இஸ்லாமிய வங்கிகளை குறை கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதனை விட இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளிலேனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது சிறந்ததே!
கடந்த 2011 செப்டம்பர் மாதம் 9ம் திகதி தினகரன் பத்திரிகையில் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் சகோதரர் என்.பி. றியால்தீன் என்பவர் ‘வட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா?’ என்ற தலைப்பில் கட்டுரை வடிவிலான கேள்விகளை தொடுத்திருந்தார்.
எனவே, அவருடைய கேள்விகளுக்கான விடைகளையும் கட்டுரை வடிவிலே தொடுக்கலாமென நினைக்கின்றேன். ஏனெனில், சகோதரர் றியால்தீனைப் போன்ற இன்னும் எத்தனையோ சகோதர்களுக்கும் கூட இது பிரயோசனமாக அமையலாம்.
சகோதரனின் வினாக்களுக்கு விடை காண்பதற்கு முன்பதாக இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? அதன் அடிப்படைகள் என்ன? அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் தடைக்காரணிகள் போன்ற பொதுவான விடயங்களை நோக்குதல் அவசியமாகும்.
இங்கு முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறைமை அதாவது இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர்.
“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆத்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்”
Dr. Ziauddin Ahamed கூறுகின்றார்.
“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என டொக்டர் அஹமட் நஜ்ஜார் என்ற அறிஞர் கூறுகின்றார்.
மேற் குறித்த விளக்கங்களை வைத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கி முறைமை (Islamic Banking System) என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய மத்திய மயப்படுத்தப்பட்ட ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய அடிப்படைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்டதாகும்.
எனவேதான் இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உன்னத தன்மை வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் ஜிழிஷி PLS
(Profit and Lost Sharing என அடையாளப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் அடிப்படைகளை நாம் பின்வருமாறு நோக்கலாம்.
1. வட்டியிலிருந்து விடுபடல்
2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்ந்து கொள்ளல்
3. சூதாட்டத்தை நிராகரிக்கின்றது.
4. ஹராம் – ஹலால் பற்றி கவனத்திற் கொள்கின்றது.
5. ஸகாத் – இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்துகின்றது.
எனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களினை பின்பற்றியே செயற்பட வேண்டும். ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டினை அடியொட்டியதாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடானது ஏனைய பொருளியல் கோட்பாடுகளை போன்றல்லாமல் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும்.
இக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆன், அல்ஹதீஸ் என்பவற்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
இன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பது மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் இஸ்லாமிய வங்கியியல் எதிர்நோக்குகின்ற பாரியதொரு பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும் பிரதான காரணிகள் தடைக்காரணிகளாக காணப்படுகின்றன.
1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி காணப்படாமை.
2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது தலையீடுகளுக்கு, கட்டுப்பாடுகளிற்கு உட்படல்.
3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.
4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.
5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.
நமது நாடான இலங்கையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினராகக் கொண்ட நாடாகும். இங்கு முஸ்லிம்கள் 8 சதவீதத்தினரே வாழ்கின்றனர். எனினும் இஸ்லாமிய வங்கித்துறையை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டுள்ளதென கூறிக்கொள்ள முடியும்.
ஏனெனில் முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்டுள்ள நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 1988 ஆம் ஆண்டு வங்கியியல் சட்டமானது 2005 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் வர்த்தக வங்கிகளுக்கும், விசேட வங்கிகளுக்கும் ஷரீஆவினடிப்படையில் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
அதன் வெளிப்பாடுதான் இன்று இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளாகும். அது மட்டுமன்றி பாரம்பரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூட இன்று இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளை
(Islamic Banking Windows) உருவாக்கி தமது சேவைகளை இலங்கையின் பல பாகங்களிலும் விஸ்தரித்துள்ளது.
இனி சகோதரரின் வினாக்களிற்கான விடைகளை ஆராயலாம் என நினைக்கிறேன். அந்த அடிப்படையில் இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய வங்கிகள் ஹலால் ஹராம் பேணுதலுடையதா? இஸ்லாமிய ஷரீஆ விதிமுறைகளிற்கு உட்பட்டதா? என்ற சந்தேகம் சகோதரர் றியால்தீனைப் போன்ற எத்தனையோ சகோதரர்களின் உள்ளங்களில் ஊசலாடலாம்.
