முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பெருநாட்களும் இரண்டு முக்கியமான இபாதத்துக்களைத் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன.
- ஈதுல் பித்ர்
- ஈதுல் அழ்ஹா
ரமழானைத் தொடர்ந்து ஈதுல் பித்ர் உம் ஹஜ்ஜைத் தொடர்ந்து ஈதுல் அழ்ஹாவும் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.
முஸ்லிம்களின் வாழ்வே வணக்கமாக அமைதல் வேண்டும். இந்த வகையில் அவர்களின் பெருநாட்களும் கூட வணக்கங்களுடன் தொடர்புபட்டவையாக,
வணக்கமாக அமைந்திருப்பதை பார்க்கிறோம். எமது
பெருநாள் வெறுமனே ஆடிப்பாடி, கூத்தாடி கும்மாளம் அடித்து கழிக்கும் நாளல்ல் வழமையாக எமக்குறிய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் நாளுமல்ல. எமது ஈத் ஆனது தக்பீருடன் ஆரம்பமாகின்றது; தொழுகையில் தொடர்கின்றது; தக்பீருடன் நிறைவு பெறுகின்றது. எமது பெருநாளின் பிரகடனம் அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கம். முஸ்லிம்களின் கொள்கைப் பிரகடனம் அல்லாஹு அக்பர்.
- ஐங்கால தொழுகைகளின் ஆரம்பம்; – அல்லஹு அக்பர்.
- அதானின் ஆரம்பமும் முடிவும் – அல்லாஹு அக்பர்.
- இகாமத்தின் ஆரம்பமும் முடிவும் – அல்லாஹு அக்பர்.
- கால் நடைகளை அறுக்கும் போது மொழிவதும் – அல்லாஹு அக்பர்.
- யுத்த களத்தில் முஜாஹித்கள் எழுப்பும் கோஷம் – அல்லாஹு அக்பர்.
- இந்த தக்பீர் முழக்கமே முஸ்லிம்களின் பெருநாளின் சிறப்பம்சம்.
மலர்ந்திருக்கும் பெருநாள் மறுமை நாளுக்கு ஒப்பானது. அந்த மறுமை நாளிளே ‘சில முகங்கள் பிரகாசமாக இருக்கும்’ சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும், மற்றும் சில முகங்கள் அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்; கருமை இருள் அவற்றை மூடியிருக்கும்.’
நற்காரியங்களில் ஈடுபடட்டு வருடத்தை நிறைவாக பயன்படுத்திய மனிதர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக, உண்மையான பெருநாளாக இருக்கும்; காலத்தைப் பாழ்படுத்தி வீணாக்கியவர்களுக்கோ இந்த நாள் சிறு நாளாக – அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும் நாளாகவே இருக்கும்; இத்தகையவர்கள் கைசேதப்படும் நாளாக இந்த நாள் அமையும்.
உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்று கூடியுள்ள சந்தர்ப்பம் இது. வருடா வருடம் சழுதாயத்தின் ஒற்றுமையை அழகாக வெளிக்காட்டும் இவ்வாறான ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண்பதரிது.
முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜின் போது எம்மத்தியிலுள்ள மத்ஹப் வேறுபாடுகளையோ, தரீக்கா, ஜமாஅத் முரண்பாடுகளையோ, பிற பேதங்களையோ பொருட்படுத்துவதில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வு ஓங்கி நிற்க அல்லாஹ்வின் அழைப்பையேற்று அவனது திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கில், ‘லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்’ என்ற கோஷத்தை ஒருமித்து முழங்கியவர்களாக அனைத்து கிரியைகளிலும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக ஈடுபடுகின்றோம்.
ஹஜ்ஜில் நாம் காணும் இந்த ஒற்றுமையும் உடன்பாடும் ஹஜ்ஜுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் அதன் மூலம் நாம் பெறும் பயிற்சிகள் படிப்பினைகள் அர்த்தமற்றவையாகி விடுமல்லவா?.
மேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தன்னிகரற்ற தியாகங்களை எமது நினைவுக்கு கொண்டுவருகின்றது. சத்தியத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறைதிருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
முஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று இருக்கின்றது. உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. உலகின் எல்லா சக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராக – தம்மத்தியில் வேறுபாடுகளை மறந்து – கைகோர்த்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நிலையில் எமது விடுதலைக்கும் வெற்றிக்கும் வழியமைக்கும் காரணிகள் இரண்டே இரண்டுதான். அவை:
- ஒற்றுமை
- தியாகம்
ஹஜ் ஒன்றே எமக்கு இவ்விரு பாடங்களையும் கற்றுத்தரப் போதுமானது. எனவே, எம்மத்தியில் ஒற்றுமை, ஐக்கியம், புரிந்துணர்வு,
நல்லுறவு முதலான பண்புகளை வளர்ப்பதற்கு, ஹஜ்ஜுடைய காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முனைதல் வேண்டும். அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நலன்களுக்காக உழகை;கும் மனப்பாங்கை உருவாக்கவும் முயற்சி செய்தல் வேண்டும். உலமாக்கல், கதீப் மார்கள், தாஇகள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இக்காலத்தில் இவ்விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது கருத்து. ஆகவே ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாக திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக் கொள்ள திடசங்கற்பம் பூணுவோம், ஒற்றுமைப் படுவோம், அர்ப்பணத்துடன் செயற்படுவோம், வெற்றி நிச்சயம்.
‘ அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வின்உதவி மிக அண்மையில் இருக்கின்றது’ (ஸுரா – அல் பகரா: 214)
அஷ் ஷேய்க் அகார் முஹம்மது (நளீமி)