பதற்குள் 'அல்-ஹிக்மா' என்ற அம்சமும் உள்ளடங்கும். 'அல்-ஹிக்மா' என்பது அறிவை விட மேம்பட்டதோர் அம்சமாகும். ஒருவர் ஹலால்-ஹறாம் பற்றி அறிந்திருக்க முடியும். எனினும், ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான இடத்தில் அதனைப் பிரயோகிப்பதே 'அல்-ஹிக்மா' ஆகும். இதனைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே இமாம் புஹாரி தனது கிரந்தத்தில், 'அறிவையும் ஹிக்மாவையும் தொடர்பு படுத்தும் வகையில் வந்துள்ளவை' என ஓர் அத்தியாயத்திற்குப் பெயரிட்டுள்ளார். இவ்விரண்டும் வேறுவேறான அம்சங்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
உபதேசம் செய்யும் போது கேட்டுக் கொண்டிருப்போர் சலிப்படையாத வண்ணம் அதனை அமைத்துக் கொள்வதும் இச்சமநிலையின் பாற்பட்ட அம்சமே. அபூபக்கர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:
'நீங்கள் உபதேசம் புரிந்தால் அதனை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிகமாகப் பேசும்போது ஒன்று இன்னொன்றை மறக்கடித்து விடுகிறது'.
நபியவர்களது ஸுன்னாவும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
10- இஸ்லாமிய சிந்தனையில் சமநிலை:
இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும், மாறக்கூடிய அம்சங்களில் புத்தாக்கம் செய்வதிலும் கூட ஒரு சமநிலை பேணப்பட வேண்டுமென இஸ்லாமிய சிந்தனை வலியுறுத்துகிறது. ஏனெனில், மார்க்கத்தில் மாறாத அம்சங்களும் உள்ளனளூ மாறும் அம்சங்களும் உள்ளன. மாறக்கூடியவற்றை நாம் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டியதில்லைளூ நிலையானவற்றை மாற்ற வேண்டியதுமில்லை. இத்தகைய நிலைப்பாட்டின் மூலமாக, மார்க்கத்தின் எந்த அம்சமும் மாற்றப்படக்கூடாது என்ற தீவிரத்திலிருந்தும், மார்க்கத்தின் அனைத்து அம்சங்களும் மாற்றப்படக்கூடியவையே என்ற தீவிரத்திலிருந்தும் நாம் விடுபடுகிறோம்.
இஸ்லாத்தின் நிலையான அம்சங்களாக பின்வருவன காணப்படுகின்றன:
1-நம்பிக்கைக் கோட்பாடு (அல்-அகீதா)
2-வணக்க வழிபாடுகள்
3-மது, சூதாட்டம் போன்ற அடிப்படையான ஹறாம்கள்.
4-உண்மை, நாணயம் போன்ற அடிப்படையான பண்பாடுகள்
5-பெற்றோரைப் பேணுதல் போன்ற அடிப்படையான கடமைகள்
1-நம்பிக்கைக் கோட்பாடு (அல்-அகீதா)
2-வணக்க வழிபாடுகள்
3-மது, சூதாட்டம் போன்ற அடிப்படையான ஹறாம்கள்.
4-உண்மை, நாணயம் போன்ற அடிப்படையான பண்பாடுகள்
5-பெற்றோரைப் பேணுதல் போன்ற அடிப்படையான கடமைகள்
இவ்வம்சங்கள் எக்காலத்திலும் மாற்றப்பட முடியாதவையாகும். எனினும், இவற்றுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தும் முறை கால சூழ்நிலைக்கேற்ப மாறுபட முடியும். ஒவ்வொரு காலப்பிரிவிலும் தோன்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இஸ்லாமிய அகீதா முன்வைக்கப்படுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மாற்றமடையக் கூடிய அம்சங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக கொடுக்கல்-வாங்கல் (அல்-முஆமலாத்) பகுதி அமைகிறது. இப்பகுதியில் குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் சட்ட அறிஞர்களால் வகுக்கப்பட்ட சில அடிப்படையான சட்ட விதிகள் காணப்படுகின்றன.
'நன்மையை ஏற்படுத்துவதை விட தீமையை நீக்குவது முற்படுத்தப்பட வேண்டும்', 'சங்கடம் நீக்கப்பட வேண்டும்' என்பன போன்ற விதிகளை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவ்வாறான விதிகள் பொதுவானவையாகவும், சட்டம் பெறும்போது பயன் தரக் கூடியவையாகவும் உள்ளன. ஏனெனில், சட்ட வசனங்கள் வரையறுக்கப்பட்டவைளூ நிகழ்வுகளோ முடிவின்றி புதிது புதிதாகப் பிறந்து கொண்டிருப்பவை. இந்த வகையில், உள்ளடக்கத்தையும் வெளித் தோற்றத்தையும் நாம் வேறுபிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக, 'ஷூறா'(ஆலோசனை செய்தல்) என்பது இஸ்லாத்தின் மிக அடிப்படையானதோர் அம்சமாகும். அது நீதியை அடிப்படையாகக் கொண்டது. எனினும், இந்த 'ஷூறா'வை நடைமுறைப் படுத்துகின்ற வடிவம் இடத்திற்கும் காலத்திறகும் ஏற்ப வேறுபட முடியும்.
முன்னுரிமைப் படுத்த வேண்டிய அம்சங்களைத் தெரிவு செய்யும்போதும் இச்சமநிலை பேணப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இஸ்லாத்தின் சட்டங்கள் அனைத்தும் ஒரே தரத்தைக் கொண்டவையல்ல. சமூக நீதியும், பல் துலக்குவதும் இஸ்லாமிய சட்டத்திலுள்ள அம்சங்களே. எனினும், இவையிரண்டும் சம தரத்திலுள்ளவையல்ல. இவற்றிலொன்று இல்லாமற் போய்விடும் போது ஏற்படும் மோசமான விளைவுகளை கவனித்துப் பார்த்தால் இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். சமூக நீதி மறைந்து விடுவதே அநியாயங்களும் சீர்கேடுகளும் பரவுவதற்குப் பிரதான காரணமாகிறது. ஆனால், பல் துலக்குதல் தொடர்பான பிரச்சினை இதனை விட மிகவுமே அற்பமானது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (றழி) ஐ யெமனுக்கு அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்:
'வேதக்காரர்கள் வாழுகின்ற ஒரு சமூகத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள். எனவே, முதலில் அவர்களை 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லைளூ முஹம்மத் (ஸல்) அவனது தூதர்' என்ற ஷஹாதத்தை நோக்கி அழையுங்கள். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள்'.
'வேதக்காரர்கள் வாழுகின்ற ஒரு சமூகத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள். எனவே, முதலில் அவர்களை 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லைளூ முஹம்மத் (ஸல்) அவனது தூதர்' என்ற ஷஹாதத்தை நோக்கி அழையுங்கள். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள்'.
இந்த முதன்மைப் படுத்தல் ஒழுங்கினையே நாம் இஸ்லாமிய அழைப்புப் பணியின் போதும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், ஹறாம்களில் ஈடுபட்டு கடமைகளைப் புறக்கணித்து வாழும் ஒருவரை, முதலில் ஸுன்னத்தான அமல்களைச் செய்யுமாறும், மக்ரூஹான கருமங்களை விட்டுவிடுமாறும் அழைப்பது பொருத்தமாக அமையாது. ஹதீஸ் குத்ஸீயித் கூட, அல்லாஹ்வை நெருங்குவதற்கான மார்க்கமாக ஸுன்னத்தான வணக்கங்களை விட ஃபர்ழான வணக்கங்களே முற்படுத்திக் கூறப்பட்டுள்ளன.
இறுதியாக...
பின்வரும் அம்சங்களில் நமது கவனக்குவிப்பு நகர்த்தப்படுவதன் மூலம் சமநிலை என்ற இப்பண்பினை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும்:
கிளைகளிலிருந்து வேர்களை நோக்கி...
அவயவங்களின் செயற்பாட்டிலிருந்து உள்ளத்தின் செயற்பாட்டை நோக்கி...
நஃப்லுகளிலிருந்து ஃபர்ழுகளை நோக்கி...
கஷ்டப்படுத்துவதிலிருந்து இலகுபடுத்தலை நோக்கி...
தர்க்கங்களிலிருந்து செயற்பாடுகளை நோக்கி...
உணர்;சி வசப்படலையும் எழுந்தமாறான செயற்பாடுகளையும் விட்டு அறிவு பூர்வமான- திட்டமிட்ட செயற்பாடுகளை நோக்கி...
முரண்படுவோருடன் பகை கொள்வதைத் தவிர்த்து விட்டுக் கொடுப்பை நோக்கி...
எட்டாத கனவுலகில் சஞ்சரிப்பதை விட்டு சாத்தியமான யதார்த்தத்தை நோக்கி...
சமூகத்தை விட உயர்ந்தவர்கள் என்ற பெருமையைத் தவிர்த்து கூட்டு வாழ்க்கையை நோக்கி...
இறந்த காலத்துடன் சுருங்கி விடாமல், நிகழ் காலத்தில் வாழ்ந்து, எதிர் காலத்திற்காகத் தயார்படுத்துவதை நோக்கி...
பகையுணர்வைத் தரும் கருத்து வேறுபாடுகளை விட்டு ஒத்துழைப்பை நோக்கி...
வாழ்வியல் அம்சங்களைப் புறக்கணிப்பதை விட்டு அவற்றைத் திறம்படச் செய்து வணக்கமாக்கிக் கொள்வதை நோக்கி...
தற்பெருமையை விட்டு சுய விசாரணையை நோக்கி...
இவ்வாறு பல நகர்வுகள் இன்று நமக்கு அவசியப்படுகின்றன. அப்போதுதான் நமது சிந்தனை, நடத்தை, கோட்பாடு முதலிய அனைத்தையும் சமநிலை அல்லது நடுநிலை என்ற உறுதியான அடிப்படையின் மீது கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.