Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 August 2014

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதை பெற்றோர் உணரவேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவதால் ஏற்படும் இந்த நோய் தாக்குகிறது. இதனை குணப்படுத்த தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.


உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது படி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு நோய். இந் நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் என்னும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையினால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

நீரிழந்த நிலை

வயிற்றுப் போக்கு ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்ப கட்டத்தில் குழந்தைகளுக்கு நாவறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும்.

ஆபத்தான கட்டம்

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சர்க்கரை உப்புக்கரைசல்

வயிற்றுப் போக்கு இருக்கும் குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி மட்டும் எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீராகாரமாக கொடுக்கலாம்.

வயிற்றுப் போக்கு இருக்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை உப்புக்கரைசல் தண்ணீரை கொடுக்கவேண்டும். இது குழந்தை இழந்த நீரினை பெற உதவும். வயிற்றுப் போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக்கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும்.

தயிர், அரிசிக்கஞ்சி

உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக்கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப் போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிக்கும் இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

பல் முளைக்கத் தொடங்கும் பருவத்தில்தான் பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகள் கண்டதை எடுத்து வாயில் வைக்கும் பழக்கம் இருந்தால் அதை தடுக்கவேண்டும். நகம் கடிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த கால கட்டத்தில் குழந்தைகளை கண்காணிப்போடு கவனித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடனடியாக சிகிச்சை

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடலடித்தல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX