இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. 17 நாட்கள் இந்த தேடல் தொடர்ந்தது. முதன் முதலில் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைகோள் படம் பிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் அந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. சீனா மற்றும் பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள்களும் அப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீன விமானப்படையின் விமானம் இல்யூஷின்-76 தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான பொருளை கண்பிடித்துள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சிங்குவா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ஆழ்ந்த துயரத்துடன் இந்த தகவலை அறிவிப்பதாக குறிப்பிட்டார். "இன்மர்சாட் என்ற இங்கிலாந்து செயற்கை கோள் நிறுவனம் அளித்த தகவலின்படி கடைசியாக அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலின் மத்திய பகுதிக்கு மேல் பறந்தபோது கடலுக்குள் விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்," என்றார் ரசாக். அவர் மேலும் கூறுகையில், "அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகாயத்தில் பறந்த அந்த விமானம் அதன் பிறகு கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. விமானங்கள் இறங்கும் வசதி உள்ள இடங்களுக்கு வெகு தொலைவான இடத்தில் விமானம் விழுந்து இருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார். மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்த அவர், விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரின் மன உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளும்படி செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கடந்த சில வாரங்களாக மனம் உடைந்த நிலையில் உள்ள அவர்களுக்கு இந்த தகவல் மேலும் மோசமானதாக அமையும் என்றும் ரசாக் குறிப்பிட்டார். கடலில் விமானம் விழுந்து பயணிகள் மொத்தமாக இறந்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு மலேசிய அரசு வந்துவிட்டதால் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.