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் வட்டியுடன் கூடிய வங்கி முறையான பாரம்பரிய வங்கி முறையிலிருந்து விடுபட்டு இஸ்லாமிய வங்கி முறையினடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டுமென சிந்தித்த முஸ்லிம் அறிஞர்கள், உலமாக்கள் இஸ்லாமில் வங்கி முறையியலின் பக்கம் தமது கவனத்தை திருப்பி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்தவகையில் ஹராம் -ஹலாலினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு உட்பட்ட முறையில் செயற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வங்கிகளும், வங்கிப் பிரிவுகளும் தமது செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய தமக்கென தனித்தனியான ஷரீஆ சபைகளையும் உருவாக்கியுள்ளன.
அந்த ஷரீஆ சபைகளில் இலங்கையிலுள்ள கல்விமான்களும், பிரபலமான உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், மற்றும் சர்வதேச தரத்திலான ஷரீஆ சட்ட நிபுணர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கு உதாரணமாக அமானா வங்கியின் ஷரீஆ சபையின் தவிசாளராக பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நிதியியல் நிறுவனத்துக்கான கணக்கியல் மற்றும் கணக்காய்வு சபையின்
(AAOIFI) தவிசாளரும், நிறைவேற்று அதிகாரியுமான “மெளலானா முஹமட் தகி உஸ்மானி” செயற்படுவதனைக் குறிப்பிடலாம்.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு இஸ்லாமிய வங்கிகளும், வங்கிப்பிரிவுகளும் தத்தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவற்றில் ஏதாவது இஸ்லாமிய ஷரீஆவிற்கு முரணானது என கருதினால் அவற்றை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தினையும் ஷரீஆ சபைகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும் இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய பொருளியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் உள்ளடக்கி ஷரீஆவினடிப்படையிலமைந்த பின்வரும் முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும், வியாபார நடவடிக்கைகளையும், சேவைகளையும் மேற்கொள்கின்றன.
2. முஷாரகா: கூட்டுப் பங்குடமை
3. வீட்டு முஷாரகா முறைமை
4. முராபஹா: இலாபத்தை தெரியப்படுத்தி விற்றல்
5. முஸாவமா: சாதாரண வியாபாரம்
6. இஜாரா: வாடகைச் சேவை
7. வைப்புக்களை ஏற்றல்: ஆரம்ப வைப்பு, முதலீட்டு வைப்பு, வதீஆ வைப்பு
8. பைஉல் முஅஜ்ஜல்: தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை
9. ஸலம்: முற்பணக் கொடுப்பனவு வியாபாரம்.
10. ரஹ்ன்: அடகுச் சேவை
11. கர்ழ்: கடன் கொடுக்கல் வாங்கல்
மேலும் சகோதரர் கூறும்போது பாரம்பரிய வங்கிகளான அரச தனியார் வங்கிகளில் சிறுவர் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்தால் அவர்களுக்கு வருடா வருடம் வட்டிப்பணமும், உபயோகப் பொருட்களும் அனுப்பி வைப்பது நடைமுறையாகும், என்று கூறியிருந்தார். இந்த இடத்தில் நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் தாம் முஸ்லிமாகப் பிறந்து வட்டியுடன் இரண்டறக் கலந்து விட்டோம் என்பது மட்டுமல்லாமல் சின்னஞ் சிறு பிஞ்சு உள்ளங்களையும் உபயோகப் பொருட்களுக்காக ஏமாற்றமடைந்து வட்டியின் பக்கம் திசைதிருப்பிவிடக்கூடாது.
அவ்வாறு சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்து அவற்றில் முதலீடு செய்து அதிகம் இலாபமீட்ட வேண்டுமானால் அமானா வங்கியினது இமாத் சிறுவர் சேமிப்பு கணக்கு போன்ற கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
அத்துடன் பாரம்பரிய அரச, தனியார் வங்கிகளில் கட்டணங்கள், ஊழியர் வேதனம், நிர்வாக செலவினம், மற்றும் ஏனைய செலவினங்கள் அனைத்தும் வட்டிப் பணத்தினாலேயே, செயற்படுத்தப்படுகின்ற தென்றும், வட்டிப் பணம் இல்லையானால் வங்கிச் செயற்பாடுகளனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்து விடுமென்றும் சகோதரர் கூறினார்.
இவ்விடத்தில் நாம் முக்கியமானதொரு விடயத்தினை நோக்க வேண்டும். மேற் கூறப்பட்ட செலவீனங்கள், கட்டணங்கள் பாரம்பரிய வங்கிகளுக்கு மட்டுமா காணப்படுகிறது? ஏன் இவை இஸ்லாமிய வங்கிகளுக்கு இல்லையா? அவை அனைத்தும் இஸ்லாமிய வங்கிகளுக்கும் காணப்படவே செய்கின்றன.
