வட்டிக்கு வேறு பெயர் சேவைக் கட்டணமா?'
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸ் எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்காது வட்டியோடு சம்பந்தப்படும் அனைவரும் சாபத்திற்குள்ளானவர்கள் என்பதைத் தெளிவாக இனம் காட்டுகிறது. இருந்தாலும், இன்றுள்ள நிலைப்பாடுகள், தேவைகள் விரிவடைந்துள்ளன: வியாபாரங்கள் வியாபார உத்திகள் உலகமயமாகி விட்ட வர்த்தகம் வியாபாரத்தில் போட்டி Fortune சஞ்சிகையில் பெயரைப் பதித்துக் கொள்வதற்குள்ள ஆசை உலகிலே அன்றாடம் வரக்கூடிய புதுப்புது வடிவிலான வாகனங்களை உடைமையாக்குதல் பெருநகரங்களில் உயர்ந்த, அகன்ற கட்டடங்களுக்கு உரிமை கோருதல் அருமையாக வளர்த்த பிள்ளைகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் திருமணம் செய்து வைத்தல் செல்லக் குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களை Colourful ஆக நடத்துதல். இப்படி சொல்லப்பட்ட சொல்லப்படாதவற்றின் அழைப்புக்கு மனிதன் இழுபட்டுச் செல்கின்றான். வியாபாரம் விருத்தியடைந்தால்தான் இதற்கெல்லாம் பணம்! அதன் காரணமாக இன்று சர்வசாதாரனமாக முஸ்லிம்கள் வங்கிகளிலே வியாபார விருத்திக்கென்று கடன் பெறுகின்றார்கள். முஸ்லிம் வியாபாரிகள் இப்படி கடன் பெறுவதை சரி கண்டு மார்க்கத் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன.
இந்தக் காரணத்தையே முன் வைத்து முஸ்லிம்கள் வங்கிகளில் வேலை செய்கிறார்கள். வட்டிக் கணக்குகள் எழுதுகிறார்கள். கடன் கேட்டு வருபவர்களோடு தான் வேலை செய்யும் வங்கியின் சார்பில் பேரம் பேசி ஒப்பந்தங்கள் செய்கிறார்கள்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் இஸ்லாமிய வங்கிகள் என்று நாமம் சூட்டிக்கொண்டு கடன் கொடுக்கிறார்கள். கடன் எடுக்கிறார்கள். கடன் திருப்பிக் கொடுக்கப்படும் போது கொடுத்த அளவை விடக் கூடுதலாகத்தான் வசூலிக்கப்படுகிறது. அது வட்டியில்லையாம் சேவைக்கான கட்டணமாம்! எளிதான ஒரு உதாரணம்! ரூபா 100,000 கடன் பெற்றவர் 20 மாதங்களில் கொடுக்க வேண்டிய சேவைக் கட்டணம் ரூபா 2,500; ரூபா 1,000,000 கடன் பெற்றவர் 20 மாதங்களில் கொடுக்க வேண்டிய சேவைக் கட்டணம் ரூபா25,000. சேவைக் கட்டணம் என்று வந்தால் கணக்கு வைத்துக் கொள்வதற்கு மேலதிக ஆட்களை இந்த குறிப்பிட்ட கணக்குக்காக மட்டும் வைக்கிறார்களா? கணக்காளர் ஒப்பந்தப் பத்திரத்திலும் கணக்குப் புத்தகத்திலும் அதிகமாக ஒரு பூஜ்யத்தைத்தான் எழுதுகிறார். அந்தப் பூஜ்யத்திற்காக மட்டும் அறவிடப்படும் சேவைக் கட்டணம் ரூபா 22,500!!!??? சேவைக் கட்டணம் என்று பெயரிட்டு அல்லாஹ்வின் சட்டத்தில் உள்ள வசனங்களுக்குள் உட்புகுந்து பார்க்கிறார்களா?
ஒருவன் வட்டியை வட்டிதான் என்று சொல்லிக் கொண்டே அதில் சம்பந்தப் படுவது வேறு! வட்டிக்கு வேறு பெயர் வைத்து அதை சமூகத்தில் ஆகுமாக்கி அனைவரையும் வழிகெடுப்பது வேறு! இரண்டுமே பாரதூரமான குற்றம்தான்; ஆனால், பின்னையது அல்லாஹ்வின் ஷரிஆவிலே கை வைப்பதாகும்!
