Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

10 September 2014

இன்றைய இளைஞர் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றதா..?

இளமை காலம் அல்லது வாலிப காலம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பருவமாகும். இளம் பருவத்தின் முக்கியத்துவத்தினை குறித்து எமது மார்க்கம் வெகுவாக பேசியுள்ளது. “வாலிபத்தில் சரித்திரம் படைத்தால் கப்ருக்கு செல்லும் போதும் சரித்திரம் படைத்த சாதனையாளராகவே செல்லலாம்”. மேலும் ஆரம்ப கால இஸ்லாமிய உலகின்; வரலாற்றை உற்று நோக்கும் போது மார்க்க, சமூக நடப்பு, கலை கலாசார, தொழில்நுட்ப ஆய்வு ரீதியிலான அக்கால இளைஞர்களின் செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைத்த வரலாற்று அர்பணிப்புக்கு பங்களிப்பு செலுத்தியமையை அறிய முடிகின்றது.
உலகுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் அவர்களது வாலிபத்தை மிகவும் சிறப்பாக கழித்தார்கள், அத்தனை பேரும் வாலிபத்தில் சரித்திரம் பாடைத்தவர்கள் என்பது அவர்களது வரலாற்று சான்றுகள் நின்று சான்றுபகர்கின்றன.
ஸஹாபாக்களின் வரலாற்றை பார்க்கும் போது, நபி (ஸல்) அவர்கள் வாலிபர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள், வாலிபர்களும் இஸ்லாத்தின் வெற்றியில் பங்கெடுத்தார்கள் என்பது புலனாகின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது மார்க்க பிரச்சாரத்தை ஆரம்பித்த போது இஸ்லாத்த்தின் பால் அதிகம் கவரப்பட்டார்கள் இளைஞர்களே.  நபித்துவத்தின் பின்பும் இளைஞர்கள் இஸ்லாத்தின் வெற்றியில் அதிகம் பங்கெடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ராத்துக்கு முன்னர் மதீனாவை உருவாக்க, மதீனாவுக்கு அனுப்பிய தூதுவர் வெறும் 21 வயதேயான முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) எனும் வாலிபரே. மக்கhவுடைய வெற்றியின் போது மக்கhவுடைய ஆளுனராக 21 வயதை உடைய ஒரு சஹாபியை தான் நபி(ஸல்) அவர்கள் நியமித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி காலகட்டத்தில் ரோமுக்கு அனுப்பிய குழுவின் தலைமை பொறுப்பை வழங்கி, இஸ்லாத்தினது கோடியை கொடுத்தது 17 வயதை உடைய உசாமத் இப்ன் சைத்(ரலி) அவர்களுக்கே.
பிற்பட்ட இஸ்லாமிய உலகின் வரலாற்றை பார்க்கின்ற போதும் வாலிப சமூகம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பல பங்களிப்புகளை நல்கியுள்ளதை அறிந்து கொள்ளலாம். பதினேழு வயதேயான தாரிக் பின் சியாத் அவர்கள் ஸ்பானிய சாம்ராஜ்யத்தினை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த எழுச்சி மிக்க வரலாறு இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சிக்கு வாலிபத்தின் அளப்பரிய அற்பணிப்பை கோடிட்டுக்காட்டுகிறது. முஹம்மது பின் காசிம் தன இருபதாம் வயதில், சிந்து (இன்றைய இந்திய, பாகிஸ்தான்) பிரதேசத்தினை கைப்பற்றி இஸ்லாமிய ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தார். இது மட்டுமல்லாது இன்னும் பல துறை களில் முஸ்லிம் இளைஞர்களது அளப்பரிய பங்களிப்புக்கள் ஏராளம்.
“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இன்றைய தலைவர்களும் கூட. இதை தான் எமது வரலாறு காட்டுகின்றது. நபி((ஸல்)) அவர்கள் பொறுப்புகளை இளைஞர் சமூகத்திடம் ஒப்படைத்து அவர்களது  ஆற்றலை பயன்படுத்தி காட்டி இருக்கிறார்கள். அதற்கு மேலே கூறப்பட்டவைகள் சில ஆதாரங்களாகும்.
ஆனால் இன்று ஊர் தலைமைகள் இளைஞர்களை பொது பணிகளில் பாரியளவில் இணைத்து கொள்வதில்லை என்ற குற்றச் சாட்டு காணப்படுகின்றது. தன்நம்பிக்கையை முதலீடாக கொண்டு இயங்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் எம் மத்தியில் இலை மறைக்காயாகவாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஆற்றலை பரீட்ச்சித்துப் பார்க்க தகுந்த களம் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்ற சந்தர்பங்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றது. வெறுமனே அனுபவம் மாத்திரம் யாவற்றையும் சாதிக்கும் ஆயுதம் ஆகி விட முடியாது. மாற்றமாக இளைஞர்களின் துடிப்பும் சில வேளை இலக்குகளை அடைய நகரும் வில்லாக இருக்கலாம். ஆகவே நாமும் எமது வாலிப சமூகத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களது ஆற்றலை, திறமைகளை பயன்படுத்த சந்தர்ப்பங்களை உருவாக்க முன்வர  வேண்டும். ஊர் தலைவர்கள் இளைஞர்களை நல்ல முறையில் நெறிப்படுத்த வேண்டும் , அவர்களுக்கும் ஊரின் சில  பொறுப்புக்களை வழங்க முன்வர வேண்டும். மிம்பர் மேடைகளும் இளைஞர்களை நெறிப்படுத்துவதில் பங்களிப்பு செய்ய வேண்டியது காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளது. சமூக விடயங்களில் இலைஞர்களை முன்னிலைப் படுத்துவதால் சிறந்ததோர் எதிர்கால சமூகத்தை கட்டி எழுப்பலாம்.
இளைஞர்களும் நல்ல பண்பாடுகள் , குணம், அஃலாக் உடையவர்களாக வாழ வேண்டும். வாலிபர்களும் சமூக வேலைகளில் ஈடுப்பாடு காட்ட வேண்டும். ஊரினது எந்த வேலைகளும் முன்னிற்க வேண்டும். மேலும் மார்க்க, கலாசார, சமூக நடப்பு, கல்வி, தொழில்நுட்ப விடயங்களில் தம்மை அர்பணிக்க தயாராக வேண்டும்.
முன்மாதிரியான சமூகமாக வாலிப சமூகம் இருக்க வேண்டும். ஆனால் சம கால இளைஞர் சமூகத்தை பார்க்கும் போது, எமது நிலைமை கவலைக் கிடமாகவே உள்ளது. அதிகமான இளைஞர்கள் தமது வாலிபத்தை வீண் வேடிக்கைகளில் செலவழிப்பது கண்கூடு. மாற்றங்களை காணத் துடிக்கும் சமுதாயத்தின் எழுச்சி, வேர் விட்டு வளர வேண்டிய சமூகத்தின் இளம் வித்துக்களின் கரம்களில் மாத்திரம் தங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது என் நம்பிக்கை. ஓர் இளைஞன் என்ற ரீதியில்…..!

Popular Posts

FACEBOOK COMMENTS BOX