நாம் வாழும் தற்கால உலகில் இன்றியமையாத செல்வமாக திகழ்வது கல்விச்செல்வம் ஒன்று மாத்திரமே.இந்நவீன உலகில் அனைத்து சமூக மக்களும் தாம் விரும்பிய கல்வியை தேடிச்சென்று கற்றுகொள்கிறார்கள்.கல்வியின் சிறப்பையும் அதன் தேவையையும் அனைத்து சமூகங்களும் இன்று உணர்ந்துள்ளன. தொழில் நுட்பக்கல்வி பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village)மாற்றியுள்ளது. இதனால் தான் இன்றைய டிஜிடல் உலகில் கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.
இதனால் தான் இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்று கூறியிருக்கிறது.
தேனின் சுவை அதனை சுவைத்துப் பார்த்தவனுக்குத் தான் தெரியும் என்பார்கள், அது போலவே கல்வியின் சிறப்பும் அதன் மகிமையும் கற்றவனுக்கே நன்கு புரியும்.
கல்வியின் சிறப்புமற்றும் முக்கியத்துவம் பற்றி நோக்குவோமாயின் கற்றவன் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. கற்றவன் தான் ஊரையும் நாட்டையும் விட்டு வெளியில் சென்று பார்த்தாலும் அவனுக்கு தனது சொந்த இடத்தில் கிடைக்கின்ற மதிப்பும் அந்தஸ்த்தும் வழங்கப்படுகிறது.கற்றவன் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், சமூகத்தோடு ஒன்றித்து வாழ்வதையே விரும்புகிறான். மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் போன்று ஆகிவிடுகிறான்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
“அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்”.(அல்குர்ஆன்: 39:9)
“அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்”.(அல்குர்ஆன்: 39:9)
“குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!”(அல்குர்ஆன்: 6:50)
அறிந்தவர்களும்,அறியாதவர்களும் சமமாவார்களா ? என்றும் குருடனும்,பார்வையுள்ளவனும் சமமாவார்களா? என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் ரத்தினச் சுருக்கமாக உலகத்தில் வாழும் எல்லா சமூகங்களுக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமானதாகக் கல்வியைப் பற்றி கூறுகின்றான்.
இதே பொருள்பட திருவள்ளுவரும் கல்வியின் சிறப்பு பற்றி இவ்வாறு வர்ணித்திருக்கிறார்.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்”
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்”
கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது அவனுக்கு எவ்வளவு பிரதானமோ அது போல தான் கல்வியும் முக்கியமானது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது. அது போல தான் கற்காதவர்கள் கண் இருந்தும் குருடர்கள் போல ஆவார்கள் என்கிறது இக்குறல்.
அனைத்து மதங்களும் கல்வி, அறிவை தேடி பெற்றுக்கொள்ளுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இங்கு காணக்கூடியதாகவுள்ளது.
“கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை”
மேற்கூரிய வாசகத்தை ஆராயும் போது கற்றவனின் சிறப்பை கணலாம். என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற, கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை அழியாமல் இருந்தே தீரும்.
இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனகூறப்படுகிறது.
இதற்கு அழகிய உதாரணம் 1450 வருடங்களுக்கு முன் எமதருமை நபி(ஸல்) அவர்கள் கற்பித்த இறை வேதம் “அல் குர்ஆன்” இன்று வரை, இறுதி மனிதன் இவ்வுலகில் இருக்கும் வரை நடைமுறைப் படுத்தப் படுத்தப்படும். இதனைச் சுமந்து வந்த மாநபி (ஸல்)எம்மோடு இல்லை என்றாலும். அவர் கற்பித்தவை “அல் குர்ஆன், சுன்னா” வடிவில் இன்றும் எம்மத்தியில் காணப்படுவதைஅவதானிக்கலாம்.
சிறந்த கல்வி எம்மை சிறந்த மனிதனாக்குகிறது, சிறந்த முறையில் வாழக்கூடிய பண்புகளை கற்றுத் தருகிறது, நீதியாகவும் நேர்மையாகவும் நடக்க உதவுகிறது, உண்மையான உழைப்பிற்கு வழி காட்டுகிற்து, சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்க கற்ற கல்வியே துணை புரிகிறது.
இப்பூவுலகின் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன வென்று இனங்கண்டு அதற்கேற்ப ஈருலக கல்வியையும் தேடிச்சென்று கற்க வேண்டும்.
ஒரு மெழுகுதிரியின் சுடர் கொண்டு ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏறிய வைத்து ஒளி எழுப்பவில்லையா? அதுபோலத்தான் ஒரு சிறந்த கல்விமான் போதும் இவ்வுலகில் (எம் நாட்டில், எம் ஊரில்) ஆயிரம் ஆயிரம் கல்விமான்களை உருவாக்க. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இஸ்லாம் என்ன கூறுகிறது? கற்பவனாக இரு, அல்லது கற்ற்பிப்பவனாக இரு, அல்லது இரு சாராருக்கும் உதவக்கூடியவனாக இரு, நான்காம் ஆள் ஆகிவிடாதே என்று வலியுருத்துகிறதல்லவா? இவ் பொன்மொழியை நம் உள்ளத்தில் கொண்டு இறுதி வரை கற்பவகளாகவும், கற்ற்பிப்பவவர்களாகவும், கல்விக்கு உதவக்கூடியவர்களாகவும் எம்மை சீரமைத்துக் கொள்வோமாக!
அறிவியலும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத கருவியாகும். சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், விழுமியங்களின் விருத்திக்கும் ஊன்றுகோலாக திகழ்வது அறிவியலும் அதன் வழிகாட்டலும் தான். ஒரு சமூக வளர்ச்சிக்கு அதன் ஒவ்வொரு பிரஜையினதும் பங்களிப்பு அவசியமிக்கது. எனவே செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற்று ஒவ்வொரு பிரஜையும் சமூக அந்தஸ்துள்ள பிரஜையாக வாழ திடசங்கற்பம் பூணுவோமாக.