
hakeemஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எனக்கும் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், இருவருக்கும் இடையே பிளவு இல்லை என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து பேசுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஜனாதிபதியுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் விவாதத்தில் ஈடுபட்டபோது, ஜனாதிபதி அவரது குரலை உயர்த்தி சத்தமாக பேசினார்.
எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எந்தப் பிரச்சினையென்றாலும், வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். சில நேரங்களில் ஜனாதிபதி நிதானத்தை இழந்து பேசுகிறார், எனினும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
இவ்வாறான விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கின்றன. சில ஊடகங்கள் வரம்பை மீறி இவ்விடயங்களை பெரிதாக்கி விடுகின்றன. இவ்வாறான விடயங்களால் நான் கலங்கியது இல்லை. மேலும், இலங்கை சட்ட கல்லூரி விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் செய்ய கூட முயற்சிகள் உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை சட்ட கல்லூரி விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.-T