இந்த இஸ்லாமிய வங்கிகளின் மற்றுமொரு கொடுக்கள் வாங்களின் நடைமுறையைப் பாருங்கள்:"இஸ்மாயீல்" என்பவரிடமுள்ள சாமானை "அஹ்மத்" என்பவர் விலைக்கு வாங்க விலை பேசுகிறார்."அஹ்மத்" பேசி முடித்த விலை "ரூபா 10,000". இப்போது "அஹ்மத்" என்பவர் "இஸ்லாமிய வங்கி”க்குச் சென்று பொருளை தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்; தான் அதற்குப் பேசி முடித்த விலையையும் குறிப்பிடுகிறார். "இஸ்லாமிய வங்கி" இப்போது பொருளுக்கு "14,000" என்று விலை நிர்ணயித்து பொருளை வாங்கிக் கொடுக்கிறது. "இஸ்லாமிய வங்கி" இங்கு செய்திருப்பது கடன் கொடுத்துள்ள வேலைதான்.
இது வட்டியில்லை, Forward Purchasing முற்படுத்தி வாங்குதல் என்று இஸ்லாமிய வங்கி கொடுக்கும் அர்த்தம் (Interpretation).
தான் விற்காத பொருளை வாங்குபவர் பொருளுக்குச் சொந்தக்காரரிடத்தில் விலை பேசி வந்து வங்கியில் அறியக் கொடுத்தவுடன் அதற்கு புது விலையொன்றை நிர்ணயித்து அதே நபருக்கு விற்பனை செய்வதாக இவர்கள் அர்த்தம் செய்கிறார்கள். இந்த அர்த்தம் சரிதானா அல்லது இவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இது தெளிவாக பண வியாபாரம் நடக்கிறது. வாங்குபவர் பொருள் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை வங்கி கொடுக்கிறது. வட்டியும் முதலுமாக, மன்னிக்கவும் சேவைக் கட்டணமும் முதலுமாக வங்கி வசூலிக்கிறது.
வட்டிக்கு வேறு சொல்லாட்சி பாவிக்கப் படுகிறது என்பதுதான் என்னுடைய கருத்து. வட்டியைப்பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு மனிதன் கடன் எடுப்பது எதற்காக, அதன் அளவு என்ன என்பது போன்ற எல்லைகள் எப்படி நிர்ணயிக்கப் படுகின்றன? ஸகாத் கொடுப்பதற்கு \'நிஸாப்\' இருப்பது போல் ஒரு மனிதன் கடன் எடுப்பதற்கு இருக்கிறதா?
இதென்ன இப்படிப்பட்ட கேள்விகள் என்று சிலர் முணுமுணுப்பது போலத் தெரிகிறது. நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட கேள்வியல்ல இது. இன்று எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் செக்கும் (Cheque) கையுமாகவும்தான் இருக்கிறார்கள். வங்கித்தொடர்பில்லையென்றால் வியாபாரம் இல்லை என்ற நிலை. அதுவும் ஏற்றிறக்குமதி வியாபாரம் என்றால் Letter of Credit அதோடு சம்பந்தப்பட்ட வட்டி கொடுப்பனவுகள் நடைபெறத்தான் செய்கின்றன. வட்டியோடு சம்பந்தப்படுபவன் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதருடனும் யுத்தப் பிரகடனம் செய்கிறான் என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு. ஆகவே, வட்டி சம்பந்தமாக மேலும் ஆய்வுகள் வேண்டும். அவை அல்-குர்ஆனையும் அல்-குர்ஆனோடு முரண்பாடில்லாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் நிழலில் எழுதப்பட்டவையாயிருக்க வேண்டும். இஸ்லாமிய வங்கிகளை நடத்துபவர்கள் முப்திகளாக இருக்கிறார்களே என்று முகஸ்துதி ஆய்வுகளாக இருக்கக் கூடாது. உலகின் நிதித் தாபனங்கள் யாவும் யூதர்களின் ஆதிக்கத்தில் இருப்பதனால் நாங்களும் ஏதோ ஒரு அடிப்படையில் நிதித் தாபனங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான இஸ்லாமிய வங்கிகள் உருவாக வேண்டுமென்று சொல்வார்களானால் அவர்கள் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ எந்தச் சேவையையும் செய்தவர்களாக முடியாது. ஆய்வுகள் வேண்டுமென்று சொல்லிவிட்டு நிபந்தனைகள் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று அங்கலாய்ப்பது தெரிகிறது. ஆகவே, இத்தோடு நிறுத்தி இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.