Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

22 September 2014

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு:

(1)
 அமைதி, சமாதானம்
(2) ஓரே இறைவனுக்கு முழுமையாக அடிபணிதல்

அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவன் இட்ட கட்டளைகளுக்கு முழுமையாக அடிப்பணிந்து ஒருவன் வாழும்பொழுது அவன் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னுள்ள நிரந்தரமான வாழ்க்கையிலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறான்.
மேலும் இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதமல்ல. இறைவனால் வகுத்து தரப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். ஏன் என்றால் மற்ற மதங்களை போல் இஸ்லாம் வெறுமனே வெறும் வணக்கத்தை மட்டும் மக்களுக்கு போதிக்கவில்லை. இறைவணக்கம், குடும்பவாழ்க்கை, பொருளீட்டல்,  அரசியல், சமூகவாழ்க்கை, தனிமனித ஒழுக்கங்கள் என்று ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவையெல்லாம் அவன் வாழ்க்கையில் சம்பந்தப்படுமோ அவை எல்லாவற்றையும் பற்றி இஸ்லாம் கற்று தந்துள்ளது.

முஸ்லிம்கள் என்றால் யார்?
உலக சனத்தொகையில் ஏறக்குறைய 150 கோடி மக்களாக அதாவது 23% ஆக வாழும் முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். அதாவது அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டும் வணங்கக்கூடியவர்கள். நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லாம் அவர்களை இறைவனின் தூதராக ஏற்று அவர்களை தன் வாழ்க்கையின் முன் மாதிரியாக கொண்டு அவர்களை பின்பற்றி வாழ்பவர்கள்.
முஸ்லிம் சனத்தொகை புள்ளிவிபரம் மொத்த முஸ்லிம் சனத்தொகை –  ஏறக்குறைய 150கோடியிலிருந்து 157 கோடி வரை (estimated)
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு – இந்தோனேசியா –  ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம்கள்
இஸ்லாத்தின் அடிப்படை

“லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்”
வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள் என்பது இந்த இஸ்லாமிய மூல மந்திரத்தின் பொருளாகும்.
இதன் படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டுமே வணங்க வேண்டும். முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களை அல்லாஹ்வின் திருதூதராக ஏற்று அவர்களின் வாழ்வை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும். உலகிலுள்ள சர்வ உறவுகளை விடவும் பொருட்களை விடவும் எல்லாவற்றை விடவும் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களையும் தம் உயிரை விடவும் நேசிக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்.
இதை விட ஒரு முஸ்லிம் உலகம் படைக்கப்பட்டதில் இருந்து இறுதி இறைதூதராக வந்த நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களது காலம் வரை இவ்வுலகிற்கு வந்த அத்தனை இறைதூதர்களையும் ஏற்று நம்பிக்கை கொள்ளவேண்டும். எனவே தான் இறைதூதர்கள் ஆதம், நோவா, ஆப்ரஹாம், மோசஸ், தாவீது, இயேசு (அல்லாஹ்வினது சாந்தியும் சமாதானமும் இவர்கள் அனைவர் பேரிலும் ஏற்படுமாக) போன்ற அனைத்து இறைத்தூதர்களையும் முஸ்லிம்கள் இறைத்தூதர்களாக விசுவாசம் கொண்டு அவர்களை கண்ணியப்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களால் இறைவன் என்றும் இறைவனின் குமாரன் என்றும் சொல்லப்படும் இயேசு கிறிஸ்து (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் பேரில் ஏற்படுமாக) உண்மையில் இஸ்லாத்தின் ஒரு இறைதூதரே அன்றி வேறில்லை.
ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?

ஒவ்வொரு முஸ்லிமும் கீழே சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் உள்ளத்தால் பரிபூரணமாக ஏற்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒரு விடயத்தையாவது ஒருவன் நம்பவில்லை என்றால் அவன் முஸ்லிமாக கருதப்படமாட்டான்.
(1) அல்லாஹ்வை நம்ப வேண்டும்
(2) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மலக்குமார்களை (வானவர்களை ) நம்பவேண்டும்
(3) அல்லாஹ் அருளிய வேதங்களை நம்ப வேண்டும்
(4) அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பிய திருத்தூதர்களை நம்பவேண்டும்
(5) இறுதி நாளை நம்ப வேண்டும் – அதாவது ஒரு நாள் இவ்வுலகம் அழிந்து மனிதர்கள் யாவரும் மரணித்து     மீண்டும் அல்லாஹ்வினால் மறுமை நாளில் எழுப்பப்பட்டு அவர்கள் செய்த நன்மை தீமைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு சுவர்க்கம் நரகம் செல்வர் என்பதை நம்ப வேண்டும்