எனினும் இஸ்லாமிய வங்கிகளில் ஏற்கனவே கூறப்பட்ட செயற்பாடுகளினால் பெறப்படுகின்ற இலாபங்களினாலும், சேவைக் கட்டணம் என அறவிடப்படுகின்ற கட்டணங்களாலும் அவை ஈடு செய்யப்படுகின்றன.
இஸ்லாமிய வங்கிகளில் வாடிக்கையாளரினால் வைப்புச் செய்யப்படும் பணம் பற்றியும், அப்பணத்திற்கான முதலீடு, மற்றும் அதனால் கிடைக்கும் இலாபம் யாருக்குரியது? என்பது பற்றியும் அவைகள் பற்றிய மார்க்க தீர்ப்பு என்ன? என்பது பற்றியும் சகோதரர் வினவியிருந்தார்.
ஒரு வாடிக்கையாளர் இஸ்லாமிய வங்கியில் வைப்புகளை அல்லது முதலீடுளை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கூறப்பட்ட ஷரீஆ அனுமதித்த கொடுக்கல் வாங்கல்களினடிப்படையிலே தெளிவான முறையில் மேற்கொள்வார்.
அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளும் போது இணங்கிக் கொண்ட வங்கி செயற்பாட்டு நடவடிக்கைகளின் தன்மை, மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இலாபம் பகிரப்படும். அதேபோன்று சில கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நட்டமும் பங்கிடப்படும். எனினும் இந்நடவடிக்கைகளின் போது இஸ்லாமிய ஷரீஆ பின்பற்றப்பட வேண்டும்.
உ+ம்: மதுபான உற்பத்திசாலையில் பணத்தை முதலீடு செய்ய முடியாது. அதேபோன்று விபசார விடுதிக்காக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு விட முடியாது.
மேலும் முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களுக்குட்பட்ட விதிமுறைகள் உள்ள ரிசீகிகளை நாடமாட்டார்கள் என்று சகோதரர் கூறியிருந்தார்.
ஏன் இல்லை? ஏனைய நாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய வங்கிகளில் நம்பிக்கையுடன் கூடிய நன்நடத்தை மிக்க வாடிக்கையாளர்களாக காணப்படுவது மாத்திரமன்றி, இஸ்லாமிய ஷரீஆவினடிப்படையில் செயற்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தலைசிறந்த ஊழியர்களாகவும் விளங்குகின்றனர்.
இவற்றையெல்லாம் நாம் நோக்குகின்ற பொழுது இஸ்லாமிய வங்கியினால் இலாபமடைவது யார்? என்ற சகோதரின் வினாவிற்கு சுலபமாக விடை காண முடியும். இங்கு வங்கி, வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்பினருமே இலாபமடைகின்றனர். பயனடைகின்றனர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் இன்று இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளின் நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அதேவேளை வாடிக்கையாளர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இஸ்லாமிய வங்கிகளின் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இலாபமீட்டுதல், பணம் சம்பாதித்தல் என்பதைவிட சேவை வழங்குதல் என்பதே முதன்மை பெற்று விளங்குவதை காணமுடியும். இங்கு இஸ்லாமிய வங்கிகளின் ஸ்திரத்தன்மை முஸ்லிம் சமூகத்தில் தங்கியுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் கொடுக்கல் வாங்கலடிப்படையிலான இயக்கப்பாடு இஸ்லாமிய வங்கிகளிலும் தங்கியுள்ளது.
எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் வாழ்பவர் களாயின் அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களையும், பொருZட்டல் நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களும் இஸ்லாமிய வங்கிகளினூடாக தமது செயற் பாடுகளை முன்னெடுத்துச் செல்லலாம்.
மாறாக இஸ்லாமிய வங்கிகளை குறை கூறி, கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதனைவிட இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகள், வங்கிப் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் மேலானதே, என்றாலும் நான் ஏற்கனவே கூறியதைப் போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் மட்டுமன்றி சவால்களும் காணப்படவே செய்கின்றன.
அந்த வகையில் முஸ்லிம்களை 8 வீதமாகக் கெண்ட எமது இலங்கையும் இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. எனவே அல்குர்ஆனும், அல் ஹதீஸ¤ம் வன்மையாகக் கண்டிக்கும் வட்டியிலிருந்தும் அல்லாஹ் என்னையும் உங்களையும் காப்பாற்றி இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களையும் பொருZட்டல்களையும் மேற்கொள்ள உதவி புரிவானாக!