(6) நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது என்பதை நம்பவேண்டும்.
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் என்ன?ஒருவன் முஸ்லிமாக இருந்தால் அவன் மீது பின்வருவன கடமையாகிறது.
(1) கலிமா/ஈமான் (இறை நம்பிக்கை)
(2) தொழுகை (தினமும் ஐவேளை இறைவனை தொழ வேண்டும்)
(3) நோன்பு (வருடத்தில் ஒரு மாதம் (ரமழான்) நோன்பு நோற்க வேண்டும்)
(4) ஸக்காத் (ஒவ்வொரு வருடமும் செல்வந்தர்கள் தம் செல்வத்தில் குறிப்பிட்ட வீதத்தை இறை வரி கொடுக்க வேண்டும்))
(5) ஹஜ் (உடல், பொருள் வசதி உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது புனித மக்காவிற்கு சென்று இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்)
ஒருவர் முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?ஒருவர் முஸ்லிமாக மாற நாட்டம் கொண்டால் அவர் இஸ்லாமிய மூல மந்திரமான கலிமாவாகிய
“லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்”
“வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள். “
என்பதை உள்ளத்தால் உறுதிப்பூண்டு நாவினால் சொல்லவேண்டும். பின்னர் குளித்து சுத்தமாகி அன்றைய நேரத்திலுள்ள தொழுகையை தொழ வேண்டும். பின்னர் இஸ்லாமிய மார்க்க சட்டத்திட்டங்களை மார்க்க ஆலிம்களிடம் கற்றுகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  என்பவர்கள் யார்?அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களை நேரான வழியில் நடாத்த காலத்துக்கு காலம்  திருத்தூதர்களை (நபிமார்களை) அனுப்பி வைத்தான். இந்த திருத்தூதர்களை மனித இனத்தில் இருந்தே உருவாக்கி அவர்களை அச்சமுதாய மக்களிடம் அனுப்பி அவர்களுக்கு எது சரி, எது பிழை என்பதை கற்றுக்கொடுத்தான். அவ்வாறு அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆவார்கள்.
ஆனால் அண்ட சராசரங்களையும் படைக்கும் முன்னர் முதன் முதலாக அல்லாஹ் படைத்தது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியையாகும் (நூரே முஹம்மதியா).  அவர்களின் ஒளியை கொண்டே அல்லாஹ் சர்வ வஸ்துக்களையும் படைத்தான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் ஒளியினாலானவன். அனைத்தும் என் ஒளியினாலானவைகளே”
(நூல்: தாரமி)
இவ்வாறு சர்வ வஸ்துக்களையும் படைத்த பின் முதல் மனிதராக அல்லாஹ் படைத்தது இறைத்தூதர் ஆதம் அலைஹிவசல்லம் அவர்களையாகும். அவர்களின் உடலுக்குள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியான நூரே முஹம்மதியாவை செலுத்தினான். பின்னர் அந்த ஒளி ஆதம் அலைஹிவசல்லம் அவர்களின் முதுகந்தண்டில் இருந்து பரிசுத்தமான முதுகந்தண்டுகளுக்கு மாறி கொண்டே வந்து இறுதியாக புனித மக்கமா நகரில் வாழ்ந்து வந்த அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு  என்பவரின் முதுகந்தண்டில் இருந்து அவரது மனைவி அன்னை ஆமினாவின் வயிற்றுக்கு மாறி பின்னர் இப்பூவுலகத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாக பிறந்தது.
பிறப்பதற்கு முன் தந்தையையும் ஆறாவது வயதில் தாயையும் இழந்த நாயகமவர்கள் பாட்டனாரின் வளர்ப்பிலும் பின்னர் சிறிய தந்தையாரின் வளர்ப்பிலும் வளர்ந்து வந்தார்கள். சிறு வயதில் இருந்து அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் மிக ஒழுக்கத்தோடும் நட்குணத்தோடும் வாழ்ந்த நாயகமவர்கள் எல்லோராலும் நம்பிக்கையாளர் என்றும் உண்மையாளார்  என்றும் போற்றப்பட்டார்கள். தங்களது நாற்பதாவது வயதில் அல்லாஹ்விடமிருந்து வானவர் ஜிப்ரீல் மூலமாக வஹி என்னும் இறைத்தூது வந்தது. உலக மக்களுக்கு தாம் இறுதி இறைத்தூதராக வந்திருப்பதை அறிவிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். 23 வருடங்கள் இறைசெய்தியை மக்களுக்கு எத்தி வைத்து இலட்சக்கணக்கான மக்களை இஸ்லாத்தில் இணைத்து ஒரே நாயனான அல்லாஹ்வை வணங்கவும் ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுகொடுத்து பரிசுத்தவான்களாக மாற்றினர். தமது 63வது வயதில் மதீனாவில் வைத்து  இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்.
முஸ்லிம்கள் எதனை பின்பற்ற வேண்டும்?முஸ்லிம்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதமான அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் பின்பற்றுகின்றனர். மேலும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களையும், தோழர்களான ஸஹாபாக்களையும் பின்பற்றுகின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
“நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் திட்டமாக வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது வழிமுறை.”   (நூல் – முஅத்தா)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
“நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது குடும்பத்தார்கள்”  (நூல் – முஸ்லிம், திர்மிதி, மிஷ்காத், முஸ்னத் அஹ்மத்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
“எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். அவர்களில் எவரை பின்பற்றினாலும் நீங்கள் நேர் வழி பெறுவீர்கள்”       (நூல் – மிஷ்காத்)
அல் குர்ஆன் என்றால் என்ன?அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வினால் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறை வசனங்களாகும். இதில் இறைவனின் வல்லமைகள், மனிதகளுக்கான ஏவல்கள், விலக்கல்கள், முந்தைய சமூகங்களின் வரலாறு, இன்னும் பல விசயங்கள் காணப்படுகின்றன. இதுவே முஸ்லிம்களின் புனித நூலாகும். ஏனெனில் இது அல்லாஹ்வின் சொல்லாகும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முஸ்லிமல்லாதோருக்கும்  நேர் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த இறை வசனங்கள் இறங்கியபோது அவை ஒவ்வொன்றும் அவ்வப்போது குறித்து வைத்து கொள்ளப்பட்டது. மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்களால் மனனம் செய்துகொள்ளப்பட்டது. பின்னர் இது நூல் வடிவில் உருவாக்கப்பட்டது. எனவே  இதில் ஏனைய மதங்களின்  புனித நூற்களை போல் எந்த ஒரு மனிதனின் சொற்களோ எண்ணங்களோ உட்புகுத்தப்படவில்லை. நூற்றுக்கு நூறு வீதம் பரிசுத்த இறை வசனங்கள் மட்டுமே உள்ளது. மேலும் சில மதத்தினரின் புனித நூற்களை போல காலத்துக்கு காலம் இது மாறுவதும் இல்லை. ஏறக்குறைய  1400 வருடங்களாக ஒரே அல் குர்ஆனையே முழு இஸ்லாமிய உலகும் பயன்படுத்துகிறது. அல்லாஹ் அதனை இறுதி நாள் வரையில் பாதுகாத்து வருகிறான்.
அல் ஹதீஸ் என்றால் என்ன?
அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சொன்னவை, செய்தவை, மற்றவர்கள் செய்யும்போது அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.
இவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களாலும், தோழர்களான சஹாபாக்களாலும் குறித்து வைக்கப்பட்டும் மனனம் செய்யப்பட்டும் பாதுக்காக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த இமாம்களால் இவை நூல் வடிவில் தொகுக்கப்பட்டது. இந்த நூல்களில் மிக ஆதாரப்பூர்வமானவை புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி என்பவையாகும்.
அஹ்லுல் பைத் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தினர்) என்றால் யார்?
அஹ்லுல் பைத் என்னும் குடும்பத்தார்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவசல்லம் அவர்களின் மகள் ஸைய்யதா பாத்திமா, மருகர் ஸைய்யதுனா அலி, பேரப்பிள்ளைகளான ஸைய்யதுனா ஹசன், ஸைய்யதுனா ஹுசைன் (இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக) ஆகியோரையும் இவர்களின் பரம்பரையில் வந்துதித்தவர்களையும் குறிக்கும்.
ஸஹாபாக்கள் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்கள்) என்றால் யார்?
ஸஹாபாக்கள் என்னும் தோழர்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்களை நேரடியான கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்கும்.
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் எவை?
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் என்பது முஸ்லிம்கள் மார்க்கம் சம்பந்தமான சட்டத்திட்டங்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை ஆதாரங்களை குறிக்கும். இவையாவன:
(1) அல் குர்ஆன் – அல்லாஹ்வின் இறைவசனங்கள்.
(2) அல் ஹதீஸ் – நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சொல், செயல்,  அங்கீகாரம்.
(3) இஜ்மாஹ் – இஸ்லாமிய மார்க்க பேரறிஞர்களின் பத்வா என்னும் மார்க்கதீர்ப்பு.
(4) கியாஸ் - 
இஸ்லாமிய மார்க்க பேரறிஞர்களின் பத்வா என்னும் மார்க்கதீர்ப்பு.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX